விமான { பயணம் } ரகசியங்கள்!
விமானப் பயணத்தின்போது நிறைய திகிலான விஷயங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன
விமானம் என்றாலே சுவாரஸ்யம்தான்.
விமானத்தைப் பற்றி படிக்க விமானத்தில் சென்றிருக்க வேண்டுமா என்ன?
விமானிகளிடமும் விமானப் பணியாளர்களிடமும் வேலைபார்த்த, வேலைபார்க்கிற சிலரிடமும் மனம்விட்டுப் பேசியபோது கிடைத்த ரகசியங்கள் இவை.
ஒருவேளை படித்த பிறகு, இனி எங்கே போனாலும் பொடிநடையாகப் போய்விடலாம் என்று நீங்கள் நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல.
முகமூடி ரகசியம்
விமானத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டு, உங்கள் முகத்துக்கு நேராக திடீரென ஆக்சிஜன் மாஸ்குகள் தொங்கும்.
விமானத்தின் கூரை முழுக்க ஆக்சிஜனாக நிரப்பியிருப்பார்கள்.
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தாங்கும் என்ற மிதப்பு வேண்டாம்.
அதிகபட்சம் அது 15 நிமிஷங்களுக்குத் தான்.
ஐயையோ! அவ்வளவுதானா என்று அலறவும் வேண்டாம்.
அதற்குள் பைலட், விமானம் பறக்கும் உயரத்தைக் குறைத்து ஆக்சிஜன் இருக்கும் காற்று மண்டலத்துக்குக் கொண்டுவந்துவிடுவார்.
எனவே, ஆக்சிஜன் மாஸ்கை முதலில் நீங்கள் மாட்டிக்கொள்ளுங்கள்,
குழந்தை மீது உள்ள பாசத்தில் அதற்கு முதலில் ஆக்சிஜனை வழங்க எத்தனிக்க வேண்டாம்.
குழந்தை உங்களைவிட அதிக வினாடிகள் ஆக்சிஜன் இல்லாமல் தாக்குப் பிடிக்கும்.
முதலில் நீங்கள் சுருண்டுவிழாமல் பார்த்துக்கொண்டு, பிறகு நிதானமாகக் குழந்தைக் கும் மாஸ்கைப் பொருத்துங்கள்.
தண்ணீர் ரகசியம்
விமானத்தில் பாட்டிலில் தரப்படும் தண்ணீரை மட்டும் குடியுங்கள்.
ஏனென்றால், குடிக்கவும், விமானக் கழிவறையில் பயன்படுத்தவும் பெரும்பாலும் ஒரே இடத்தில்தான் தண்ணீரை நிரப்புகிறார்கள்.
இரு பயன்பாட்டுகளுக்குமான தண்ணீர் தொட்டி ஓரடி இடைவெளியில்தான் இருக்கின்றன.
அதேபோல, குறிப்பிட்ட சில இடைவெளிகளில்தான் தண்ணீர்தொட்டியைச் சுத்தப்படுத்துகிறார்கள்.
அந்த நீரில் ஒட்டுண்ணிகள் இருக்க வாய்ப்புண்டு.
அந்த ஒட்டுண்ணிகள் பல நாடுகளைச் சுற்றிவருவதால் எந்த பூச்சிக்கொல்லிக்கும் சாகாமல் இருக்க வரம் பெற்றவை!
குடிப்பது மட்டுமல்ல, கையைக் கழுவுவது, வாயைக் கொப்பளிப்பதுகூட ஆபத்துதான்!
டிப்ஸ் ரகசியம்
விமானப் பணிப்பெண்களுக்கு யாரும் டிப்ஸ் தருவதில்லை.
ஆனால், முதலில் பானம் தரும்போது கொஞ்சமாக டிப்ஸ் தந்தால், அடுத்தடுத்த முறை நல்ல கவனிப்பு இருக்கும் என்று அனுபவஸ்தர் கூறுகிறார்.
எச்சரிக்கை - எல்லோருமே டிப்ஸை ஏற்பார்கள் என்று சொல்லிவிட முடியாது.
பைலட்டுகள் தூங்குவார்களா?
பைலட்டுகளில் பாதிப் பேர் நீண்ட பயணத்தின் போது இடையில் தூங்குவார்கள்!
கண்விழித்துப் பார்க்கும்போது உடன் வேலைசெய்யும் பைலட்டும் தூங்குவதைப் பார்த்துக் கோபப்படுவார்கள்.
வேலை நேரத்தில் துணை விமானி தூங்கினால் விமானிக்குக் கோபம் வராதா என்ன?
பெரிய நிறுவனம் என்றால் ஒஸ்தியா?
மிகப் பெரிய நிறுவனத்தின் விமானத்தில் செல்லும்போது பைலட்டும் நல்ல அனுபவம் பெற்றவராக இருப்பார் என்று நினைத்துவிட வேண்டாம்.
அவர்கள் உள் ஒப்பந்தத்தில் உள்ளூரைச் சேர்ந்த கற்றுக்குட்டி பைலட்டைக் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்துவதும் நடக்கக்கூடியதே!
அதிக நேரம் ஓட்டினால் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதால், அந்தப் பைலட்டுகள் மெதுவாகவே ஓட்டுவதும் உண்டு.
செல்பேசி என்ன வெடிகுண்டா?
செல்போன் உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களை விமானம் பறக்கும்போது பயன்படுத்தக் கூடாது என்பதில் பாதுகாப்புக் காரணங்கள் ஏதும் இல்லை.
இவற்றைக்கொண்டு விமானத்துக்குச் சேதம் விளைவித்துவிட முடியாது.
செல்போன் பேச அனுமதித்தால் ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள், "ஹலோ, நான் புறப் பட்டுட்டம்மா, ரவைக்கு இட்லி, சட்டினி போதும்மா" என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
அது பைலட்டுக்கு சிக்னல்களைப் பெறுவதில் இடைஞ்சலாக இருக்கும் என்பதால்தான் செல்லை மூடிவைக்கச் சொல்கிறார்கள்.
அப்படியும் சிலர் தடையை மீறிப் பேசுவதால், பைலட்டுகள் மேலே உயரம் பிடிக்க முடியாமலோ, தரை இறங்க முடியாமலோ அவதிப்பட்டிருக்கிறார்கள்.
ஹெட் போன் கதையும் அதுதான்!
விமானத்தில் ஏறியதும் தரப்படும் ஹெட்போன்கள் புதிதல்ல. ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டதை ஒவ்வொரு பயணத்தின்போதும் துடைத்து புதிய கவரில் போட்டு புதிதுபோலத் தருவார்கள்.
சுத்தம் சுகாதாரம் எப்படி?
தலையணை, போர்வைகளை எல்லா நேரமும் துவைத்து, காயவைத்து எடுத்துத்தருவார்கள் என்று நினைக்க வேண்டாம்.
ஒரு பயணம் முடிந்ததும் அப்படியே பதவிசாக மடித்து எடுத்துவைப்பார்கள்.
கேட்கும்போது புன்சிரிப்போடு தருவார்கள்.
நாமும் சுகந்தமான வாசனையில் மனதைப் பறிகொடுத்து வாங்கிக்கொள்வோம்.
வாசனை பணிப்பெண்ணிடமிருந்து வந்தது என்று நமக்குத் தெரியாது!
மிகப் பெரிய நகரில் காலையில் புறப்படும் முதல் விமானத்தில் மட்டுமே உண்மையில் துவைத்து சுத்தப்படுத்திய போர்வைகள், தலையணைகள் ஏற்றப்படும்.
அதேபோல, உங்கள் சீட்டின் முன்னால் இருக்கும் ட்ரே பரிசுத்தமானது என்று நினைத்து, அதில் வேர்க்கடலை, பொரித்த வற்றல் - வடாமெல்லாம் வைத்துச் சாப்பிடாதீர்கள்.
உங்களுக்கு முன்னால் பயணம் செய்த தம்பதியின் குழந்தை அதில் 'சூச்சா' போய் காய்ந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
கழிப்பறையில் ஆஷ்-டிரே ஏன்?
விமானங்களில் புகை பிடிக்கக் கூடாது என்ற விதி பல ஆண்டுகளாகக் கண்டிப்புடன் அமல் படுத்தப்படுகிறது.
அப்படியும் சில புகை அடிமைகள் கழிப்பறைக்குப் போய் ரகசியமாக பற்றவைப்பது உண்டு.
குப்பை போடும் கூடையில் போட்டால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று வேறு எங்கு போடுவது என்று யோசிப்பார்கள். "பிடித்து விட்டாயா, இதிலே போட்டுத்தொலை" என்ற ரீதியில்தான் ஆஷ்-டிரேயை வைக்கிறார்கள்.
பைலட் எப்படித் தரை இறங்குகிறார்?
மழை பெய்து தண்ணீர் நிறைந்த ஓடுபாதையில் டமால் என்ற ஓசையுடன் விமானத்தின் சக்கரங்கள் மோதிக் குலுங்கிய பிறகு விமானம் ஓடும்.
பைலட்டுக்கு அனுபவம் போதாது என்பதால் இப்படி நேர்வதில்லை, வேண்டுமென்றேதான் இப்படிச் செய்வார்கள்.
தண்ணீரில் வேகமாக அமிழ்ந்தோ அல்லது கிழித்துக்கொண்டோ சென்றால்தான் தரைக்கும் விமானச் சக்கரத்துக்கும் இடையே உராய்வு ஏற்பட்டு, சக்கரம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
இல்லாவிட்டால், வழுக்கிக்கொண்டே போய் விபத்தை ஏற்படுத்திவிடும்.
விமானம் தரையிறங்குவதே 'கட்டுப்பாடான நொறுங்கல்தான்' என்பார்கள்.
விமானம் கடத்தப்பட்டதை அறிவது எப்படி?
கடத்தல்காரர்களின் பிடியில் விமானம் இருக் கும்போது தரையிறக்கும் பைலட், அதன் சிறகுகளில் இருக்கும் மடிப்புப் பட்டைகளை மேல்நோக்கி இருக்கும்படி வைத்திருப்பார்.
அவர் சொல்லாமலே இது மற்றவர்களுக்குப் புரிந்துவிடும்.
வெடிகுண்டு அபாயம்
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலிருந்து டோக்கியோவுக்கு விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
பசிபிக் பெருங்கடலின் மீது பறந்தபோது விமானிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
"விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது, கடைசிப் பயணத்துக்கு வாழ்த்துகள்" என்று ஒரு சதிகாரன் எச்சரித்தான்.
விமானத்தின் முதல் வகுப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலர் இருந்தனர்.
விமானம் ஒவ்வொருமுறை குலுங்கியபோதும் பைலட்டுக்கு அவருடைய இதயமே தொண்டைக்கு வருவதைப்போன்ற பதற்றம் ஏற்பட்டது.
கடைசியில் அது வெறும் புரளி என்று தெரியவந்தது.
இந்த வெடிகுண்டு எச்சரிக்கையைப் பயணிகளுக்கு அவர் தெரிவிக்கவில்லை.
அது அவசியமும் இல்லை!
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.
No comments:
Post a Comment