Wednesday, 10 December 2014

குறைப்பிரசவம் தடுக்க... தவிர்க்க

குறைப்பிரசவம் தடுக்க... தவிர்க்க!

பிரேமா நாராயணன், படங்கள்: ஆ.முத்துக்குமார், ச.இரா.ஸ்ரீதர், பா.அருண்

இந்தியாவில் அதிக அளவில் பச்சிளம் குழந்தைகள் மரணத்துக்குக் காரணமாக இருப்பவை குறைமாதப் பிரசவங்களும், அதற்குப் பிறகான நோய்களும்தான். முழுமையான கர்ப்பகாலத்துக்கு முன்பே, குழந்தைகள் பிறப்பதற்கு என்ன காரணம்? முன்னதாகவே பிறக்கும் குழந்தைகள் சந்திக்கக்கூடிய பிரச்னைகள் எவை ? குறைமாதப் பிரசவங்களை எப்படித் தவிர்ப்பது? விரிவாகப் பேசுகிறார், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரும், சென்னை மகப்பேறு மருத்துவமனையின் முன்னாள் இயக்குநருமான டாக்டர்.சிந்தியா அலெக்ஸாண்டர்.

குறைமாதப் பிரசவம் என்றால் என்ன? 

'முழுமையான கர்ப்ப காலம் என்பது 40 வாரங்கள். 34 வாரங்களுக்கு முன்பு நடக்கும் பிரசவங்களை குறைமாதப் பிரசவம் (pre term delivery ) என்கிறோம். இதிலும், 34 வாரங்கள் முடிந்ததும் (late pre term) பிறக்கும் குழந்தைகளுக்கு, பிரச்னைகள் இருக்கும் என்றாலும் ஆபத்து குறைவு. ஆனால், 28 முதல் 34 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகளுக்குத்தான் பிரச்னைகள் அதிகம்'
.
என்ன காரணங்கள்? 

'குறைமாதப் பிரசவத்துக்கு தாயே காரணமாக இருக்கலாம். சில சமயம் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையும் காரணமாகலாம்.

தாயால் உருவாகும் காரணங்கள்:

உடல் எடை: தாயின் உடல் எடை 40 கிலோவுக்கு குறையாமல் இருக்க வேண்டும். 45 கிலோவுக்கு மேல் இருப்பது நல்லது. இல்லாவிடில், குறைமாதப் பிரசவங்கள் நேரக்கூடும்.

வயது: 20 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். மிகவும் சிறிய வயதில், திருமணத்தைத் தவிர்க்க வேண்டும். டீன் ஏஜில் திருமணம் செய்பவர்களுக்கு, குறைமாதப் பிரசவமாக வாய்ப்புகள் அதிகம்.
தாயின் உடல் ஆரோக்கியம்: கர்ப்பம் அடையும் பெண்களின் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியம். நம் நாட்டில் அதிக அளவில் பெண்கள் ரத்த சோகையுடன் காணப்படுகிறார்கள். ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி மற்றும் சி ஆகிய சத்துக்களும் குறைவாகவே இருக்கின்றன. அதனால்தான் அவர்களுக்கு நிறைமாதப் பிரசவம் ஏற்படுவது இல்லை.

சமூக நிலை: நம் நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் அதிகம். ஊட்டச்சத்துக்கள் அற்ற உணவை உண்பதாலும், கட்டட வேலை போன்ற கடுமையான உடல் உழைப்பினாலும், ஒழுங்காக மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ளாமல் விடுவதாலும் அவர்கள் குறைப் பிரசவங்களைச் சந்திக்க நேரிடுகிறது.

மருத்துவக் காரணங்கள்:

கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம் (PIH - Pregnancy Induced Hypertension), கர்ப்பகால சர்க்கரை நோய் (GDM - Gestation Diabetes Mellitus), சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று மற்றும் சில வைரஸ் தொற்று போன்றவை குறைமாதப் பிரசவத்துக்குக் காரணங்கள்.

இந்தக் காரணங்களால் தாயின் உடல்நிலை பலவீனமாகும்போது, குழந்தைக்குச் செல்லும் ஊட்டச்சத்துக்கள், ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டம் போன்றவை குறையும்.உளவியல் காரணங்கள்: ஸ்ட்ரெஸ், அதிகப் பதற்றம், அழுத்தம் கொடுக்கும் பணிச்சுமை போன்றவையும் குறைமாதப் பிரசவங்களுக்குக் காரணங்கள். மரபியல்ரீதியான காரணங்கள்: குடும்பத்தில் யாருக்கேனும் இதுபோன்ற குறைப் பிரசவம் நிகழ்ந்திருந்தால், அவர்களின் வாரிசுகளுக்கும் நடப்பதற்கு வாய்ப்பு உண்டு.

குழந்தையால் உருவாகும் காரணங்கள்:

தாய்க்கு கர்ப்பகாலச் சர்க்கரை நோய் இருந்தால், பனிக்குட நீரின் அளவு (சாதாரணமாக 800 முதல் 1000 மி.லி.) 1500 மி.லி.க்கு மேல் போய்விடும். பனிக்குடத்தின் கொள்ளளவுக்கு மேல் நீரின் அளவு போகும்போது, தானாகவே பனிக்குடம் உடைந்து, நீர் வெளிவரத் தொடங்கும். அப்போது, உடனடியாகப் பிரசவம் நடத்துவதைத் தவிர, வேறு வழியே இல்லை.
கருத்தரிக்கும்போதே ஏதேனும் கோளாறு இருந்தால் (Congenital anomalies) குறை மாதப் பிரசவம் ஆக வாய்ப்பு உண்டு. சில சமயங்களில் கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகளோ அதற்கு மேலுமோ இருந்தாலும் குறைப் பிரசவம் நேரும். தவிர, விவரிக்க இயலாத வேறு காரணங்களாலும் குறைப் பிரசவங்கள் நிகழலாம்.'
'
தடுக்க என்ன செய்யவேண்டும்?

"குறித்த கெடுவுக்கு முன் வலி எடுக்கும்போது, அது பிரசவவலியா, பொய் வலியா என்பதை கர்ப்பப்பை வாய் சுருங்கி விரிவதை, பரிசோதித்துத் தெரிந்து கொள்வோம். கர்ப்பப்பை வாயின் நீளம் (Cervical length) குறைவாக இருப்பதை ஸ்கேன் மூலம் கண்டறியலாம். அது பிரசவ வலி இல்லை என்று அறியும் பட்சத்தில், அந்தப் பெண்ணைப் படுக்கையிலேயே ஓய்வு எடுக்கச் சொல்லி அறிவுறுத்துவோம். வலியைப் போக்குவதற்கு சில மருந்துகள் பரிந்துரைப்போம். சிலருக்கு புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் குறைவாக இருக்கும், அது சரியான அளவில் இருந்தால் வலி வராது. எனவே, ஹார்மோனைச் சமச்சீர் செய்ய மாத்திரைகள் கொடுப்போம்.
ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவற்றைப் பரிசோதித்து, அவை நார்மலாக இருந் தால் அப்படியே கர்ப்பத்தை, முழுமையாகும் வரை தொடரச் சொல்வோம். பிரசவ வலி எடுத்ததுமே ஸ்டீராய்டு ஊசி போட்டுவிடுவோம். ஏனெனில், எங்கள் முயற்சிக்குப் பிறகும்கூட வலி தொடர்ந்து, பிரசவம் ஆகிவிட்டால், பிறக்கும் குழந்தைக்கு நுரையீரல் முழுமையாக வளர்ச்சி அடைவதற்கு இது உதவும். பொதுவாக கர்ப்பவாய் சுருங்கி விரியும்போது வலி ஏற்பட்டு, அதன் பிறகுதான் பனிக்குடம் உடையும். ஆனால், சில நேரங்களில் வலியே இல்லாமல், திடீரென பனிக் குடம் உடையும். அந்தச் சமயத்திலும் ஸ்டீராய்டு மருந்துகளைச் செலுத்தி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பிரசவம் பார்க்கவேண்டும்''.

இது போன்ற சூழ்நிலையில் அறுவைசிகிச்சையும் தேவைப்படுமா?
சில வேளைகளில் தேவைப்படலாம். பொதுவாக,பேறுகாலக் கெடுவுக்கு முன் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக இருப்பதால், சுகப் பிரசவத்திலேயே பிறந்துவிடும். ஆனால், பனிக்குடம் உடைந்து 6 8 மணி நேரத்துக்கு மேல் ஆகியும், சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பு இல்லை எனில், அறுவை சிகிச்சை அவசியம். அப்படி செய்யாதபோது, குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. தாய்க்கு, கட்டுப்படுத்த முடியாத அளவு சர்க்கரை அல்லது ரத்த அழுத்தம் இருந்தால், அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். இல்லைஎன்றால், ஃபிட்ஸ் வந்துவிடும் அபாயம் உண்டு.'

குறித்த கெடுவுக்கு முன் பிறக்கும் குழந்தைகளுக்குச் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

'ப்ரீ டெர்ம் குழந்தை என்று தெரிந்தால், பச்சிளம் குழந்தைகள் நிபுணர் கட்டாயம் உடன் இருக்கவேண்டும். இன்குபேட்டர் தயாராக இருக்கவேண்டும். ஒருவேளை, இன்குபேட்டர் வசதி இல்லாத இடம் என்றால், உயர் வசதிகள் கொண்ட மருத்துவமனை இருக்கும் இடத்துக்கு உடனடி யாக தாயைப் பத்திரமாக மாற்றவேண்டியது அவசியம். ஏனென்றால், பிரசவம் ஆன பிறகு குழந்தையை மாற்றுவது சிரமம். அதற்கு, செயற்கை சுவாசம் தரும் கருவி உள்ளிட்ட வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் வேண்டும்''.

இந்தக் குழந்தைகளுக்கு என்ன பிரச்னைகள் வரும்?
இது போன்ற பிரசவங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, நுரையீரல் முழு வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால், கண்டிப்பாக மூச்சுத் திணறல் ஏற்படும். மேலும், மஞ்சள் காமாலை, வேறு தொற்றுநோய்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் போன்றவை உடனடியாக வரும் பிரச்னைகள். முழு கர்ப்பகாலம் முடிந்து பிறக்கும் குழந்தைகளுக்கு, ரத்த ஓட்டம், பெரியவர்களைப் போல சீராக இருக்கும்.ஆனால், இந்த குழந்தைகளுக்கு ரத்த ஓட்டம் தடைப்படும். ஏனெனில், இதய வால்வுகள் மூடிக்கொள்ளாது. அதைச் சரிசெய்ய மருந்து கொடுக்கவேண்டும்.

இவை தவிர, மூளைக்கு ஆக்சிஜன் குறைவதால், மூளை வளர்ச்சி தடைபடலாம். கை, கால் இயக்கம் மிக மெதுவாக வரலாம். குழந்தையின் தலை நிற்பதில் தொடங்கி, தவழுதல், நடத்தல், பேசுதல் எல்லாமே மிகத் தாமதமாக நடைபெறும். சில குழந்தைகளுக்கு இனப்பெருக்க உறுப்புகளில்கூட பிரச்னைகள் வரலாம். அது போன்ற குழந்தைகளை ஐந்து வயது வரை கவனமாகக் கண்காணித்துவர வேண்டும். தேவைப்பட்டால் பிசியோதெரப்பி, ஸ்பீச் தெரப்பி போன்றவற்றை சீக்கிரமே ஆரம்பித்துவிடுவது நல்லது.'
'
குறைமாதப் பிரசவங்களைத் தடுக்க...

பெண்ணின் ரத்தத்தில் குறிப்பிட்ட அளவு ஃபோலிக் அமிலம் இருந்தால்தான், குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைக்குத் திட்டமிடும்போதே, டாக்டரின் ஆசோசனைப்படி, ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். 

திருமணத்துக்கு முன்னரே எல்லாப் பெண்களும் HBsAG என்னும் வைரஸ் பரிசோதனை செய்து, தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. எம்.எம்.ஆர் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும்.
பெற்றோரில் யாருக்கேனும் ஒருவருக்குச் சர்க்கரை நோய் இருந்தால், மகளுக்கு கர்ப்பகாலச் சர்க்கரை நோய் வர 25 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. அப்பா, அம்மா இருவருக்குமே இருந்தால், 50 சதவிகிதம் வாய்ப்பு உண்டு.
தாய்க்கு சர்க்கரை இருந்தால், குழந்தையின் உறுப்புகள் சரியாக உருவாகாமல் இருக்கும். அதுகூட குறைமாதப் பிரசவத்துக்கோ அல்லது கரு கலைந்துபோவதற்கோ காரணமாகக்கூடும். எனவே, சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதித்து, கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
கருத்தரித்ததும், முதலில் கருவின் நாட்களைக் கணக்கிடும் டேட்டிங் ஸ்கேன்' எடுப்பது முக்கியம். அதை வைத்துத்தான் கருத்தரித்திருப்பதை உறுதிசெய்து, பிரசவக் கெடுவையும் கணக்கிடுவார்கள்.

11 13 வாரங்களில் டவுன் சிண்ட்ரோம் ஸ்கேனும் 22வது வாரத்தில் அனாமலி ஸ்கேனும் செய்யவேண்டும். 34வது வாரத்தில், குழந்தையின் எடை, பனிக்குடத் தண்ணீரின் அளவு, நஞ்சுக்கொடியின் தன்மை எல்லாவற்றையும் பார்த்து, ஏதாவது அசாதாரணமாகத் தென்பட்டால், அதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

முதல் கர்ப்பத்தில் குறை மாதப் பிரசவம் எனில், அடுத்தமுறையும் அது நிகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருக்க வேண்டும்.

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator