Saturday 12 April 2014

ஸ்ரீ புரந்தரதாஸர் (AD 1485 - 1564)

ஸ்ரீ புரந்தரதாஸர் (AD 1485 - 1564)
பாடல்கள் மூலம் பக்தியை பரப்புவதில் தமிழகத்தில் ஆழ்வார்களைப் போல், கர்நாடகத்தில் ஹரிதாஸர்களின் பங்கு மகத்தானது. கடவுளின் பக்தி, மகிமை, அருமை பெருமைகள், இல்லத்தரசனின் கடமைகள், வாழ்க்கை நெறிமுறைகள் இப்படி பலதரப்பட்ட தலைப்புகளில் பலப்பல பாடல்களை பாடியுள்ளனர் ஹரிதாஸர்கள். அனைத்தும் இனிய, எளிய கன்னடத்தில்.

இந்த ஹரிதாஸர்களில் முதன்மையானவர் - நாரதரின் மறுஅவதாரமாக கருதப்படும் ஸ்ரீ புரந்தரதாஸர் ஆவார். தாஸரின் புண்ணிய தினமான நாளை (2/2/2014 ), அன்னாரின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது சிறப்பினையும் தெரிந்து கொள்வோம்.

கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என்று அழைக்கப்படுகிறார் தாஸர்.

(கர்நாடக) இசையின் மூலம் பாடல்கள் இயற்றி, கடவுள் வழிபாடு செய்யலாம் எனும் முறை தாஸரின் காலத்திலேயே துவங்கியது.

**

ஸ்ரீனிவாசர் ஒரு வட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார். சாப்பிட்ட கையால் காக்கா என்ன, குருவி கூட ஓட்ட மாட்டார். வாலிப வயசில் எல்லாருக்கும் இருக்கும் அதே மனோபாவம் - கடவுளாவது ஒண்ணாவது, நம்ம தொழில், குடும்பம் எல்லாம் நம்ம சொந்த சரக்கில் நடப்பது. கடவுளை ரிடையர் ஆனப்புறம் பாத்துக்கலாம். இப்போ என்ன அவசரம். இதே மாதிரிதான் போயிட்டிருந்தது.

ஆனா அவர் வீட்டிலே இவருக்கு எதிர். புருஷன் பொண்டாட்டின்னாலே எதிர்-புதிர்தானேன்னு கேட்கப்படாது. திருமதி. சரஸ்வதிபாய், கடவுள் பக்தி கொண்டவர். பாவச் செயல்கள் செய்வதற்கு மிகவும் பயந்தவர். மிகவும் கருணை மனம் கொண்டவர். வந்தாருக்கு (கணவனுக்குத் தெரியாமல்) அள்ளிக் கொடுப்பவர். காக்கா ஓட்டணும்னாக்கூட கையில் எதையாவது எடுத்துக்கொண்டே ஓட்டுவார்னா பாத்துக்கங்க.

இப்படியே போயிட்டிருக்கும்போது, அந்த D-dayயும் வந்தது.

நம்ம ஸ்ரீனிவாசர் கடைக்கு போயிருக்காரு. அம்மா வீட்டில் வழக்கம்போல் பூஜை, புனஸ்காரம். அப்போ வெளியில் ஒருத்தர் - அம்மா, அம்மான்னு கூப்பிடுறாரு. என்னன்னு கேட்டா - என் பையனுக்கு உபநயனம் பண்ணனும். தயவு செய்து ஏதாவது பொருளுதவி பண்ணுங்கன்னு வேண்டி நிக்கறாரு. இவங்களுக்குத்தான் உதவின்னு யாராவது கேக்கமாட்டாங்களானு இருக்கே. ஆனா நம்மாளு பீரோ, பெட்டி எல்லாத்தையும் பூட்டிக்கிட்டு போயிட்டாரு. என்ன பண்றதுன்னு தெரியலியேன்னு யோசிச்சிட்டிருக்கறப்போ, ஒரு பளிச். பளிச்சுன்னு இருக்கிற தன் மூக்குத்தியை எடுத்து கொடுத்துட்டாங்க.

வந்தவரும் ரொம்ப நன்றிம்மான்னு சொல்லி போறாரு. பணம் கொடுத்தாலாவது எதாவது செலவு செய்யலாம், மூக்குத்தியை வெச்சிக்கிட்டு என்ன பண்றது? அடகு இல்லேன்னா வித்துறணும்னு ஒரு கடைக்குப் போறாரு. இதுக்குள்ளே உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். ஆமா. நம்ம ஸ்ரீனிவாசர் கடைக்கே போறாரு.

பொதுவா ஆம்பிளைங்களுக்கு வீட்டுக்கு வாங்கிக் கொடுத்த ஆடை, அணிகலன்கள் எதுவும் நினைவில் இருக்காது. இது எப்போ வாங்கினோம், அது எங்கே எடுத்தோம்னு கேட்டு 'திட்டு' வாங்கறது வழக்கம். ஆனா, அன்னிக்கு ஏதோ ஒரு அதிசயம் நடக்கப்போறதால், ஸ்ரீனிவாசருக்கு - ஆஹா, இது நம்ம வீட்டுதாச்சே.. இந்தாளுகிட்டே எப்படி வந்துச்சு. பாத்தா இதை வாங்கற அளவுக்கு வசதி இருக்கறமாதிரியும் தெரியலியேன்னு யோசிக்கிறாரு.

அவரை ஒரு நிமிஷம் உக்காருங்கன்னு சொல்லிட்டு, வீட்டுக்கு ஓடறாரு. சரஸ்வதி, சரஸ்வதின்னு கூப்பிடுறாரு. சாயங்காலம் வரக்கூடிய பிராமணன், திடுதிப்புன்னு வந்து நிக்குறாரே, என்னவா இருக்கும்னு நினைச்சிக்கிட்டே வந்த அம்மா, என்னங்க, என்ன விஷயம்னு கேக்கறாங்க. இவரோ அவங்க மூக்கையே பாக்கறாரு. உன் மூக்குத்தி எங்கே?

ம். அது வந்து. அது வந்துங்க. சுத்தம் பண்ணலாம்னு கழட்டி வெச்சேன். திரும்பி மாட்டிக்க மறந்துட்டேன். மூக்குத்தி உள்ளேதான் இருக்கு.

சரி. போய் எடுத்துட்டு வா.

அவ்வளவுதான். சரஸ்வதி அம்மாவுக்கு உடம்பெல்லாம் ஆடிப் போச்சு. இவ்வளவு நாளா கணவன்கிட்டே இப்படியொரு பொய் சொன்னதேயில்லையே. இன்னிக்கு வசமா மாட்டிக்கிட்டோமே. அந்த மூக்குத்தியை நான் தானம் பண்ணிட்டேன்னு தெரிஞ்சா பயங்கரமா சத்தம் போடுவாரேன்னு பயந்துட்டே உள்ளே போறாங்க. உள்ளேதான் மூக்குத்தி இல்லையே? வேறென்ன பண்றது. கடவுள்கிட்டே வேண்டிக்க போறாங்க. கடவுளே, என்னை மன்னிச்சிடு. நான் பொய் சொல்லிட்டேன். இப்போ அவர்கிட்டே போய் உண்மையை சொல்லிட போறேன். அவர் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறேன்னு சொல்லி பிரார்த்தனை பண்ணும்போது - அந்த பரந்தாமன், பக்தர்கள் கஷ்டத்தை போக்கும் கருணைக்கடல், சும்மா இருப்பானா? முன்னால் இருக்கும் பாத்திரத்தில் ஒரு 'டக்'. பாத்தா அதே மூக்குத்தி. எடுத்துக்கிட்டு வந்து காட்டறாங்க ஸ்ரீனிவாசர்கிட்டே. அவர் சந்தேகத்தோடு கேட்க, அப்போ எல்லா உண்மையையும் சொல்லிடறாங்க சரஸ்வதியம்மா.

வந்தது அந்த நாராயணன்தான்னு தெரிஞ்சுது. அவ்வளவுதான். ஸ்ரீனிவாசருக்கு கண்ணீர் அப்படியே கொட்டறது. ஸ்ரீனிவாசா, வேங்கடரமணா, தப்பு பண்ணிட்டேன். தப்பு பண்ணிட்டேன். இவ்வளவு வருஷமா வாழ்க்கையை வீணாக்கிட்டேன். இனிமே எனக்கு எல்லாமே நீதான். வேறே எதுவும் வேணாம்னு சொல்லிட்டு - இருந்த எல்லா செல்வங்களையும் தானம் செய்துடறார். இனிமே பகவத் சேவைதான் வாழ்க்கைன்னு தீர்மானம் பண்ணி, அதுக்கு உடனடியா ஒரு தகுந்த குருவை பிடிக்க, யாரைப் போய் பாக்கறதுன்னு யோசிக்கறப்போ, ஸ்ரீ வியாசராயரை போய் பார்க்கலாம்னு முடிவு பண்ணி போறாங்க.

விஜயநகர சாம்ராஜ்யத்தில் கிருஷ்ணதேவ ராயரின் சபையில் ராஜகுருவாக இருந்த ஸ்ரீ வியாசராயர், ஸ்ரீனிவாசருக்கு ஆசியளித்து தன் சிஷ்யராக ஏற்றுக் கொண்டார். அவருக்கு புரந்தரதாஸர் என்று பெயரிட்டு, மக்களுக்கு ஞான, பக்தி, வைராக்கியத்திற்கான பாடல்களை கன்னடத்தில் அனைவருக்கும் புரியுமாறு இயற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

புரந்தரதாஸரும் குருவின் வேண்டுகோளுக்கிணங்க, பல பாடல்களை (தேவரநாமாக்களை) இயற்ற ஆரம்பித்தார். தன் எல்லா பாடல்களிலும் இறுதி வரியில் 'புரந்தர விட்டலா' என்று தன் கடவுளை அழைத்து அவருக்கே அந்த பாடல்களை அர்ப்பணித்தார். மனித வாழ்க்கையின் மூன்று தூண்களான ஞானம் (அறிவு), பக்தி, வைராக்கியத்தை தன் அனைத்து பாடல்களிலும் வலியுறுத்தி பாடியுள்ள தாஸர், தன் வாழ்நாள் முழுக்க எண்ணத்திலும், செயலிலும் எளிமையையும் தூய்மையையும் கடைபிடித்து மற்றவர்களுக்கும் அதையே அறிவுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசையில் ஆரம்ப பாடமாக சொல்லித் தரப்படும் 'மாயாமாயவகௌள' ராகத்தை வடிவமைத்தவர்.

கர்நாடக சங்கீதத்தை எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பதை நெறிமுறைப்படுத்தியவர் நம்ம தாஸர்.அந்த நெறிமுறையே இன்றளவும் பயன்படுத்தப் படுகிறது.

முதலில் பண்டரிபுரத்திலும், பின்னர் ஹம்பியிலும் வாழ்ந்து தன் காலம் முழுவதையும் பாடல்களை பாடிய தாஸர், தன் வாழ்நாளில் லட்சக்கணக்கில் பாடல்கள் இயற்றியுள்ளார் என்று சொல்லப்பட்ட போதிலும், நமக்கு கிடைத்துள்ள்வை ஆயிரக்கணக்கிலேயே ஆகும்.

இந்த நன்னாளில் தாஸரின் பாடல்களை பாடி, கேட்டு அந்த புரந்தர விட்டலனின் அருளுக்கு பாத்திரமாவோம்.

ஜெய் ஜெய் விட்டலா. பாண்டுரங்க விட்டலா..
ஜெய் ஜெய் விட்டலா. புரந்தர விட்டலா..


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator