Thursday 9 October 2014

கேள்வி : உணவு பற்றி சங்கராச்சாரியார் ஒரு கதை கூறியிருப்பதாகச் சொன்னீர்களே – அது என்ன கதை?

கேள்வி : உணவு பற்றி சங்கராச்சாரியார் ஒரு கதை கூறியிருப்பதாகச் சொன்னீர்களே – அது என்ன கதை?

பதில்-'சோ'

நன்றி-அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன் & பால ஹனுமான்.

சோ : ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு குரு போன்ற ஒரு தபஸ்வி இருந்தார். தர்ம சாஸ்திரங்களில் எல்லாம் என்னென்ன நற்குணங்கள் கூறப்பட்டிருக்கின்றனவோ – அத்தனை நற்குணங்களும் பொருந்திய, ஒரு விவேகி அவர். ஒரு நாள், அவருக்கு தனது அரண்மனையில் விருந்து வைக்க விரும்பிய அரசன், அவரைப் பணிவுடன் அழைத்தான்.

அவர் 'வேண்டாம். அரண்மனையில் எல்லாம், நான் உணவு உட்கொள்வது இல்லை. அரச உணவு, என் போன்றவர்களுக்கு உகந்தது அல்ல' என்று கூறினார். அரசனோ, அவரது மறுப்பை ஏற்பதாக இல்லை. மீண்டும் மீண்டும் அவரை வற்புறுத்தினான். தன்னுடைய மறுப்பு அரசனின் மனதை நோகச் செய்கிறது என்பதை உணர்ந்த அந்த தபஸ்வி, அரசனின் அழைப்பை ஏற்றார்.

அந்தப் பெரியவருக்கு மிகப் பிரமாதமான விருந்து வைக்கப்பட்டது. அவரும் திருப்தியுடன் உணவு உட்கொண்டு எழுந்தார். கை கழுவிவிட்டு, அவர் சற்று அமர்ந்தார். அப்போது, மரியாதை நிமித்தமாக, மற்ற யாரும் அங்கு இல்லாமல், தன்னை தனியே விட்டுச் சென்றிருப்பதைப் பார்த்தார். அரசனை மனதில் பாராட்டியவாறே சுற்றுமுற்றும் அவர் பார்த்தபோது, அந்த இடத்தின் ஒரு பக்கத்தில் ஒரு இருக்கையின் மீது, ஒரு அழகிய முத்துமாலை இருப்பதை அவர் பார்த்தார். அது மிக அருமையான வேலைப்பாடுகளுடன், உயர்ந்த ரக மாலையாக இருந்தது. அதன் அழகு தபஸ்வியைக் கவர்ந்தது. மீண்டும் சுற்றுமுற்றும் பார்த்தார். அப்போதும் அங்கு யாரும் இல்லை.

அந்தப் பெரிய மஹானின் மனதில், அப்போது ஒரு சலனம் ஏற்பட்டது. 'இந்த முத்து மாலையை நாம் எடுத்துச் சென்று விட்டால் என்ன? யாரும் பார்க்கவில்லை. மன்னனுக்கோ, இது ஒரு பெரிய விஷயமில்லை… இந்த ஒரு நகை காணாமல் போனதால், அரசனுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. நமக்கோ, இது மிக உயர்ந்த ஒரு பொருள்… எடுத்துச் சென்று விட வேண்டியதுதான்' என்று யோசித்த அவர், அந்த நகையை எடுத்துச் சென்று விட்டார்.

அவர் சென்ற பிறகு, கொஞ்ச நேரம் கழித்து, அந்த இடத்தில் இருந்த நகையைக் காணவில்லை என்ற செய்தி அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அரசனின் ஆணையை ஏற்று, அதிகாரிகள் இது பற்றி பலரை விசாரித்தனர். பலர் மீது சந்தேகம் எழுந்தது. ஊழியர்கள், சேவகர்கள், அன்று அரண்மனைக்கு வந்து போனவர்கள்… என்று பலர் மீது சந்தேகம் தோன்றியதால், அவர்கள் அனைவரும் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டனர். எவ்வளவோ மிரட்டினாலும் துன்புறுத்தினாலும் கூட, அவர்கள் அனைவரும் தாங்கள் அந்த நகையை எடுக்கவில்லை என்று பிடிவாதமாகக் கூறினார்கள்.இதற்கிடையில், அந்த தபஸ்வி, தனது குடிசைக்குப் போய்ச் சேர்ந்தார். அரசனின் குரு என்கிற அந்தஸ்தைப் பெற்றவரும், ஒரு மஹானைப் போன்று வாழ்ந்தவருமான அவர் மனதில் அப்போது ஆசை வளர்ந்தது. 'இந்த முத்து மாலையைப் போல, விலை உயர்ந்த பொருட்கள் இன்னமும் ஏதாவது நமக்குக் கிடைத்தால், மிக நன்றாக இருக்குமே! ஒரே ஒரு முத்துமாலைதானே கிடைத்திருக்கிறது! இம்மாதிரி நகைகள் அல்லது பொருட்கள் மேலும் கிடைத்தால், நமக்கு நல்ல வாழ்க்கை அமையுமே!' என்றெல்லாம் அவர் மனம் சிந்திக்கத் தொடங்கியது.இவ்வாறு, ஆசையை அடக்க முடியாமல், பிறர் பொருளை விரும்பி அவர் மனம் அலை பாய்ந்தபோது, அவருடைய வயிற்றில் வலி ஏற்பட்டது. பேதி வந்தது. மீண்டும் மீண்டும், வாந்தியும் பேதியுமாக அன்றைய பொழுது கழிந்தது. உடலை வாட்டி எடுத்த இந்த அனுபவத்தைத் தொடர்ந்து, களைப்பு மிகுதியினால் அவர் படுத்துக் கொண்டார்.

சோ : குடலையே அறுத்து விடுகிற மாதிரி, வாந்தி பேதி ஆனவுடன், களைப்பு மிகுதியால், அந்த தபஸ்வி சற்றுக் கண்ணயர்ந்தார். பிறகு விழித்துக் கொண்டவுடன் அவர் மனம் பெரும் வேதனையில் மூழ்கியது. 'இன்று நான் என்ன காரியம் செய்தேன்! இவ்வளவு கேவலமான ஒரு காரியத்தை, திருட்டு வேலையை என்னைப் போன்றவன் செய்வதா? நான் கற்ற தர்மசாஸ்திரங்கள் இதைத்தான் எனக்குக் கூறியதா? நான் ஓதிய மந்திரங்கள் எல்லாம், இப்படி ஒரு இழிவான காரியம் செய்வதற்காகத்தானா? அரசன் என் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறான்! அவன் என் மீது வைத்துள்ள நம்பிக்கைதான் சாதாரணமானதா? அவனுடைய அரண்மனையில் விருந்து உண்டு விட்டு, அங்கேயே இப்படி ஒரு திருட்டை நான் செய்து விட்டேனே! என் புத்தி ஏன் இவ்வளவு கெட்டுப் போய் விட்டது! இனி யார் முகத்தில் நான் முழிப்பேன்! இந்தப் பாவத்தை எப்படித் தொலைப்பேன்!…' என்று பலவாறாக வருந்தினார் அவர்.

கடைசியில், ஒரு முடிவிற்கு வந்தவராக, அவர் மீண்டும் அரண்மனைக்குச் சென்றார். அங்கேயும் கூட பலரும் களவு போன நகையைப் பற்றியும், அதற்காக விசாரிக்கப்பட்டவர்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர். அந்தப் பெரிய மனிதர், அரசனைச் சந்திக்க விரும்புவதாகக் கூறவே, அவர் அரசனின் முன் அழைத்துச் செல்லப்பட்டார். அரசனைப் பார்த்ததும், குற்ற உணர்வு மேலிட, தயங்கித் தயங்கி அந்தப் பெரியவர், 'மன்னா! உன் அரண்மனையில் காணாமற் போன முத்து மாலையை எடுத்தவன் நான்தான்!' என்றார்.

அரசன் சிரித்தான். 'என்ன, விளையாடுகிறீர்களா? நீங்களாவது நகையை எடுப்பதாவது? உங்கள் தவ வலிமைக்கு முன்னால் பொன்னும், பொருளும் எம்மாத்திரம்? ஒருவேளை, இங்கே பலர் கடுமையாக விசாரிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவர்களைக் காப்பாற்றுவதற்காக இப்படிச் சொல்கிறீர்களா?'

இவ்வாறு அரசன் பேசியதைக் கேட்டு, ஏற்கெனவே நொந்து போயிருந்த தபஸ்வியின் மனம், மேலும் வருந்தியது. இவ்வளவு தூரம் தன்னை மதிக்கிற அரசனின் அரண்மனையில் நாம் இப்படி நடந்து கொண்டோமே என்று வருந்தியபடியே, தன்னிடம் இருந்த முத்து மாலையை அரசனிடம் கொடுத்து 'நான் உண்மையைத்தான் சொல்கிறேன்' என்றார்.

அப்போதும் அரசன் திருட்டுக் காரியம் செய்தது அவர்தான் என்பதை ஏற்க முடியாமல், 'எனக்குப் புரிந்து விட்டது. இதை இங்குள்ள ஒருவன் திருடியிருக்கிறான். நடக்கிற விசாரணை, விசாரிக்கப்படுகிறவர்கள் அனுபவிக்கிற சித்ரவதை ஆகியவற்றைப் பார்த்து, பயந்து, உங்களிடம் ஓடி வந்து, நகையைக் கொடுத்துத் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டிருக்கிறான். அதனால்தான் நீங்கள் இப்படிப் பேசுகிறீர்கள். உங்களுடைய கருணைதான், உங்களுடைய இந்தப் பேச்சுக்குக் காரணம்' என்றான்.

அந்த அரசனுக்கே குருவான அவர் சொன்னார்: 'நீ நினைக்கிற மாதிரி நேர்மை உடையவனாகத்தான் நான் இருந்தேன். ஆனால், இன்று எனக்கு ஏனோ இந்தக் கேவலமான எண்ணம் வந்துவிட்டது. ஏற்கெனவே திருட்டுக் குற்றம் செய்த பாவம் எனக்கு வந்தாகி விட்டது. இப்போது, பல அப்பாவிகள் சித்ரவதை அனுபவிப்பதற்கும் காரணமாகி, மேலும் பாவத்தைச் சம்பாதித்துக் கொள்ள நான் விரும்பவில்லை. மற்றவர்களை விடுதலை செய். தண்டனைக்குரியவன் நான்தான்' என்றார் அவர்.மனம் வருந்தி அவர் கூறிய வார்த்தைகள் அரசனின் மனதை உருக்கின. 'நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று கேட்டான் அவன்.'எனக்கே தெரியவில்லை. வழக்கத்திற்கு விரோதமாக ஏதோ நடந்திருக்கிறது. அப்படிப் பார்த்தால், அரண்மனை விருந்து உண்டதுதான், இன்று நான் என் வழக்கத்திற்கு விரோதமாகச் செய்த காரியம். நீயோ மக்களின் நலனுக்காக வாழ்கிற அரசன். உன் நலத்தைக் கூடக் கருதாமல் மக்கள் நலனைப் பேணுகிற உன் அரண்மனை விருந்து, என் புத்தியில் இப்படிப்பட்ட கேவலமான எண்ணத்தை ஏற்படுத்தாது. பின் ஏன் இந்தப் புத்தி வந்ததோ, தெரியவில்லை' என்றார் குரு.
அரசனின் மனதில் திடீரென்று ஒரு யோசனை பிறக்க, அரண்மனை அதிகாரிகளை வரவழைத்தான். 'இன்று இவருக்கு நாம் வைத்த விருந்துக்கான உணவு எப்படித் தயாரிக்கப்பட்டது? அந்த உணவின் விவரங்கள் என்ன? இவருக்கு இங்கே பரிமாறப்பட்ட உணவு வகைகள் எங்கிருந்து வந்தன? எல்லா விவரமும் எனக்குத் தெரிய வேண்டும்' என்றான்.

அதிகாரிகள், அரண்மனை சமையலறைக்கு விரைந்தார்கள்.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator