Saturday 16 August 2014

பரம்பொருளே திருவல்லிக்கேணி பார்த்தசாரதி

பரம்பொருளே திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
மயில்கள் ஆர்க்கும் ஊர் மயிலாப்பூர் என்றும்; அல்லி மலர்கள் நிறைந்த கேணி திருவல்லிக்கேணி என்றும் அழைக்கப்பட்டன. இந்த இரண்டு ஊர்களைச் சேர்த்தே பழங்காலத்தில் மயிலைத் திருவல்லிக்கேணி கிராமங்கள் என்று அழைப்பார்கள். இந்தத் திருவல்லிக்கேணி முற்காலத்தில் எப்படி இருந்தது தெரியுமா?
இரவியின் கதிர்கள் உட்புகமுடியாத அடர்ந்த சோலைகள் உள்ள ஊராக இருந்தது. அதுமட்டுமா? ஒப்பில்லாத மாதர்கள் வாழும் மாட மாமயிலைத் திருவல்லிக்கேணியாக இருந்தது. அதாவது அழகிய பெண்கள் வாழ்கின்ற மாடங்கள் நிறைந்த மயிலாப்பூர்த் திருவல்லிக்கேணியாக இருந்தது.
மயிலாப்பூரின் சிறப்பு, கபாலீஸ்வரர் கோவில். திருவல்லிக்கேணியின் சிறப்பு, பார்த்தசாரதி ஸ்வாமி கோவில். சுமதி என்கிற மன்னன் திருவேங்கடமுடையானை தரிசனம் செய்து வந்தான். பாரதப் போரில் பஞ்சபாண்டவர்களை வழிநடத்திய ஸ்ரீ கிருஷ்ணர் மீது அவனுக்கு மிகுந்த பிரேமை. ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனம் வேண்டுமென்று இறைஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த இடத்துக்குப் போக வேண்டுமென்றால் வடக்கே வெகுதொலைவு மலைகளையும், காடுகளையும் ஆறுகளையும் தாண்டிப் போகவேண்டுமே என்று கவலைப்பட்டான்.
சுமதி மன்னன் கனவில் வேங்கடவன் தோன்றி, தன்னை தரிசிக்க அவ்வளவு தொலைவு போக வேண்டியதில்லை. இங்கே பிருந்தாரண்யம் எனப்படுகின்ற (பிருந்தா _ துளசி; ஆரண்யம் _ காடு.) திருவல்லிக்கேணியில் தான் ஸ்ரீ கிருஷ்ணனாக எழுந்தருளியிருப்பதாய் விவரம் சொல்ல, சுமதி மன்னன் இங்கு வந்து பாரதப் போரில் அர்ஜுனனுக்கு சாரதியாய் இருந்த ஸ்ரீ கிருஷ்ணனை கண் குளிர தரிசனம் செய்தான். கோவிலும் எழுப்பினான். திருவல்லிக்கேணிக்கருகே துளசி வனத்திற்கு நடுவே
ஸ்ரீ கிருஷ்ணர் குடும்ப சமேதராகக் காட்சி தருகிறார்.
திரண்ட புஜங்களோடு வலது கையில் சங்கம் ஏந்தி, இடது கை பாதத்தைச் சுட்டிக்காட்ட, உயரமாய் அகலமாய், கம்பீரனாய் பெரும் விழிகளோடு முகத்தில் வெள்ளை மீசையோடு இடுப்பில் கத்தியோடு சாளக்கிராம மாலையணிந்து ஆதிசேஷன் தலையில் நின்றவாறு காட்சியளிக்கிறார். வேங்கடவர் சுட்டிக் காட்டிய கிருஷ்ணர் என்பதால், வேங்கடகிருஷ்ணன் என்று பெயர்.
வேங்கடகிருஷ்ணனுக்கு அருகே அதே கம்பீரத்தோடு, கூர்மையான நாசியும் புன்சிரிப்பு தவழும் உதடும் வலது கையில் குமுத மலரும் கொண்டு ருக்மணி தேவி இருக்கிறார். ருக்மணி தேவியின் வலப்பக்கத்தில் உழு கலப்பையோடு பலராமர் காட்சி தருகிறார். வேங்கடகிருஷ்ணரின் இடப்பக்கம் தம்பி சாத்யகியும், அவருக்கு அருகே தெற்கு நோக்கி மகன் பிரத்யும்னனும்,
பேரன் அநிருத்தனும் காட்சி தருகிறார்கள். சன்னதிக்கு அருகே நின்று கைகூப்ப, மனம் கிரங்கும்.
சாத்யகிக்கு நேரெதிரேயுள்ள ஒரு ஆசனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் எழுந்தருளியிருக்கிறார். இந்த உற்சவருக்குத்தான் பார்த்தசாரதி என்று பெயர்.
ஆதிகாலத்தில், மூன்றுமுறை இந்த பார்த்தசாரதி ஸ்வாமியை உலோகத்தில் வார்த்தும், முகம் மட்டும் பருக்கள் நிறைந்து காணப்பட்டது.
என்ன இப்படி ஆகிவிட்டதே என்று சிற்பி கவலைப்பட, 'பாரதப் போரில் என் முகம் அம்பால் காயப்பட்டது. அதை நினைவுறுத்தும் வண்ணமாகவே இந்த இடத்தில் நான் இப்படி எழுந்தருளியிருக்கிறேன்' என்று சிற்பிக்கு, வேங்கடகிருஷ்ணன் கனவில் ஆறுதல் சொன்னதாக செவிவழிச் செய்தி உண்டு.
ஒயில் நிறைந்த இந்த பார்த்தசாரதி சிலையில் மற்ற அங்கங்கள் மிக சுத்தமாக இருக்க, முகத்தில் மட்டும் தழும்புகள் இருப்பதைக் காணலாம். அது மட்டுமல்லாது இடதுகால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் நகம் இருக்காது. பாரதப் போரில் பீஷ்மர் சரணாகதிக்காக அம்புவிட, அந்த அம்பு கிருஷ்ணரின் அந்த விரல் நகத்தைக் கீறியது என்றும் சொல்கிறார்கள்.
பார்த்தசாரதியின் இடுப்பில் யசோதையால் கயிறு கட்டப்பட்ட தழும்பு இருக்கிறதென்றும் கூறுகிறார்கள். மிகமிகத் தொன்மையான இந்தச் சிலைக்குக் கவசம் பூட்டி கண்ணும் கருத்துமாய் காப்பாற்றுகிறார்கள்.
சற்று தொலைவில் திருவாய்மொழி மண்டபத்திலிருந்து பார்க்க, ஒரு செவ்வக வாசல் முழுவதையும் அடைத்துக் கொண்டு, கருணை பொங்கும் பெரும் விழிகளும் வெள்ளை மீசையுமாய் மூலவரான வேங்கட கிருஷ்ணனைக் கண்குளிரக் காணலாம்.
உற்றுப் பார்க்க, அந்தக் கண்கள் இன்னும் அருகே வா என்றழைக்கும்.
சாரதி என்றால் யார்? தேரோட்டுபவன் மட்டுமா? இல்லை. இங்கு, கண்ணன் வழிகாட்டி. நம்மைப் போன்ற குடும்பிகளுக்கு பிரச்னையே, இனி அடுத்து என்ன செய்வது என்பதுதான். அடுத்து என்ன செய்வது என்று வழிகாட்டுபவன், பார்த்தசாரதி.
நல்லபுருஷன் வேண்டுமென்கிற பெண்ணுக்கு; நல்ல மனைவி வேண்டுமென்கிற ஆணுக்கு; நல்ல குடும்பம் அமைய வேண்டுமென்கிற தாபமுள்ள குடும்பிக்கு ஸ்ரீபார்த்தசாரதியே வழிகாட்டி. அதேபோல புத்திக்கு வழிகாட்டி. பார்த்தசாரதிக்கு நேர் பின்னே மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் யோக நரசிம்மர், புத்தியில் சிக்கல் ஏற்பட்டால் தெளிவுபடுத்த வழிகாட்டுவார்.
ஞானப் பாதைக்கு அழைத்துச் செல்வார். நாக்கு இல்லாத அலங்கார மணிகள் கொண்ட கதவினை உடைய வாசல். நிஷ்டையில் அமர்ந்திருக்கும் நரசிம்மருக்கு எதிரே தனி கொடிமரமும் பலிபீடமும் இருக்கின்றன. இந்த நரசிம்மரை, இங்குள்ள வைணவர்கள், பெரியவர் என்றும், தாத்தா என்றும் அழைக்கிறார்கள். இந்த நரசிம்மருக்கு முதல் பூஜை, முதல் கோஷ்டி ஆனபிறகு ஸ்ரீ பார்த்தசாரதிக்கு பூஜையும் கோஷ்டியும் ஆகும். மிக உக்கிரமாக இருந்த இந்த சன்னதி, காலப் போக்கில் பல்வேறு ஞானிகளால் உக்கிரம் குறைக்கப்பட்டு, சாந்த ஸ்வரூபியாக அஞ்சேல் என்று அபயம் அளிப்பவராக திருஷ்டி தோஷம் நீக்குபவராக காட்சியளிக்கிறார். இங்கே முகத்தில் அடிக்கப்படும் சங்கு தீர்த்தத்தால், பல்வேறு பயங்கள், தோஷங்கள் நீங்குகின்றன.
ஒரு ஊர் சிறப்பாவது அந்த ஊரின் கோவிலால். அந்தக் கோவில் சிறப்பாவது அந்த ஊர் மக்களால். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சமேத வேங்கட கிருஷ்ணனை திருவல்லிக்கேணி வைணவர்கள் மனமாரக் கொண்டாடுகிறார்கள். நாள் தவறாது கோஷ்டியாய் அமர்ந்து நாலாயிர திவ்யபிரபந்தயத்தை ஓதுகிறார்கள். வருடத்திற்கு ஐந்துமுறை நாலாயிரம் பாடல்களையும் முழுவதுமாய் குழுவாய் அமர்ந்து சொல்லுகின்ற ஒரு வழக்கம் இங்கு மட்டுமே வெகு கண்டிப்பாய் பின்பற்றப்படுகிறது. கெஞ்சிக் கூத்தாடியோ, காசு கொடுத்தோ பிரபந்தம் ஓதுபவர்களைக் கொண்டுவரவேண்டிய அவசியமில்லை. ஊரிலுள்ள வைணவர்களே
பரம்பரை பரம்பரையாக மிகுந்த ஆர்வத்தோடு இங்கு பிரபந்தம் ஓதுதலைக் குறைவின்றி செய்கிறார்கள். இந்த ஒரு பெருமாள் மட்டும்தான் காதுகுளிரக் கேட்பதற்குண்டான வரத்தை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் என்று, திருவல்லிக்கேணி வைணவர்கள் கம்பீரமாய்ச் சொல்லுகிறார்கள். மிகுந்த கட்டுப்பாட்டோடும், கவனத்தோடும், நூற்றுக்கும் மேற்பட்ட வைணவர்கள் அமர்ந்து தமிழ் வேதம் என்று அழைக்கப்படும் அந்த நாலாயிர திவ்யபிரபந்தம் ஓதுதலை மன நிறைவோடு செய்கிறார்கள்.
பெருமாளுக்கு நைவேத்தியத்தில் மிளகாய் சேர்ப்பதில்லை. மிளகுதான் உபயோகம். எண்ணெய்ப் பண்டங்கள் இல்லை, கோவில் மிகப் பழமையானது என்பதற்கு, ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முந்தைய கல்வெட்டொன்று சாட்சியாக இருக்கிறது.
அங்குள்ள நிலக்கிழார்கள் கோவிலுக்குச் சொந்தமான கருமாரிச் சேரிப் புலத்தை அடகு வைத்தபடியால் அங்கிருந்து வரும் நெல்,
ஸ்வாமிக்கு போஜனத்திற்கு இல்லாமல் போயிற்று. அதை விஜயன் அரையன் என்கிற பக்தன் ஒருவன் காசு கொடுத்து மீட்டு, ஸர்மன், இளைய சட்டி ஸர்மன் என்ற இரண்டு அந்தணர்களிடம் கொடுத்து, ஸ்வாமிக்கு நாள் தவறாமல் திருவமுது கிடைக்கும்படியாய் கட்டளையிட்டு, அவர்கள் அவ்விதம் செய்வதற்கு உபயோகமாய் உலோகப்பானை ஒன்றும் தானமாகக் கொடுத்தான் என்று அந்தக் கல்வெட்டு சொல்கிறது. இப்படி பெருமாளுக்குத் தவறாது திருவமுது செய்து வரும் கைங்கர்யத்தை
எவர் தொடர்ந்தாலும் அவருடைய பாதத்தில் என் சிரஸ் என்று அந்தக் குறுநில மன்னன் வேண்டிக் கொண்டிருக்கிறான்.
அதுமட்டுமல்ல. மிகச் சமீபத்தில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தாறில் கோவில் விமானத்துக்கு தங்க முலாம் பூச வேண்டுமென்று தாமிரத் தகடு வாங்க, தங்கம் சேகரித்து பலர் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், தங்கம் முழுவதுமாக வாங்க முடியவில்லை.
விமானத்தின் இரண்டு பக்கம் மட்டுமே தங்கமுலாம் பூசக்கூடிய அளவுக்கு தங்கம் கிடைத்தது. இன்னும் இரண்டாயிரம் தோலா தங்கம் கிடைத்தால் விமானம் முழுவதும் தங்க முலாம் பூசிவிடலாம். ஆகவே இந்த இரண்டாயிரம் தோலா கொடுப்பவர்கள் எவராயினும் அவர் பாதத்தின் மீது எங்கள் சிரஸ என்று தெலுங்கிலே ஒரு கல்வெட்டு இருக்கிறது. (ஒரு தோலா என்பது பன்னிரண்டு கிராம். இரண்டாயிரம் தோலா என்பது மூவாயிரம் சவரன்).
சென்னை நகர மக்கள் நினைத்தால் இரண்டாயிரம் தோலா தங்கத்தை ஒரே வருடத்தில் பார்த்தசாரதி பெருமாளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட முடியும். அறுபத்து எட்டு வருட தவம் பூர்த்தியாகும். அன்று பல பெரியவர்கள் முயன்று முடியாத அக்கைங்கர்யம் எளிதாக நிறைவேறும். அப்படி விமானம் முழுதும் தங்க முலாம் பூசப்பெற்றால் சென்னை நகரம்
மேன்மேலும் வளமாகும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
சிறிதும் இல்லாது பெரிதும் இல்லாத கோவில். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறுவித மண்டபங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
கொடிமரத்துக்கருகேயுள்ள ஒரு மண்டபம், ஒரு தேவரடியார் தன்னுடைய சொந்தக் காசிலிருந்து கட்டியதாய் சொல்லப்படுகிறது.
அந்த மண்டபத் தூண்களிலுள்ள புடைப்புச் சிற்பங்கள் மிக நேர்த்தியானவை.
ஹிரண்யனை நரசிம்மர் நின்றவாக்கிலே அவன் இரண்டு கால்களையும் தலைமயிரையும் இரண்டு கைகளால் பற்றி பழங்காலை உயர்த்தி அவன் முதுகெலும்பை உடைத்துப் போடுவதாய் ஒரு வேகமுள்ள சிற்பம் இருக்கிறது. அதுமட்டுமல்லாது
பார்த்தசாரதி சன்னதிக்கருகே ஸ்ரீமந்நாதர் என்கிற பெயரோடு அனந்தசயனப் பெருமாளின் சன்னதி இருக்கிறது. சதுர்புஜங்களோடு ஆதிசேஷன்மீது நாராயணன் சயனித்திருக்கிறார்.
ஒரு கை பாம்பணை மீதும், ஒரு கை முத்திரையாகவும், இன்னொரு கை தொடை மீதும் இருக்க, நான்காவது கை உயர்ந்து ஒரு விரலை வளைத்து, அருகே வா என்று அழைப்பது போல காட்சியளிக்கிறது. ஸ்ரீதேவியும் பூதேவியும் அருகே இருக்க, நாபியிலிருந்து தாமரை மலர்ந்து அதன் மேலே பிரம்மதேவன் அமர்ந்திருக்கிறார். அந்த அனந்த சயனப் பெருமாளுக்கருகே, உள்ளே மறைவாக, சிரித்தபடி நரசிம்மரும் சிந்தனை மிக்க வராகரும் அமர்ந்திருக்கிறார்கள்.
அனந்த சயனப் பெருமாளுக்கு அருகே ஸ்ரீ ராமருடைய சன்னதி இருக்கிறது. சீதை, லட்சுமணரோடு மட்டுமல்லாமல், பரதரோடும் சத்ருக்னரோடும் ஸ்ரீராமர் காட்சியளிக்கிறார். அவருக்கு நேரெதிரே ஹனுமான் கூப்பிய கரங்களோடு நிற்கிறார்.
தாயாரின் பெயர் ஸ்ரீ வேதவல்லி. தனி சன்னதியும் அவருக்கருகே ஸ்ரீ கஜேந்திர வரதரின் சன்னதியும் இருக்கின்றன. கீதை படித்து கண்ணனை ஆழ்ந்து நேசிக்கிற அத்தனை பேரும் இந்த இடத்திற்கு வந்து கண்குளிர வேங்கடகிருஷ்ணனையும் பார்த்தசாரதியையும் பார்த்து வணங்க வேண்டும்.
குடும்பம் சுமுகமாக இருக்க கண்ணனை வழிபட வேண்டும். மனம் அமைதியாக இருக்க யோக நரசிம்மர் முன் கைகட்டி நிற்க வேண்டும். வீட்டில் நிம்மதியும், மனசில் அமைதியும் இருந்தால் அதைவிடச் சிறப்பான வாழ்க்கை வேறென்ன உண்டு?
உன்னை சகல துன்பங்களிலிருந்தும் காப்பாற்ற நான் இருக்கிறேன் என்று ஸ்ரீ பார்த்தசாரதியான வேங்கடகிருஷ்ணன் உயரமாய் அகலமாய் பெரும் விழிகளோடும், சிரித்த முகத்தோடும், நல்ல வீரமான மீசையோடும், கம்பீரத்தோடும், வா வா என்று கருணையோடு உங்களை அருகே அழைக்கிறான். எட்டி விலகி நின்று பார்க்கும்போதே அவன் அருகே போக வேண்டுமென்கிற ஆவலும், ஏக்கமும் நிச்சயம் ஏற்படும். இடையறாது அந்தக் கண்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் உள்ளுக்குள் மாற்றங்கள் நிச்சயம் நிகழும். வேண்டுவன கிடைக்கும்.
உன்னை சகல துன்பங்களிலிருந்தும் காப்பாற்ற நான் இருக்கிறேன் என்று ஸ்ரீ பார்த்தசாரதியான வேங்கடகிருஷ்ணன் உயரமாய் கலமாய் பெரும் விழிகளோடும், சிரித்த முகத்தோடும், நல்ல வீரமான மீசையோடும், கம்பீரத்தோடும், வா வா என்று கருணையோடு உங்களை அருகே அழைக்கிறான். எட்டி விலகி நின்று பார்க்கும்போதே அவன் அருகே போக வேண்டுமென்கிற ஆவலும், ஏக்கமும் நிச்சயம் ஏற்படும். இடையறாது அந்தக் கண்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் உள்ளுக்குள் மாற்றங்கள் நிிச்சயம் நிகழும். வேண்டுவன கிடைக்கும்.

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator