Monday 24 February 2014

சதுரகிரி தல வரலாறு :

சதுரகிரி தல வரலாறு : 

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.

சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். 
மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.

இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. 

இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி. 

கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம். 

இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.

இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.

""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.

வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது.
[p91a.jpg]

தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.

சுந்தரமூர்த்தி

கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

பார்வதி பூஜித்த லிங்கம் : சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்

இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.

இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

லிங்க வடிவ அம்பிகை

சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator