-காளிங்க நர்த்தனம் காட்டும் தத்துவம்!
கிருஷ்ண பகவான் காளிங்கன் என்னும் ஐந்து தலை நாகத்தின் மேல் நின்று நர்த்தனம் ஆடும் காட்சியும், கதையும் நமக்கு புதிதானது அல்ல.தான் இருந்து வந்த யமுனா நதியையே யாரும் அண்ட விடாமல் தன் விஷ மூச்சால் எல்லோரையும் துரத்திக் கொண்டிருந்த காளிங்கனின் தலை மேல் கிருஷ்ணர் நர்த்தன மாடி, அதன் விஷத்தன்மையை போக்கி,அருள் பாலித்தார். மேலோட்டமாக இந்தக் கதை கிருஷ்ணனின் பெருமையை கூறும் விதமாக இருக்கிறது. ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால், இது மானிடராய்ப் பிறந்த நம் ஒவ்வொருவரின் மூச்சுக் கதையாகும்.!
>
> யோக சாத்திரங்கள் அனைத்தும் மனித மூச்சு, பாம்பு இரண்டையும் எப்போதும் தொடர்பு படுத்தியே வந்துள்ளது. ஏனெனில் இரண்டும் சீறும் குணமுள்ளவை. அமைதியாய் இருக்கும் போது இரண்டும் இருக்கும் இடமே தெரியாது. அமைதியாய் இருக்கும். இரண்டுமே சரசரவென்று ஓடும் இயல்புள்ளவை. மனித மூச்சுக்கு சரம் என்று ஒரு பெயரும் உண்டு. யமுனை என்பது நாம் வாழும் உலகம். காளிங்கனின் ஐந்து தலையும், நம் உடலில் ஓடும் ஐந்து வகையான பஞ்ச பிராணனைக் குறிக்கும். இதில் முதலானது பிராணன். இது இதயத்தில் நிலை பெற்று இயங்குகிறது. நான்கு அறைகளாகப் பிரிக்கப்பட்ட நம் இதயத்தை சீராகத் துடிக்கச் செய்கிறது." கீழ் வரும் ஞானக் குறத்திகூத்து பாடல் இரண்டு வரிகளில் இதயத்தின் வேலையை அழகாய் எடுத்துரைக்கிறது.
>
> "நாலு தூலக் கட்டிலிலே நடுவிருக் கும் கூடத்தே கோல இளவழகி கோடி முறை ஆடுகிறாள்" . பிராணன் மூக்கு வழியாக சென்று வருவதோடு நமக்கு பசி, தாகங்களை உண்டாக்கி உண்ணும் உணவை ஜீரணிக்கச் செய்யும். இரண்டாவது அபானன். குடல் பகுதியில் தங்கியிருக்கும் இந்த வாயு, மலம், மூத்திரம் ஆகிய கழிவுகளை வெளியேற்ற பேருதவியாய் இருக்கிறது. மூன்றாவது வியானன் இது ரத்தத்தோடு உடல் முழுவதும் வியாபித்து நிற்கும். உணவிலிருந்து எடுக்கப்பட்ட சாரத்தை இது உடல் முழுவதும் கொண்டு செல்லும். அதிகமான சாரத்தை கல்லீரலில் சேமிப்பதோடு அதன் வலிமையையும் காக்கிறது. மேலும் கை கால்கள், விரல்கள் ஆகியவற்றை நீட்டவும், மடக்கவும் தேவைப்பட்டபடித் திருப்பவும் உதவுகிறது. நான்காவது உதானன். இந்த வாயு வாயில் உமிழ் நீர் சுரக்கவும், தொண்டையிலும், இரைப்பையிலும் அமிலங்கள் சுரக்கவும், உணவையும் எச்சிலையும் விழுங்க உதவுகிறது. இந்த உதான வாயுவே நமது உணவில் உள்ள சாரத்தைப் பிரிக்க உதவுகிறது. ஐந்தாவதான சமானன் வாயு உடம்பின் உஷ்ண நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. நாம் உண்ட உணவின் சாரத்தைக் குடல் உறிஞ்சிகள் ஈர்த்து ரத்தத்தோடு கலக்க இது உறுதுணையாக இருக்கிறது. காளிங்கன் தான் இருக்கும் மடுவை தன் விஷ மூச்சால் பாழாக்கியது போல், மனிதனும் தவறான பழக்க வழக்கம், மற்றும் உணவு வகைகளால் தன் மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்தும் வழி வகை தெரியாது நோய்வாய்ப் படுகிறான். கீழ்க்கண்டவாறு அல்லலுறுகிறான். மிக உச்ச நிலை ரத்த அழுத்தமும், கொலஸ்ட்ரால்(கொழுப்புக்கட்டிகளும்), அபான வாயுவின் ஆதிக்கமும் பிராணன் என்ற வாயுவை செயலிழக்கச் செய்யக்கூடியவை. அபான வாயுவின் ஆதிக்கம் குறைந்தால் மலச்சிக்கல் வரும். அதிகமானால் வாயுத் தொல்லை. இந்த இரண்டு தொல்லைகளால் பெரும்பாலானோர் அவதிப்படுவது நாம் அறிந்ததே. அது மட்டுமா? அபான வாயுவின் ஆதிக்கம் கூடினால் வயிற்றில் ஜீரணக் கோளாறு , அடிக்கடி ஏப்பம் போன்ற தொந்தர வுகள் தலைக்காட்டும். வியானனோடு அபான வாயு கலந்தால், முடக்கு வாதம் வரும். உதானனோடு அபான வாயு கலந்தால் வாந்தி வரும். சமானன் மனிதனுக்கு சாந்த குணத்தைத் தரும்.
>
> நம் உடலுக்குள்ளே ஓடும் இந்த ஐந்து வகைவாயுக்களையும் கட்டுப்படுத்த ஒரு காக்கும் கடவுள், கிருஷ்ணர் வேண்டுமே! அவர்தான் நாம் தேடிக்கொண்டிருக்கும் குரு! கிருஷ்ணர் ஐந்து தலை நாகத்தை அடக்கியது போல் குரு சொல்லித்தரும் யோக பயிற்சி மூலம் நாம் நம் உடலில் ஓடும் பஞ்சப்பிராணன்களையும் அடக்கி ஆளலாம்.நம் உடலிலும், மனதிலும் உள்ள விஷம் நீங்கும்.வாருங்கள் நாமும் நம் குருவின் அருள் கொண்டு நம்முள்ளே ஓடும் காளிங்கனைக் கட்டுப்படுத்துவோம். மூச்சு நம் வசமானால் மனம் நம் வசமாகும். மனம் நம் வசமானால் வாழ்க்கை நம் வசமாகும். ஐந்து தலையும் சரியாக இயங்கினால், நாமும் மகிழ்ச்சியில் நர்த்தனமாடலாம். எதற்கு நர்த்தனம்? நோயற்ற வாழ்வை வாழும் வழி வகையைத் தெரிந்துகொண்டதால் பொங்கும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே நர்த்தனம். வாருங்கள் நாமும் காளிங்க நர்த்தனம் புரிவோம்!
>
> அர்ச்ச்னா!நீ யோக அறிவைப் பெறுவாயானால் கர்ம பந்தங்களிலி ருந்து விடுபடுவாய். இதில் முயற்சி வீண் போவதில்லை.எதிர்விளைவு ஒன்று மில்லை. இதைச் சிறிதே பழகினாலும் பெரும் பயத்தினின்று இது காப்பாற்றும்! -பகவத் கீதை 2.39.
Posted by: Chandrasekaran V <chandruwesee@gmail.com>
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.
No comments:
Post a Comment