வரலட்சுமி விரதம் கதை 


பத்ரச்ரவா என்னும் சவுராட்டிர மன்னனின் மனைவி கசந்திரிகா. மன்னன் எப்பொழுதும் மங்கலச் சொற்களையே பேசுபவன், கேட்பவன். குணம், கல்வி, தர்மம், கற்பு ஆகிய நற்பண்புகள் கொண்ட கசந்திரிகா நிலவைப் பழிக்கும் அழகு கொண்டவள்; சினத்தை ஒழித்து எப்பொழுதும் குளிர்ந்த சாந்தமான முகத்தை உடையவள். இவர்கட்கு 7 ஆண் மகவுகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. பெண் குழந்தையை சியாமா எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.


கசந்திரிகாவின் நற்குணங்களும், நற்செயல்களும் கண்டு மகாலட்சுமி அவளிடம் கருணை கொண்டாள். ஒரு வெள்ளிக்கிழமை துவாதசி திதியன்று மகாலட்சுமி ஒரு பழுத்த சுமங்கிலி உருவெடுத்து அந்தப்புறத்தில் நுழைந்தாள்.


வயிறார உண்டு வாய்நிறையத் தாம்பூலம் தரித்து அமர்ந்திருந்த அரசி, “தாயே! சுமங்கிலியே! தாங்கள் யார்? எதற்க்காக வந்தீர்கள்?” என் வினவினாள். அவளை நோக்கி மகாலட்சுமி,”கசந்திரிகா! நீ நல்லவள். உத்தமி. ஆனால், லட்சுமி தேவியின் அவதார தினமான இன்று வயிறார உண்டு தாம்பூலம் தரித்துக் கொண்டுள்ளாயே! இது நியாயமா?” எனக் கேட்டாள்.


செய்த தவறைச் சுட்டிக் காட்டியவுடன் கோபமே கொள்ளாத கசந்திரிகாவுக்கு சினம் கொப்பளித்து வந்தது. உடனே மகாலட்சுமியின் கன்னத்தில் அறைந்து,”இங்கிருந்து போய்விடு” என்றாள். கண்கள் கலங்கி கண்ணீர் தளும்பிய முகத்துடன் வெளியேறிய மகாலட்சுமியைக் குழந்தை சியாமா கண்டு,”அம்மா! ஏன் அழுகிறீர்கள்? என்ன வேண்டும்?” என்றாள்.


கண்களைத் துடைத்துக்கொண்டு மகாலட்சுமி,”பெண்ணே! உன் தாயாருக்கு நல்லது சொன்னேன். அதற்க்காக என்னை அடித்து அவமானப்படுத்தித் துரத்தி விட்டாள். அதனால்தான் திரும்பிப் போகிறேன்” என்றாள். உடனே சியாமா மகாலட்சுமியை உபசரித்து, அமரவைத்து, “அந்த நல்லதை எனக்குச் சொல்லிக்கொடுங்களேன்” என்றாள். மனம் குளிர்ந்த மகாலட்சுமி, சியாமாவுக்கு வரலட்சுமி விரதம் கொண்டாடவேண்டிய வழிமுறைகளை உபதேசித்தாள். அன்று முதல் சியாமா, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாது வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடித்தாள்.
லட்சுமிதேவியை அவமதித்ததால் பத்ரச்ரவா மன்னனிடமிருந்த செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின. மனம் நொந்த மன்னன் இராச்சியம் கையைவிட்டுப் போவதற்குள் மகளுக்குத் திருமணம் செய்ய எண்ணி மாலாதரன் என்ற மன்னனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். புகுந்த வீடு சென்றபின்னும் சியாமா விரதத்தைத் தொடர்ந்தாள். மாலாதரனுக்கு செல்வம் குவிந்தது. பத்ரச்ரவாவும் கசந்திரிகாவும் பகைவர்களால் விரட்டப்பட்டு காட்டுக்கு ஓடி உணவுக்கு வழியற்று ஊர் ஊராகத் திரிந்தனர். செய்தியறிந்த சியாமா வருந்தி, அவர்களைத் தன் நாட்டிலேயே தங்கவைத்துத் தன் சேவகன் மூலம் உணவளித்துக் காத்து வந்தாள்.


நாட்கள் கழிந்தன. ஒருநாள், நிறையத் தங்க நாணயங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிக் கொடுத்து, “இதை வைத்துக்கொண்டு எங்காவதுபோய்ப் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்றாள். சியாமா அவ்விடத்தை விட்டு அகன்றதும், மூடிய பாத்திரத்தைத் திறந்து பார்த்த பத்ரச்ரவா, பொன்னுக்குப் பதில் கரித்துண்டுகளைக் கண்டு அதிர்ந்து போனான். இதை சியாமாவுக்குத் தெரியப்படுத்தினர். உடனே, சியாமாவுக்குத் தன் தாய் மகாலட்சுமியை அவமதித்தது நினைவுக்கு வந்தது. தன் அம்மாவை அழைத்து நடந்தவைகளை நினைவுபடுத்தி, அவள் செய்த தவறைச் சுட்டிக்காட்டி, விரதமிருக்கும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தாள்.
அவ்வாறே கசந்திரிகா வரலட்சுமி விரதமிருந்துவர நாளுக்கு நாள் நல்லவைகள் நடந்தன. பத்ரச்ரவாவுக்கும் மனதில் தைரிய லட்சுமி குடியேரியதால், தன் ஆதரவாளர்களைத் திரட்டிப் படையெடுத்து வந்து தன் நாட்டை மீட்டான். பெற்றோர் நல்ல நிலையை அடைந்ததைக் கண்ட சியாமா மகிழ்ந்தாள். மாலாதரனோ,”அது கிடக்கட்டும். உன் பிறந்த வீட்டிலிருந்து நீ என்ன கொண்டுவந்தாய்?” என இகழ்ந்தான். அதற்கு சியாமா, என்ன கொண்டுவந்தேன் என்பதை நாளை உணவருந்தும்போது சொல்கிறேன்” என்றாள்.


இவள் பிறந்த வீட்டிலிருந்து விரதத்தை மட்டும்தானே கொண்டுவந்தாள் என எண்ணிக்கொண்டு அடுத்தநாள் உணவருந்த வந்த மாலாதரன் இலையில் சியாமா கனிவோடு உணவு வகைகளை இட்டாள். சுவைத்துப் பார்த்த மாலாதரன், முகம் சுளித்து,”ஒன்றில்கூட உப்பில்லை. மனிதன் தின்பானா இதை!” எனக் கடுகடுத்தான்.
அதற்கு சியாமா,”உப்பு ஒரு சாதாரணப் பொருள். அது இல்லையேல் உடலைக் காக்கும் உணவுகூட நஞ்சாகிவிடுகிறதல்லவா? அதனால்தான் உப்பில்லாப் பண்டம் குப்பையிலே! என்றனர் மூத்தோர். அதுபோல்தான் மகாலட்சுமி விரதமும். இதைத்தான் பிறந்த வீட்டிலிருந்து கொண்டுவந்தேன்” என்றாள். உண்மையுணர்ந்த மாலாதரன் அன்றுமுதல் விரதத்திலும் பங்கெடுத்துக்கொண்டான்.