Saturday 23 August 2014

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பகுதி:

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பகுதி: 1.....
23-Aug-2014
 

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பகுதி: 1.....

29.08.2014 அன்று விநாயகர் சதுர்த்தி     தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள, ஒரு திருக்கோயிலில், "பிரளயம் காத்த விநாயகர்" என்ற நாமத்துடன் விநாயகப் பெருமான் இருக்கிறார். இவருக்கு விநாயகர் சதுர்த்தி அன்றுமட்டும், மாலையில் தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அபிஷேகம் மறுநாள் அதிகாலைவரை நடைபெறும்.

இப்படி விடியவிடிய தேனால் அபிஷேகம் செய்தாலும் அத்தனை தேனும் சிறுதுளிக் கூட தரையில் விழாமல் அத்தனை தேனையும் அவர் தனக்குள்ளே ஐக்கியபடுத்திக்கொள்கிறார். இதை காணும் போது என்றென்றும் பிள்ளையார் நம் வீட்டு பிள்ளைபோன்று, நம்முடன் எப்போதும் இருக்கிறார். நம்மை காக்க அவர் இந்த பூமியிலேயே வாசம் செய்கிறார் என்று உறுதியாகிறது.

விநாயகர் உருவான கதை! "

அன்னை பராசக்தியான பார்வதிதேவி, தன் கணவரான சிவபெருமானுக்கு, பிள்ளையை போல் அன்பு கொண்டு காவலாக நந்தியம் பெருமான் இருப்பதை போல, தனக்கும் காவலாக அன்பான ஒரு பிள்ளை வேண்டும் என விருப்பம் கொண்டு, மஞ்சளில் ஒரு உருவத்தை உருவாக்கி விநாயகர் என்று பெயர் வைத்தார். அதனால்தான் இன்றுவரை மக்கள், எந்த சுபநிகழ்ச்சிகள் செய்வதாக இருந்தாலும், அன்னை  பார்வதிதேவி செய்தது போன்று முதலில் மஞ்சளில் பிள்ளையாரை உருவாக்கும் வழக்கம் இருக்கிறது." இவ்வாறு விநாயகர் எப்படி தோன்றினார் என்கிற  சம்பவத்தை சொல்கிறது  "மத்ஸ்ய புராணம்".

அனலாசுரனை அழித்த விநாயகர்!

யமதர்மராஜனின் மகன் அனலாசுரன். இவனிடம் எதிர்ப்பட்டால் அவர்களை விழுங்கிவிடுவான். அவன் அருகில் யார் சென்றாலும் பஸ்பம்தான். இதனால் தேவர்கள் முதல் முனிவர்கள்வரை, இந்த அசுரனால் நடுங்கி போய் இருந்தார்கள். யமனே கூட தன் மகன் அனலாசுரனை கண்டு பயந்து நடுங்குவார். "இனியும் அமைதியாக இருந்தால் உலகத்தில் யாருமே இல்லாமல் செய்துவிடுவான் அனலாசுரன்." என்பதை உணர்ந்து, முனிவர்கள் பலர் விநாயகரிடம் முறையிட்டார்கள்.

விநாயகர், பிராமணர் உருவத்தில் அனலாசுரன் முன்பாக வந்து நின்றார். அனலாசுரன் மிகுந்த ஆத்திரம் அடைந்தான். "எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை பார்த்து பயப்படாமல் என் முன்னே வீரனாக நிற்பாய்.?" என்று கூறி கொண்டே பிரமாண உருவில் இருந்த விநாயகரை நெருங்கினான் அனலாசுரன். "உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால், நீ என் எதிரில் இப்படி ஆணவமாக பேசுவாய்.?" என்று கூறி கொண்டே, அனலாசுரனை அலேக்காக தூக்கி லட்டை விழுங்குவது போல அனலாசுரனை விழுங்கினார் கணபதி.

அடுத்த நொடியே விக்னேஷ்வரரின் வயிற்றுக்குள் தீ வைத்தது போல் எரிய ஆரம்பித்தது. இதனை தாங்க முடியாமல் விநாயகர் துடித்தார். பிள்ளையாரின் வேதனையை கண்ட சந்திரன், விநாயகரின் சிரசின் மீது குளிர்ந்த கிரணங்களை பொழிந்தார். வருணதேவன், குளிர்ச்சியான நீரால் அபிஷேகம் செய்தார்.

இப்படியே பல தேவர்களும், தெய்வங்களும் அவரவருக்கு தெரிந்ததையெல்லாம் செய்தார்கள். என்ன செய்தும் விநாயகரின் உடல் உஷ்ணம் குறையவில்லை. அந்த நேரத்தில் முனிவர்கள் பலர் 21 அறுகம்புல்லை ஒன்றாக சேர்த்து, விநாயகரின் உடலை தடவி கொடுத்தார்கள். சில விநாடிகளில் கணபதியின் உஷ்ணம் குறைந்தது.

இந்த சம்பவத்தின் பிறகுதான், "தம்மை 21 அறுகம்புல்லால் யார் அர்ச்சிக்கிறார்களோ, அல்லது யார் தமக்கு அருகம்புல்லை சமர்ப்பிக்கிறார்களோ அவர்களுக்கு என் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்." என்றார் விநாயகப் பெருமான்.

சந்திரனை பார்க்க கூடாத நாள்!  

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகரை வாழ்த்தியும், இசைப்பாடியும் வழிப்பட்டும் வந்தார்கள் தேவலோகத்தினரும், பூலோக மக்களும். இப்படி எங்கும் தனக்கு வழிபாடு நடப்பதை கண்ட விநாயகர், ஆனந்தத்தில் தன் மனமகிழ்ச்சியை நடனமாக வெளிப்படுத்தினார். பெருத்த உடலுடன் அவர் நடனமாடியதை கண்ட சந்திரன், கேலியாக சிரித்து விடுகிறார். அதோடு இருக்காமல், கிண்டலாக விநாயகரை போல நடனமாடி காண்பித்தார். அவ்வளவுதான். வினை தீர்ப்பவனாலேயே வந்தது வினை. சந்திரனை சபித்து விடுகிறார் விநாயகர். இதனால் மனம் வருந்திய சந்திரன், தன் சாபத்துக்கு விநாயகரிடமே மன்னிப்பு கேட்டு நிவர்த்தி பெற, விநாயகப் பெருமானை நினைத்து கடும் தவம் இருந்தார்.

சந்திரனின் தவத்தை ஏற்ற விநாயகர், அவரை மன்னித்து, சந்திரனை தன் நெற்றியில், வட்ட நிலா பொட்டாக அணிந்து கொண்டு, "ஸ்ரீபாலச்சந்திர விநாயகர்" என்ற சிறப்பு பெயரை பெற்றார். கொடுத்த சாபத்தை இறைவனாலும் திரும்ப பெற முடியாது என்பது விதி. அதனால் சந்திரனுக்கு கொடுத்த சாபத்தை விநாயகரால் திரும்ப பெற முடியவில்லை.

அதனால் - விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை பார்த்துவிட்டால் அன்றைய நாள் முழுவதும் விக்னேஸ்வரனுக்கு செய்த பூஜையும் பெற்ற புண்ணியமும் பலன் இல்லாமல் போய்விடும். அதனால், தெரியாமல் நாம் விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை  பார்த்துவிட்டால், அதற்கு பரிகார நிவர்த்தியாக சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் தந்து வணங்கினால், தோஷம் நிவர்த்தியாகும்.

வன்னி இலை மகத்துவம்!

பிரியவிரன் என்ற மன்னருக்கு கீர்த்தி–பிரபை என இரு மனைவிகள் இருந்தார்கள். இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் என்றாலும், கீர்த்தியை கண்டால் இளையவள் பிரபைக்கு ஆகாது. இதனால் கீர்த்தியை அதிகமாக கொடுமைப்படுத்தி வந்தாள். இதையெல்லாம் மன்னர் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் அரண்மனை பணியாட்கள், கீர்த்தியின் நிலையை கண்டு வருந்தினார்கள்.

தினந்தோறும் பிரபையிடம் கேவலப்படுவதை விட, தன் உயிரை மாய்த்து கொள்வதே நல்லது என்ற முடிவில் அரண்மனையை விட்டு வெளியேறினாள் கீர்த்தி. "நல்ல நேரத்தில விரோதிகள் இருக்கமாட்டார்கள். கெட்ட நேரத்தில் நல்லவர்கள் உடன் இருக்கமாட்டார்கள்." என்ற பெரியோர் சொல் நம் வாழ்க்கையிலும் உண்மையாகிவிட்டதே." என்று வருந்தி கொண்டே, கால்போன போக்கிலே போய்க்கொண்டிருந்தாள் கீர்த்தி.

அந்த சமயம், கீர்த்தியின் எதிரில் ஒரு முனிவர் வந்துக்கொண்டு இருந்தார். கீர்த்தியின் முகத்தை பார்த்த உடன், "இவள் பெரிய இடத்துப் பெண்" என்பதை புரிந்துக்கொண்டு, அவளை விசாரித்தார் முனிவர். முனிவரிடம் தன் வாழ்க்கை நிலையையும் தன் முடிவையும் சொல்லி அழுதாள் கீர்த்தி. "மகளே நீ வருந்தாதே. யாவும் வினை பயன். கொடும் வினையை தீர்ப்பவர் விநாயகப் பெருமான் ஒருவரே ஆவார்.

நீ விநாயகருக்கு அறுக்கம்புல்லால் அர்ச்சனை செய்து வா. உன் கவலை தீரும். உன் நிலை நிச்சயம் நல்லபடியாக உயரும்." என்றார் முனிவர். "இறைவனே வந்து அருள் சொல்வது போல் இருக்கிறது" என்று உணர்ந்த கீர்ததி, ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்கியிருந்து, தினந்தோறும் அறுகம்புல் பறித்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்து வந்தாள்.

வழக்கமாக அறுகம்புல் பறிக்கும் பகுதியில், கீர்த்திக்கு ஒரு பெண் தோழி கிடைத்தாள். கீர்த்தியின் விநாயகர் வழிபாட்டுக்கு தோழி உதவி செய்து வந்தாள். ஒருநாள், பூஜைக்கு அறுகம்புல் கிடைக்கவில்லை. இதனால் மனம் வருந்தி அழுதாள் கீர்த்தி. அதை கண்ட தோழி, "ஏன் வருந்துகிறாய் கீர்த்தி. அறுகம்புல் இல்லை என்றாலும் வன்னி இலையை விநாயகருக்கு சமர்பித்து பூஜை செய்.

வன்னியும் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். முன்னோரு காலத்தில் வன்னி என்ற பெண், தன் கணவருடன் பேசிக்கொண்டு இருந்தாள். அச்சமயம், அந்த வழியாக புருசுண்டி என்ற முனிவர் வந்துக் கொண்டிருந்தார். அவர் உருவத்தை கண்ட வன்னியும் அவள் கணவனும் கேலி செய்தார்கள். இதை கேட்ட முனிவர் கடும் கோபத்துடன், "ஏய் மதிக் கெட்ட துஷ்டர்களே… நீங்கள் அடுத்தவர்களை மதிக்கத் தெரியாமல், அவர்களின் மனம் புண்படும்படி பேசி திரிகிறீர்கள்.

அதனால் நீங்கள் அங்கிங்கென நகர முடியாத மரமாக நில்லுங்கள்." என்று சபித்துவிடுகிறார். இதை கேட்ட வன்னி, தங்களின் தவறை உணர்ந்து கண்ணீருடன், "அறியாத குழந்தை தவறு செய்தால் சபிப்பதா.?" என்றாள் முனிவரிடம். வன்னிக்காக மனம் இறங்கிய முனிவர், "மகளே கொடுத்த சாபத்தை இறைவனாக இருந்தாலும் திரும்ப பெற முடியாது. இருப்பினும் கணவன்-மனைவியான நீங்கள் இருவரும் தெய்வீக விருட்சமாக மாறுவீர்கள்.

வன்னி…நீ முதலில் வருத்தம் தெரிவித்ததால் விருட்சத்துக்கு உன் பெயரே நிலைக்கும். இனி உன் நிழலில்தான் விநாயகப் பெருமான் குடியிருப்பார். உன் இலையை விநாயகருக்கு சமர்பித்தால் சகல தோஷங்களும் பாபங்களும் வழிப்பட்டோருக்கு விலகிவிடும். விநாயகருக்கு இஷ்டமான அறுகம்புல்லுக்கு அடுத்ததாக வன்னியாகிய நீயே நிலைத்து புகழ் பெறுவாய்." என்றார் புருசுண்டி முனிவர். இப்படி வன்னி இலையின் மகத்துவத்தை கூறினாள் கீர்த்தியின் தோழி.

தன் தோழி கூறினாலும் வன்னி இலையை அரைமனதுடன் தான் விநாயகருக்கு சமர்ப்பித்தாள் கீர்த்தி. அன்றிரவு உறங்கும் போதும் கூட, "இன்றைய வழிப்பாட்டில் அறுகம்புல் வைத்து பூஜிக்க முடியவில்லையே." என்ற வருத்துடன் கீர்த்தி மனம் குழப்பத்துடன் உறங்கினாள். அப்போது அவள் கனவில், "நீ எனக்கு இன்று அர்ச்சனை செய்த வன்னி இலை, என் சிரசில் இருக்கிறது பார். அதனால் வருந்தி குழம்பாதே. உன் வழிப்பாடு இன்றுடன் நிறைவு பெற்றது.

நான் மகிழ்ச்சி அடைந்தேன். வன்னியிலையும் என் இஷ்டத்திற்குரியதே. உன் கஷ்டம் தீர்ந்தது. நாளை நீதான் உன் நாட்டுக்கு அரசி." என்று ஆசி வழங்கி மறைந்தார் விநாயகப் பெருமான். கனவில் விநாயகப் பெருமான் அருளியது போன்று, மறுநாள் காலை கீர்த்தியை தேடி அவளின் கணவரான அரசர், கீர்த்தி தங்கியிருந்த வீட்டு வாசல் தேடி வந்து நின்றார்.

கீர்த்தியை சமாதானம்படுத்தி அழைத்தார். இத்தனை நாள் தனக்கு உதவியாக இருந்த தோழிக்கு, அரசு சார்பாகவும் தன் சார்பாகவும் பரிசுகளை வழங்கி கௌரவித்த கீர்த்தி, தன் கணவருடன் மகிழ்ச்சியாக நாடு திரும்பினாள். சில மாதங்களில் கீர்த்தி தாய்மை அடைந்தாள். அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். வருடங்கள் ஓடியது. இளைய அரசியான பிரபை பொறாமையுடனே இருந்தாள். ஒருநாள், தன் சகோதரிக்கு செய்யக் கூடாத கொடுமையை செய்தாள். ஆம்… மூத்த அரசியும் தன் மூத்த சகோதரியும் ஆன கீர்த்தியின் நான்கு வயது புத்திரனுக்கு விஷம் வைத்து கொன்றாள்.

இறந்த மகனை பார்த்து கதறி துடித்தாள் கீர்த்தி. மகனின் உயிரற்ற உடலை விநாயகர் ஆலயத்தின் முன் வைத்து கதறினாள். அப்போது அந்த கோயிலில்  கிருச்சமதர் முனிவர் என்பவர் இருந்தார். இறந்த குழந்தையுடன் ஒரு பெண் கதறிக்கொண்டு இருக்கிறாளே என்று வருந்தி, கீர்த்தியின் அருகில் சென்று  அரசியை சமாதானப்படுத்தினார். விநாயகப் பெருமானின் பக்தையான தன்னை விநாயகர் கைவிட்டதாக கதறினாள். விநாயகர் தன் உண்மையான பக்தர்களை ஒருபோதும் கைவிட மாட்டார்.

வன்னி இலையால் நீ விநாயகரை வழிப்பட்டவள். வன்னி இலையால் விநாயகரை வழிப்பட்டால், வழிப்பட்டவரின் சந்ததி வளருமே தவிர அழியாது." என்ற முனிவர் இறந்து கிடந்த இளவரனுக்கு ஆசி கூற, குழந்தை தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தவனை போன்று எழுந்து, தன் தாயை அணைத்துக் கொண்டான். அறுகம்புல்லை போலவே வன்னி இலைக்கும் மகத்துவம் உண்டு. வன்னி இலையை நாம் விநாயகப் பெருமானுக்கு சமர்பித்தால், வழிப்பட்டவரின் சந்ததிகள் புகழும், ஆரோக்கியமும் பெறுவார்கள்.

நன்றி: நிரஞ்சனா.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator