Wednesday 6 August 2014

குருவின் பெருமை நிகழ்த்திய மகிமை – சிலிர்க்க வைக்கும் ஒரு சம்பவம்!

குருவின் பெருமை நிகழ்த்திய மகிமை – சிலிர்க்க வைக்கும் ஒரு சம்பவம்! 
இந்த உலகில் நம்முடைய அறிவுக்கும், திறமைக்கும், ஆற்றலுக்கும், கண்ட்ரோலுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் எத்தனையோ தினம் தினம் நடக்கின்றன. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று நம்மால் யூகிக்க முடியாது. நம் கையில் எதுவும் இல்லை. காலத்தின் கைகளில் நாம் ஒரு பொம்மை. அவ்வளவே. பொம்மை எப்படி இயங்குகிறது என்பது அதன் கர்மாவை பொருத்தது. "எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை" என்று நீங்கள் சொன்னால் கூட உண்மை இது தான். எனவே ஒவ்வொரு கணமும் நல்லதையே சிந்திக்கவேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நல்ல விஷயங்களில் நம்மை ஈடுபடுத்தி வரவேண்டும். அதுவே பரபரப்பான இந்த உலகில் நம்மை காக்கும் கவசம். 
குருவின் பெருமை நிகழ்த்திய மகிமை !
கிருஷ்ண கான சபாவில் கடைசி வியாழனை முன்னிட்டு திரு.சுவாமிநாதன் அவர்களின் 'குரு மகிமை' சொற்பொழிவு நடைபெற்றது. இது பற்றி நேற்று முன் தினம் அளித்த பதிவில் நான் கூறியதும், நண்பர் மோகன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு "குரு மகிமையை கேட்க நீங்கள் போறதுன்னா சொல்லுங்க… நானும் வருகிறேன்" என்றார்.
எனக்கு போவதற்கு ஆசை தான். ஆனால் நம் ஆண்டு விழாவிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் முடிந்தால் போவோம் இல்லையென்றால் அவரை மட்டும் போகச் சொல்லலாம் என்று நினைத்தேன்.
நேற்று காலை என்னை மீண்டும் தொடர்புகொண்டு, "சார்… சாயந்திரம் குரு மகிமை சொற்பொழிவுக்கு போறீங்களா?" என்று கேட்டார்.
இந்த முறை எனக்கு ஆசை வந்துவிட்டது. "ஆஃபீஸ்ல எப்போது வேலை முடியும் என்று தெரியலை. ஒருவேளை 6.30 க்குள் முடிந்து வெளியே வர முடியுமானால், ஒன்றாகவே போய்விடலாம். நீங்கள் தயாராக இருங்கள்!" என்று கேட்டுக்கொண்டேன்.
சரியாக மாலை, 6.00 மணிக்கு ஃபோன் செய்தார் மோகன். 6.30க்கு சொற்பொழிவு தொடங்கிவிடும். ஆனால் எனக்கு 6.30 க்கு தான் அலுவலகமே முடியும் என்பதால், எதற்காக அவரை வீணாக காத்திருக்க சொல்வானேன்… அவரை முதலில் போகச் சொல்லி, சொற்பொழிவை கேட்டுக்கொண்டிருக்க சொல்லலாம். நாம் பின்னர் ஜாய்ன் செய்து கொள்ளலாம் என்று அவரிடம் கிருஷ்ண கான சபாவுக்கு எப்படி போவது என்று சொல்லி போகச் சொல்லிவிட்டேன்.
வேலை முடிந்ததும் அலுவலகத்தில் இருந்து பிய்த்துக்கொண்டு வெளியே வந்தேன். பைக்கை விரட்ட…. தி.நகரின் பிரதான சாலைகளில் ஊர்ந்து கிருஷ்ண கான சபாவை அடையும்போது மணி சரியாக 6.50.
மோகன் கடைசி வரிசைக்கு முன் வரிசையில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். அவர் அருகே போய் உட்கார்ந்தேன். அவருக்கு ஒரே மகிழ்ச்சி.
மொபலை சைலன்ட்டில் வைத்திருக்கிறாரா என்று கேட்டு உறுதி செய்துகொண்டு, என் மொபைலை சைலண்ட் மோடில் மாற்றினேன்.
சுவாமிநாதன் அவர்கள் சொற்பொழிவை மெய்மறந்து அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் அவ்வப்போது உணர்ச்சி வயப்பட்டு கைதட்டி மகிழ்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் தொடர்புடைய பெரியவாவின் மகிமையை சுவாமிநாதன் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது எனக்கு அப்பாவிடம் இருந்து ஃபோன் வந்தது. சொற்பொழிவு முடிந்தவுடன் பேசிக்கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தேன்.
திரும்பவும் கால் அடுத்தடுத்து வந்துகொண்டிருந்தது. மொத்தம் மூன்று நான்கு மிஸ்டு கால்கள்.
என்ன அவசரம் என்று தெரியவில்லையே என்று நினைத்து, ஹாலை விட்டு வெளியே வந்து… அப்பாவை திரும்ப அழைத்தேன்.
"எங்கே இருக்கே ? பூரணி (என் தங்கை அன்னபூரணி) ஆபீஸ்ல இருந்து ஆக்டிவாவில் வரும்போது வீட்டுகிட்டே ஸ்கிட் ஆகி டூ-வீலர்ல இருந்து விழுந்துட்டா… ராமச்சந்திரா ஹாஸ்பிடல்ல எமர்ஜென்சில இருக்கோம். மாப்பிள்ளையும் பாப்பாவும் கூட இருக்காங்க.. நீ உடனே வா…" என்று கூற எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
"என்னப்பா.. எமேர்ஜென்சில அட்மிட் பண்ற அளவுக்கு என்ன ஆச்சு ? பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லையே…?"
"நம்ம வீட்டு முன்னாலேயே கேட் கிட்டே, உள்ளே வரும்போது பைக் ஸ்கிட் ஆகி கீழே விழுந்துட்டா… வண்டிக்கு கீழே கால் மாட்டிகிச்சி… முட்டி கிட்டே ரொம்ப வலிக்குதுன்னு அழுதா.. நேரம் போகப் போக வலி ரொம்ப ஜாஸ்தியாயிடிச்சு… என்ன ஏதுன்னு தெரியலியே…. அதான் ராமச்சந்திராவுல அட்மிட் பண்ணியிருக்கோம். இப்போ எமர்ஜென்சியில இருக்கோம். எக்ஸ்ரே ஸ்கேன் எல்லாம் எடுத்திருக்கோம். இன்னும் அரை மணிநேரத்துல ஸ்கேன், எக்ஸ்-ரே ரிசல்ட் வந்துடும். நீ பதட்டப்படாம வண்டி ஓட்டிகிட்டு வா…" என்று கூற, எனக்கு அதிர்ச்சி.
"சரி… நான் இப்போ தி.நகர்ல இருக்கேன். உடனே வர்றேன். எப்படியும் முக்கால் மணிநேரம் ஆகும். எக்ஸ்-ரே ரிப்போர்ட் வந்தவுடனே என்னை மறுபடியும் கூப்பிடுங்க. பயப்படவேண்டாம் நல்ல செய்தி தான் வரும்" ஆறுதல் சொல்லிவிட்டு மீண்டும் ஹாலை நோக்கை நடந்தேன்.

ஹாஸ்பிடல்… அட்மிட் போன்ற வார்த்தைகளை கேட்டாலே சிலரைப் போல எனக்கும் அலர்ஜி. வெளிறிப்போன முகத்துடன் மீண்டும் சொற்பொழிவு நடக்கும் ஹாலுக்கு வந்தேன்.
சொற்பொழிவு முடிய இன்னும் அரை மணிநேரம் இருந்தது. கேட்டுவிட்டே போகலாம் என்று முடிவு மேற்கொண்டேன்.
உள்ளே அமர்ந்தேனே தவிர என்னால் சொற்பொழிவில் ஒன்ற முடியவில்லை.
"குரு மகிமை கேட்கும்போது இது என்ன சோதனை… ஆண்டுவிழா பரபரப்புல வேற இருக்கேன்… FRACTURE அது இதுன்னு COMPLICATIONS எதுவும் இல்லாம அவளுக்கு எந்த பாதிப்பும் இல்லாம போகணும். தலைக்கு வந்தது தலைப் பாகையோட போச்சுன்னு ஆகிடனும். பெரியவா நீங்க தான் பெரிய ஆபத்து எதுவும் இல்லாம அவளை பார்த்துக்கணும். உங்களோட்ட மகிமையை கேட்கும்போது இந்த மாதிரி எனக்கு ஒரு செய்தி வரலாமா? அது உங்களுக்கு தானே அபகீர்த்தி. வினைப்பயனால் இது நடந்தது என்றால், குருவின் பெருமையை கேட்பது இருவினையை தீர்க்குமே… ஆண்டுவிழா ஏற்பாடுகள்ல வேற நான் கவனம் செலுத்த வேண்டியிருக்கே… இந்த நேரத்துல நான் ஹாஸ்பிடலுக்கு அலைஞ்சிகிட்டு இருக்க முடியாதே… என்னோட பாரத்தை உங்ககிட்டே இறக்கி வெச்சிட்டேன்… அப்புறம் உங்க இஷ்டம். டாக்டர்களுக்கெல்லாம் டாக்டர் நீங்க இருக்கும்போது நான் எதுக்கு அலட்டிக்கணும்" என்று பெரியவாவை வேண்டிக்கொண்டு, சொற்பொழிவில் லயிக்க ஆரம்பித்தேன்.
அடுத்து சுவாமிநாதன் அவர்கள் எடுத்த டாபிக் என்ன தெரியுமா? கர்மா !
எனக்கு சிலிர்த்துவிட்டது.
கர்மாவை பற்றி மகா பெரியவா கூறிய விஷயங்களையும் அது சம்பந்தப்பட்ட அவரின் விளக்கங்களையும் பக்தர் ஒருவரின் அனுபவத்தோடு விவரிக்க ஆரம்பித்தார்.
ஒரு 15 நிமிடம் போனது. உத்தவ கீதை பற்றி சுவாமிநாதன் அவர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்… அப்பாவிடம் இருந்து மீண்டும் ஃபோன். சுவாமிநாதன் சார் சரியா 8.00 மணிக்கு சொற்பொழிவை நிறைவு செய்துவிடுவார் என்பதால் முடிஞ்சதும் என்னன்னு கேட்டுக்கலாம் என்று காலை அட்டென்ட் செய்யவில்லை.
சொற்பொழிவு முடிந்ததும் சுவாமிநாதன் சாரிடம் சென்று நண்பரும் நான் சொற்பொழிவு கேட்க வந்திருந்த விஷயத்தை சொல்லி சில வார்த்தைகள் பேசிவிட்டு விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன்.
வெளியே வந்தவுடன், அப்பாவுக்கு ஃபோன் செய்தேன்.
"டெஸ்ட் ரிப்போர்ட் வந்துடிச்சு. டாக்டர், "பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லை. FRACTURE, CRACK எதுவும் இல்லை. விழுந்த அதிர்ச்சியில முட்டில MUSCLE SPRAIN ஆகியிருக்கு. அதனால தான் வலி அதிகமிருக்கு. இப்போதைக்கு வலி குறைய இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். டாப்லட்ஸ் எழுதி தந்திருக்கேன். வலி படிப்படியா குறைஞ்சிடும். ஒரு மூணு நாள் கழிச்சி திரும்பவும் ஒரு செக்கப்புக்கு வாங்க…." அப்படின்னு சொல்லியிருக்கார்." என்றார் அப்பா.
அப்பாடி… மகா பெரியவா தலைக்கு வந்ததை தலைப்பாகையோடு போனது போல பெரிய COMPLICATION ல இருந்து காப்பாத்திட்டார். எனக்கு நெகிழ்ச்சியில் கண்களில் நீர் துளிர்த்தது.
கிளம்புவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்த சுவாமிநாதன் சாரை நோக்கி ஓடினேன்.
"சார்… என்ன நடந்துது தெரியுமா?" என்று கூறி நடந்த அனைத்தையும் ஒரு வரி விடாமல் விவரித்தேன். அவருக்கு நெகிழ்ச்சியில் வார்த்தைகளே வராவில்லை. மகா பெரியவா இருக்கும்போது நாம எதுக்கும் கவலைப்படவேண்டாம் சுந்தர். போய் பதட்டப்படாம பங்க்ஷன் ஏற்பாடுகளை கவனிங்க…!" என்றார்.
வீட்டுக்கு வந்தவுடன் "இன்னைக்குமா லேட்டா (?!) வருவே? கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா?" என்றார்கள் சற்று கோபத்துடன்.
நடந்த அனைத்தையும் விவரித்தேன். மகா பெரியவா அரணாக நின்று நம்மை காப்பதை எண்ணி சந்தோஷப்பட்டார்கள். மறக்காமல் தங்கை கணவரிடமும் விஷயத்தை சொன்னேன்.
தங்கையுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். சிங்கபூரிலிருந்து நண்பர் கோகுல் கூப்பிட்டார். ஆண்டுவிழா ஏற்பாடுகள் எப்படி போய் கொண்டிருக்கிறது என்று விசாரித்தார். இங்கே தன் பெற்றோருக்கு நான் அனுப்பிய சுந்தரகாண்டம் நூல்கள் கிடைத்துவிட்டதாக சொன்னார். அவரிடம் தங்கை வீட்டில் இருப்பதாகவும் விபரங்களை காலை சொல்கிறேன் என்றும் கூறினேன்.
தங்கை வீட்டிலேயே இரவு தங்கிவிட்டு காலை தான் என் வீட்டுக்கு வந்தேன். (தங்கை வீடு எங்கள் தெருவிலேயே ஐந்தாறு வீடு தள்ளி தான் இருக்கிறது.)
காலை தங்கையிடம் எப்படி இருக்கு இப்போ என்று விசாரித்தேன். இரவு வலி அதிகமாக இருந்தது என்றும். இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது என்றும் கூறினார்.
"விரைவில் பரிபூரண குணம் ஏற்பட்டுவிடும். ஏனெனில் இது எங்க பெரிய டாக்டர் பார்த்த வைத்தியம்!" என்றேன்.
அப்பாவிடம் பேசியபோது, "காலைல நல்லபடியா அவ எழுந்திரிச்சி நடக்கணும் என்று பிரார்த்தித்துக்கொண்டேன். நல்லவேளை நடக்குறா." என்றார்.
(தங்கைக்கு இப்போ வலி குறைந்துள்ளது. ரெண்டு நாள் ஆபீஸ்க்கு லீவ் போட்டிருக்கா.)
"எல்லாம் குருவின் மகிமை!"
மேலோட்டமா பார்த்த சிலருக்கு இது சாதாரணமா தெரியலாம். ஆனா மெடிக்கல் டெஸ்ட் / எக்ஸ்-ரே இதெல்லாம் எடுத்திட்டு ரிசல்ட்டுக்கு காத்திருப்பவர்களுக்கு தெரியும் அந்த கணங்கள் எத்தனை கொடுமையானவை என்று. ரிசல்ட் கொஞ்சம் அப்படி இப்படி என்று வந்தால் கூட நமது நிம்மதியையும் அன்றாட வாழ்க்கையையும் அது பாதித்துவிடும். மேலும் கால்களின் முட்டி பகுதி என்பது மிகவும் சென்ஸிட்டிவான ஒரு பகுதி. ஒரு சிறிய விரிசல் / அதிர்ச்சி ஏற்பட்டால் கூட நடப்பதே சிரமம் என்று ஆகிவிடும். மகா பெரியவாவின் மகிமையை நான் கேட்டுக்கொண்டிருந்தது தான் வந்த வினையை தூர விரட்டியடித்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
மேலும் ஒருவேளை நான் குரு மகிமை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாது வழக்கம்போல வீட்டுக்கு போய்க்கொண்டிருக்கும்போது அப்பா எனக்கு இந்த விஷயத்தை சொல்லியிருந்தால் நான் அந்த பதட்டத்திலேயே பைக்கை ஒட்டிக்கொண்டு போய் நான் எங்காவது விழுந்திருப்பேன். பங்க்ஷன் நேரத்துல ஏதாவது ஆச்சுன்னா எல்லாம் பாதிக்கும் இல்லையா?
இதையெல்லாம் அறிந்து தான் மகா பெரியவா என்னை கிருஷ்ண கான சபாவுக்கு வரவழைத்து அங்கே ஒரு மணிநேரம் உட்கார வைத்துவிட்டார் போல…
வினைக்கு வினையை துரத்தியது போலவும் ஆச்சு… தன்னுடைய பெருமையை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பேசும் ஒரு கடைநிலை பக்தனுக்கு அருள் பாலித்தது போலவும் ஆச்சு…
இப்போதும் சொல்கிறேன்… இருவினையை தீர்க்கவல்லது குருவின் பெருமையை கேட்பது. இதைவிட அதற்கு நேரடி உதாரணம் வேண்டுமா?
Courtesy:Mr.Sundar


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator