மோரு பலே ஜோரு…
நன்றி-பால ஹனுமான்.
கல்யாண மோர் என்றால் என்ன ?
குறிப்பாக தஞ்சாவூர் – கும்பகோணம் வாத்திமா கல்யாணங்கள் வெகு நேர்த்தியாக இருக்கும். நான்கு நாள் கல்யாணம். மூன்றாம் நாள் இரவு சம்பந்தி விருந்து. அன்று செம்மங்குடியோ, அரியக்குடியோ கச்சேரி இருக்கும். பக்கவாத்தியக்காரர்களும் பெரிய ஜாம்பவான்களாக இருப்பர். எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு வாசிப்பார்கள். கச்சேரி கேட்பதற்கென்றே கூப்பிட்டவர்கள், கூப்பிடாதவர்கள் என்று பல கிராமங்களில் இருந்தும் மிகப் பெரிய கூட்டம் வரும்.
கச்சேரி முடிந்ததும் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து விடுவார்கள். 500 பேருக்குச் சமைத்த சமையல் 1000 பேருக்கு எப்படிப் போதும்? சமையல் கலைஞர்களும் ஜாம்பவான்கள். ஒரு காளியாகுடி செட்டோ, அகோரம் செட்டோ ஏற்பாடு செய்திருப்பார்கள். ஆனால் பெண் வீட்டாருக்குக் கவலை. எப்படி இவர்களையெல்லாம் சமாளிக்கப் போகிறோம் என்று? சமையல் கலைஞர் சொல்வார். "கவலையை எங்களிடம் விடும். உக்கிராண உள்ளில் இருக்கும் சாமான்கள் போதும்" என்று.
சரி. ஆனால் மோருக்கு வழி? ஒரு பெரிய அண்டா நிறைய அரிசி களைந்த நீரை (அது மோர் நிறத்தில்தான் இருக்கும்) கொட்டி, அதில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, சிறிதளவு உப்பு சேர்த்து, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, பெருங்காயம் சேர்த்து, கடுகு தாளித்துப் பரிமாறுவார்கள். எல்லோரும் ருசித்து தொன்னையிலும் வாங்கிக் குடிப்பார்கள். "மோரு பலே ஜோரு" என்று சொல்லி, தாம்பூலம் வாங்கிக் கொண்டு விடை பெறுவார்கள். எப்போதுமே இமிடேஷன் ஒரிஜினலைவிட ஜொலிக்கும்தான். அதற்குக் கல்யாண மோரும் விதிவிலக்கில்லை.
-திருகோடிகாவல் வைத்யநாதன், Bronx, New York
(தென்றல் மாத இதழ், ஏப்ரல் 2014) |
No comments:
Post a Comment