ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்கலாம்!
ஜீவா.
ஒடிசா மாநிலம். பிப்லி பகுதி. 26 வயதுப் பெண். பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறாள். மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறார்கள். ஆம்புலன்ஸ் வருகிறது. ஆம்புலன்ஸில் அந்தப் பெண்ணை ஏற்றுகிறார்கள். 15 நிமிடத்தில் அந்தப் பெண் ஓர் அழகான பெண் குழந்தையை ஆம்புலன்ஸிலேயே பெற்றெடுக்கிறாள்.
மருத்துவமனையில் இருப்பதைப் போன்று பிரசவம் பார்க்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது, அந்த ஆம்புலன்ஸில் உள்ள ஒரு ஸ்ட்ரெச்சர். அதை வடிவமைத்தவர் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண், காயத்ரி மோகன். இந்தப் புதுமையான வடிவமைப்புக்காக காயத்ரி மோகனுக்கு ஐஐஎட 2014 விருது கிடைத்திருக்கிறது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவருடைய தொழிற்சாலையில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.
முதலில் இருந்தே இந்தத் தொழிற்சாலை வேலைகளில்தான் ஈடுபட்டீர்களா?
நான் தியரிட்டிகல் பிஸிக்ஸில் பி.எச்டி படித்தவள். சென்னை லயோலா கல்லூரியில் 20 ஆண்டுகளாகப் பேராசிரியையாக வேலை செய்து வந்தேன். என் அப்பாவும், சித்தப்பாவும் ஸ்ட்ரெச்சர் செய்யும் "ரைட் புராடக்ட்ஸ்' என்ற தொழிற்
சாலையை நடத்தி வந்தார்கள். சித்தப்பா ஓய்வு எடுத்துக் கொள்ள, தொழிற்சாலையை நடத்தும் பொறுப்பு என் தலை மேல் வந்து விழுந்தது.
நீங்கள் பொறுப்பேற்றதும் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வந்தீர்கள்?
தொழிற்சாலை இருக்குமிடத்தை அரும்பாக்கத்துக்கு மாற்றினேன். முற்றிலும் புதிய குழுவை ஏற்படுத்தினேன்.
என் அப்பாவின் அனுபவம், என் கல்வியறிவு இரண்டையும் பயன்படுத்தி நாங்கள் செய்து வந்த ஸ்ட்ரெச்சரில் மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்தேன். ஸ்ட்ரெச்சரின் தரத்தில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இருக்கிறேன். நான் பொறுப்பேற்றவுடன் செய்முறைகள் சிலவற்றை மாற்றி அமைத்தேன். சிலவற்றை எளிமைப்படுத்தினேன்.
நீங்கள் தயாரிக்கும் ஸ்ட்ரெச்சர்களின் தன்மை பற்றிச் சொல்ல முடியுமா?
ஆம்புலன்ஸில் பயன்படக் கூடிய ஸ்ட்ரெச்சர்களைச் செய்வதில் கவனம் செலுத்தினேன். 102 ஆம்புலன்ஸில் ஒரு நோயாளியை எடுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்ப்பார்கள். அதற்குப் பயன்படும்வகையில் எளிமையான ஸ்ட்ரெச்சரையும் நாங்கள் தயார் செய்கிறோம்.
108 ஆம்புலன்ஸில் ஒரு நோயாளியை ஏற்றிக் கொண்டு அவரை மருத்துவமனையில் சேர்க்கும் காலம் வரை அவருடைய உயிரைக் காக்கும் அவசர உதவிகளைச் செய்வார்கள். அதற்குத் தேவையான பேஸிக் லைஃப் சப்போர்ட் ஸ்ட்ரெச்சர்களையும் தயாரிக்கிறோம்.
இன்னொரு வகை ஆம்புலன்ஸ் உள்ளது. ஜனனி சிசு சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் செயல்படக் கூடிய தாய், சேய் ஆம்புலன்ஸ். இந்த ஆம்புலன்ஸில் உள்ள ஸ்ட்ரெச்சர், ஆம்புலன்ஸிலேயே பிரசவம் செய்யும் அளவுக்கு வசதியானதாகவும், பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். அதற்காக நாங்கள் வடிவமைத்த ஸ்ட்ரெச்சர்தான் எனக்கு விருது வாங்கிக் கொடுத்தது.
ஸ்ட்ரெச்சர் தயாரித்தற்கு விருதா? யார் கொடுத்தது?
இண்டியன் இனோவேஷன் க்ரோத் புரோகிராம் என்ற அமைப்புதான் எனக்கு விருது கொடுத்தது. 8000 பேர் இந்த விருதைப் பெற விண்ணப்பித்திருந்தார்கள். அதில் 44 பேர் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட்டோம். கோவாவில் எங்களை அழைத்துச் சென்று நாங்கள் செய்யும் தொழில்களை எவ்வாறு மேம்படுத்துவது என்று பல்வேறு ஆலோசனைகளைச் சொன்னார்கள். அதற்காக வகுப்பெடுத்தார்கள். எங்கள் நிறுவனத்தில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.
அதற்குப் பிறகு அவர்கள் சொல்லிக் கொடுத்தவற்றை எங்கள் தொழிற்சாலையில் நடைமுறையில் செய்து பார்க்க டைம் கொடுத்தார்கள். தொழிற்சாலையை எப்படி நாங்கள் மேம்படுத்தியிருக்கிறோம் என்பதை மதிப்பீடு செய்தார்கள்.
44 பேரில் 30 பேரைத் தேர்ந்தெடுத்து அதில் 10 பேருக்கு தில்லியில் விருது கொடுத்தார்கள். விருது பெற்றவர்களின் நானும் ஒருத்தி. இது எனது தொழிற்சாலையில் உள்ள அனைவருக்கும் கிடைத்த விருதாகவே நான் நினைக்கிறேன்.
எந்தத் தொழிலையுமே லாப நோக்கத்துடன் செய்வார்கள். நீங்கள் எப்படி?
இந்தியாவில் பல கிராமங்கள் உள்ளன. சிறிய மருத்துவமனைகள் அங்கே உள்ளன. அங்குள்ள மருத்துவமனைகளுக்குப் பயன்படும் வகையிலும் விலை மலிவாகவும், தரமானதாகவும் ஸ்ட்ரெச்சர்களை நாங்கள் தயாரிக்கிறோம். LOW COST HIGH THOUGHT என்ற வகையில் சமூக அக்கறையுடன் செயல்படுகிறோம்.
ஒரு பொருளைத் தயாரிப்பது எளிது. விற்பனை செய்வது சிரமம். நீங்கள் தயாரிக்கும் ஸ்ட்ரெச்சர்களை விற்பனை செய்ய என்ன செய்கிறீர்கள்?
நாங்கள் தயாரிக்கும் ஸ்ட்ரெச்சர்களை விற்பதற்காக எந்தப் பெரிய முயற்சியையும் நாங்கள் செய்ததில்லை. இந்தியா முழுவதிலிருந்தும் ஸ்ட்ரெச்சர்கள் வேண்டும் என்று எங்களிடம் கேட்கிறார்கள். ஸ்ட்ரெச்சர் தயாரிக்கப் பயன்படும் ஒவ்வொரு பொருளும் தரச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டவையாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தரமான ஸ்ட்ரெச்சர்கள் என்பதால் அவற்றை விற்பனை செய்வது எங்களுக்கு எளிதாக இருக்கிறது.
வெளிநாட்டுப் போட்டி?
வெளிநாடுகளில் தயாரிக்கும் ஸ்ட்ரெச்சர்களை விட, விலை மிகவும் மலிவாக நாங்கள் தயாரிக்கும் ஸ்ட்ரெச்சர்கள் இருப்பதால் அந்தப் போட்டியும் எங்களுக்கு இல்லை |
No comments:
Post a Comment