அம்பது,அறுபது மூட்டை என்று அன்னத்தை வடித்து அபிஷேகம் செய்வது - அன்னம் Criminal Waste ஆகிவிடுகிறது.!
சொன்னவர்-பழக்கடை. பி.ஆர்.தியாகராஜன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
குடந்தை ஸ்ரீ மடத்துக்கு எதிர்வீட்டில் ஒரு டாக்டர் இருந்தார். ஆஸ்திகர்; பெரியவாளிடம் பக்தியுடையவர்.
கங்கை கொண்ட சோழபுரம் ஸ்ரீ பிருஹதீஸ்வரர் அன்னாபிஷேகத்துக்கு நன்கொடை கேட்கச் சென்றேன். என்னை நாற்காலியில் உட்காரச் சொன்னார்.
"பெரியவாளிடம், நான் சொன்னதாக,தைரியமாகச் சொல்லு. இப்படி அம்பது,அறுபது மூட்டை என்று அன்னத்தை வடித்து அபிஷேகம் செய்வது - அன்னம் Criminal Waste ஆகிவிடுகிறது. அதற்குப் பதிலாக, ஏழைகளுக்கு, தலைக்கு ஒரு மரக்கால் அரிசி கொடுத்தால் கூடப் புண்ணியம்-என்று, நான் கூறியதாகச் சொல்லு".
அன்னாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. விபரம் தெரிவிப்பதற்காகப் பெரியவாள் தரிசனத்துக்குச் சென்றேன். டாக்டர் கூறிய தகவலை, மிகவும் பயபக்தியோடு தயங்கித் தயங்கிக் கூறினேன்.
"அப்படியா?" என்றார்கள். பெரியவா.
கைங்கரியம் செய்யும் சிஷ்யரைக் கூப்பிட்டு, மூன்று நாள் முந்தைய ஹிந்து பேப்பரைக் கொண்டு வரச் சொன்னார்கள். அதில் ஒரு செய்தியை குறிப்பிட்டுக் காட்டி, "இந்தப் பேப்பரை, கும்பகோணம் டாக்டரிடம் காட்டு" என்றார்கள்.
பத்திரிகையில் வந்த செய்தி;
ஒரிஸாவில் பல லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்டு, நன்றாக விளைந்து,அறுவடை செய்ய வேண்டிய நேரம். அறுவடை ஆனபின் பல கோடி வியாபாரம் நடக்கும். ஆனால், திடீரென்று ஏற்பட்ட பெரும் புயலில் பயிர் நிலங்களில் ஐந்து அடி உயரத்துக்கு மண் மேடிட்டு,அத்தனை விளைச்சலும் நாசமாயிற்று.
படித்துப் பார்த்தார்,டாக்டர்,கண் கலங்கியது.
"பாவி.....பாவி.....! ஐம்பது,அறுபது மூட்டை வேஸ்ட் என்றேனே..பாவி.."
வடக்கு நோக்கி (காஞ்சிபுரம் இருந்த திசை நோக்கி)க் கும்பிடு போட்டார்.கன்னத்தில் போட்டுக் கொண்டார் "மன்னிச்சுடுங்கோ"என்று வேண்டினார்.
அடுத்த ஆண்டு அன்னாபிஷேக நன்கொடைக்கு நான் அவரிடம் போகவில்லை. அவரே என்னைக் கூப்பிட்டு எதேஷ்டமாக நன்கொடை கொடுத்தார். |
No comments:
Post a Comment