Wednesday, 10 December 2014

டிசம்பர் 10: ராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜகோபாலாச்சாரியார் பிறந்த தினத்தையொட்டி சிறப்பு பகிர்வு.

டிசம்பர் 10: ராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜகோபாலாச்சாரியார் பிறந்த தினத்தையொட்டி சிறப்பு பகிர்வு..

இளம்வயதிலேயே கிட்டப்பார்வையால் கண்ணாடி போட்ட அவருக்கு பள்ளிக்காலத்தில் நண்பர்கள் வெகு குறைவாகவே இருந்தனர். அரசுப்பள்ளியில் படித்து முடித்த பின்னர் மெட்ரிகுலேசன் தேர்வில் சாதித்துக்காட்டினார் அவர். பின்னர் சட்டம் படித்து முடித்த பின்னர் சேலத்தில் பிரபல வழக்கறிஞர் ஆனார் அவர். அப்பொழுதே ஆயிரம் ரூபாய் ஒரு வழக்குக்கு வாங்குகிற அளவுக்கு வருமானம்
உடையவராக இருந்தார் அவர். 1917 இல் சேலம் நகராட்சி தலைவர் ஆனார் அவர். சம்பளமே வாங்கிக்கொள்ளாமல் ஆறு மணிநேரம் தினமும் உழைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார் ராஜாஜி.
1909-ஆம் ஆண்டு மகாகவி பாரதியாருடன் பழகும் வாய்ப்பு ராஜாஜிக்குக் கிடைத்தது. நாட்டு விடுதலைக்கான போராட்டம் குறித்து இருவரும் பல சந்திப்புகளில் விவாதித்தனர். இது பற்றி காந்தியடிகளையும் சந்தித்து ராஜாஜி பேசினார். சென்னையில் இருந்த ராஜாஜியின் வீட்டில்தான் மகாகவி பாரதியார் முதன்முறையாக காந்தியடிகளைச் சந்தித்தார்.

காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் ஈர்க்க பல்லாயிரம் ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வக்கீல் தொழிலை துறந்தார் அவர். உப்பு சத்தியாகிரகத்தை தமிழ்நாட்டில் முன்னின்று நடத்தினார் அவர்.
1937 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றபின்னர் முதல்வர் ஆனார் அவர். மது விலக்கை சேலத்தில் முதன் முதலில் அமல்படுத்தினார் ராஜாஜி. பின்னர் கடப்பா,சித்தூர்,வட ஆற்காடு மாவட்டங்களில் மதுவிலக்கை விரிவுபடுத்தினார் ராஜாஜி. அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை சரிசெய்ய இந்தியாவிலேயே முதல் முறையாக விற்பனை வரியைக்கொண்டு வந்தார் அவர். ஆலய பிரவேசத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியப்படுத்தினார் விவசாயிகளின் கடன் சுமையை
குறைக்கவும் சட்டமியற்றினார்.

அடுத்து ஹிந்தி மொழியை 125 பள்ளிகளில் 6,7,8 ஆம் வகுப்புகளில் கொண்டு வந்தார். இந்தியாவின் அரசியல் மற்றும் வணிகத்தை செலுத்த ஹிந்தி அவசியம் என்று ராஜாஜி நினைத்தார். "குழந்தைகளுக்கு பாலூட்டும் பொழுது தாய் பலவந்தம் செய்தாலும் பரவாயில்லை. தமிழ்மொழி கால் போன்றது ; ஹிந்தி வண்டி மாதிரி ,ஆங்கிலம் ரயில் மாதிரி !" என்று விளக்கம் தந்தார் அவர். நாவலர்

சோமசுந்தர பாரதியார் தலைமையில் திருச்சியில் ஹிந்தி எதிர்ப்புக்குழு உருவானது. பெரியார் ,"ஆச்சாரியார் ஹிந்தி புகுத்துவதால் தமிழ் கெடாது என்று பித்தலாட்டம் பேசுகிறார். இங்கே தமிழ் எங்கே இருக்கிறது ?" என்று முழங்கினார். அண்ணா,பெரியார் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிறை புகுந்தார்கள். தாளமுத்து, நடராசன் எனும் இருவர் சிறையில் மரணம் அடைந்தார்கள். ஹிந்தி திணிப்புக்கு எதிராக சிறை சென்றவர்களை ,"அற்ப கூலிக்கு அமர்த்தப்பட்ட அடியாட்கள் !" என்று அழைத்தார் ராஜாஜி . இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேய அரசு ஈடுபடுவதை கண்டித்து காங்கிரஸ் அரசுகள் பதவி விலகியதால் ஹிந்து திணிப்பு அதோடு நின்று போனது.

ராஜாஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறினார். போர்க்காலத்தில் ஆங்கிலேயருக்கு உதவ வேண்டும் என்று சொன்னார் அவர். பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் வந்தார். 1951 ல் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கம்யூனிஸ்ட்கள் அதிக இடங்களில் வென்றிருந்தார்கள். ராஜாஜியை அழைத்தார்கள். காமன் வீல் கட்சி,தொழிலாளர் கட்சி ஆகியவற்றை சேர்த்துக்கொண்டு ஆட்சி அமைத்தார் அவர். ராஜாஜி தன் வாழ்நாளில் நேரடியாக தேர்தலில் போட்டியிடுவதை பெரும்பாலும் தவிர்த்தே வந்திருக்கிறார்.

பதவிக்கு வந்ததும் போட்ட முதல் உத்தவரவு கைதிகளுக்கு மோர் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது தான். குலக்கல்வி முறையை அடுத்து கொண்டுவந்தார் அவர். ஐந்து பாடவேளைகள் என்பதை மூன்று பாடவேளைகள் என்று குறைத்தார் ராஜாஜி. ஷிப்ட் முறையில் ஒரே நாளில் இரண்டு பிரிவாக வகுப்புகள் நடக்கும். காலையில் பள்ளியில் படித்துவிட்டு மதியம் போய் பெற்றோர்கள் செய்யும் தொழிலில் பிள்ளைகள் உதவவேண்டும் என்று ராஜாஜி சொன்னார். அது சாதியத்தை காப்பாற்றவும், வலுப்படுத்தவும் செய்யும் என்று எதிர்த்தார்கள். பெரியார் ,"ராஜாஜி கிராமத்து பையனுக்கு கல்வி வேண்டாம் என்று சொல்கிறாரா ? மூன்றே பாடவேளைகள் என்பதால் மிச்ச நேரத்தில் அவன் கழுதை மேய்த்துக்கொண்டும், முடி வெட்டிக்கொண்டும், துணி துவைத்துக்கொண்டும்
இருக்க வேண்டுமா ?" என்று பொங்கினார். தொழிற்கல்வித்திட்டம் குலக்கல்வி என்று அழைக்கப்பட்டது.

ராஜாஜி அமைச்சரவையை கலந்து ஆலோசிக்காமல் இப்படி முடிவை எடுத்ததற்கும் எதிர்ப்பு கிளம்பியது. "ராமானுஜர்,சங்கரர் முதலானோர் மற்றவரை கேட்டுவிட்டா தங்களின் தத்துவங்களை வெளியிட்டார்கள் ? இது நிர்வாக ரீதியான முடிவு " என்றார் ராஜாஜி. ஆனாலும்,ஆசிரியர்கள் ஆறு பாடவேளைகள் பாடமெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் அவர்களுக்கு எந்த சம்பள
உயர்வையும் ராஜாஜி வழங்கவில்லை. அவர்களை கலந்தாலோசிக்கவும் இல்லை. பருலேகர் கமிட்டி அமைத்து ஆய்வு செய்து தான் செய்தது சரியென்று சொன்னார் ராஜாஜி. அவரின் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து பதவி விலகினார் அவர்.

அவருக்கு பின்னர் காமராஜர் தமிழகத்தின் முதல்வர் ஆனார்.
ராஜாஜியின் வாழ்க்கையில் இருந்த நேர்மை சிலிர்க்க வைப்பது. கவர்னர் ஜெனரல், முதல்வர், கவர்னர், உள்துறை அமைச்சர் என்று எண்ணற்ற பதவிகளை வகித்த அவர் வாழ்ந்தது ஐம்பது ரூபாய் வாடகை வீட்டில் தான். கவர்னர் ஜெனரல் மாளிகையை விட்டு வெளியேறிய பொழுது வந்த பரிசுப்பொருட்களை எல்லாம் பீரோக்களில் அடுக்கி கொடுத்துவிட்டு கையில் தன்னுடைய கைத்தடியோடு மட்டும் வெளியேறியவர் அவர்.
தனக்கு எது சரியென்று படுகிறதோ அதன்படியே இயங்குவார் அவர். சத்தியமூர்த்தியின் சிஷ்யர் என்று காமராஜரை எதிர்த்தார் இவர். அண்ணாவுடன் கூட்டணி போட்டு அவரின் தோல்விக்கு அடிகோலினார். பின்னர் அதே காமராஜருடன் இணைந்தார். கம்யூனிஸ்ட்கள் முதல் எதிரி என்றவர் அவர்களோடும் கூட்டணி வைத்தார். இவை சுய லாபத்துக்காக என்று சொல்ல முடியாது. அவரின் சுய சிந்தனைக்கு எது சரியோ அப்படி இயங்கினார் அவர். அமெரிக்கா சென்றிருந்த பொழுது கென்னடியை சந்தித்து அணு ஆயுதங்கள் வேண்டாம் என்று அற்புதமாக எடுத்துரைத்து விட்டு வந்தார் ராஜாஜி.

சுதந்திரா கட்சியை ஆரம்பித்து தொழிலதிபர்களுக்கு தன்னுடைய ஆதரவைக்காட்டிய அவர் மேடைகளில் யாரேனும் பேசிக்கொண்டு இருக்கிற பொழுது ஒரு காதில் கைவைத்துக்கொண்டு விடுவார். அவருக்கு இன்னொரு காது கேட்காது. இரண்டு காதுகளும் இப்படி கேட்காத சமயத்தில் அந்த இதழுக்கு என்ன கட்டுரை எழுதலாம் என்று யோசிப்பார் அவர். சக்ரவர்த்தி திருமகன், வியாசர் விருந்து ஆகிய நூல்களை எழுதிய அவர் மதபீடங்களின் தலைவர்களை சந்தித்தது இல்லை. கோயில்களுக்கு செல்வதை பெரும்பாலும் தவிர்த்தார். அவரின் கீழே வங்கத்தில் மதக்கலவரங்கள் பெருமளவில் நின்றன. ராஜாஜியின் மதச்சார்பின்மை அவரை படேல் 'அரை முஸ்லீம் !' என்று குறிக்கிற அளவுக்கு இருந்தது. அந்த குணமே அவரை ஜனாதிபதி ஆகவிடாமல் தடுத்தது. குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் மரணமடைந்து இருந்த சூழலிலும் ,"குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா !" என்று பாடல் எழுதினார் அவர். டாக்டர் ராஜாஜி என்றொரு கூட்டத்தில் அழைத்த பொழுது ,"எனக்கென்று பெயர் இருக்கிறது. எதற்கு இந்த பட்டங்கள் எல்லாம் ?" என்று கடிந்து கொண்டார் அவர்.

நேருவின் அமைச்சரவையில் இருந்த ராஜாஜி நேருவின் கம்யூனிஸ்ட்கள் மீதான பாசத்தை கண்டித்தார். தெலங்கானா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நேரு குறைத்ததை ஏற்க மறுத்தார் ராஜாஜி. நேருவின் சோவியத்துடன் நட்பு என்கிற கொள்கையையும் குறை சொன்னார். சீனா ஆபத்தானது என்று முன்கூட்டியே எச்சரித்தார். இந்தியாவின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய எதிரி ஹிந்து மகா சபை என்றார் நேரு. கம்யூனிஸ்ட்கள் என்றார் ராஜாஜி. காங்கிரஸ் கட்சியைவிட்டு நீங்கி சுதந்திரா கட்சியை துவங்கினார்.
ராஜாஜியிடம் எல்லையில்லா நாகரீகம் இருந்தது. நேருவுடன் முரண்பட்டு தனிக்கட்சி தொடங்கிய பின்னரும் நேரு இறந்த பிறகு அவருக்கு இப்படி புகழ் மாலை சூட்டினார் அவர் ,"என்னைவிட 11 ஆண்டு இளையவர். 11 மடங்கு நாட்டுக்கு முக்கியமானவர். மக்களுக்கு என்னை விட 11,000 மடங்கு பிரியமானவர் நேரு. அவரின் பிரிவால் மிக சிறந்த நண்பரை இழந்துவிட்டேன் !" என்று பதிவு
செய்தார்.

பெரியாருக்கும் அவருக்கும் இருந்த நட்பு நெருக்கமானது.ராஜாஜியை வாழ்நாள் முழுக்க அரசியல் ரீதியாக பெரியார் எதிர்த்தாலும் மணியம்மையை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் அது குறித்து ராஜாஜியிடமே ஆலோசனை கேட்டார். ஒருமுறை ஒரு விஷயத்தில் இப்படி செய்யலாமா என்று பெரியாரிடம் கேட்ட பொழுது வேறொரு யோசனையை சொன்னார் பெரியார். "மக்கள் என்ன நினைப்பார்கள் ?" என்று கேட்டார் ராஜாஜி. "மக்கள் யாரு ? ஒண்ணு நீங்க இல்லை நானு ஆச்சாரியாரே !" என்று சொன்னார் பெரியார். ராஜாஜி தள்ளாடும் வயதில் தமிழக முதல்வர் கலைஞர்

மதுவிலக்கை நீக்க முடிவு செய்த பொழுது கொட்டும் மழையில் அவரை சந்தித்து அவரின் கைபிடித்து அதை அமல்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அவர் இறந்த பொழுது அவரின் வாழ்நாள் நண்பர் பெரியார் கதறி கதறி அழுதார்.

பூ.கொ.சரவணன்

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator