Sunday 12 May 2013

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி, இருமல்!

" } Google+

Follow this blog






























ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி, இருமல்!
By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
[இன்றைய தினமணி]

என்னுடைய வயது 79. வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில், கண்பார்வை மிகவும் குறைவாக உள்ளது. ஆஸ்துமா சுமார் 15 வயது முதலே தொடர்ந்து இருக்கிறது. காற்றோட்டம் சற்றுக் குறைந்தாலும் மூச்சுவிடச் சிரமமாக இருக்கிறது. உடல் பலவீனம். இரவும் பகலும் சளி இருமல். சளி வெளியேறிவிட்டால் சுகமாக இருக்கிறது. இவற்றைக் குணப்படுத்த என்ன வழி?

எஸ்.எம்.கே.தனபாலன், மதுரை.

தலையிலும் மார்பிலும் பிராண - உதான வாயுக்கள் சரியாக வேலை செய்யவில்லை என்பதையே தங்களுடைய உடல் நிலை காட்டுகிறது. மருந்துகளின் தொடர் உபயோகத்தால் மூச்சுக் குழாயின் ரப்பர் போன்ற தன்மை குறைந்து இறுகிவிட்டால், மூச்சுவிடச் சிரமம் ஏற்படும். போதுமான அளவில் பிராண 
வாயுவின் வரத்து உட்புறக் குழாய்களின் மூலம் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், உடல் பலவீனம் ஏற்படுகிறது. கெட்டியான சளி மூச்சுக் குழாயில் படிந்திருப்பதால், அதை வெளியேற்ற முயற்சிக்கும் செயல்கள் அனைத்துமே உடல் சோர்வைத் தரும்.

பிராண - உதான வாயுக்களை நேர்ப்படுத்த சிறந்த வழி பிராணாயாமம் என்ற முறைதான். யோகப் பயிற்சிகளில் திறமையானவர்களை நீங்கள் நேரில் சந்தித்து அவர்கள் மூலம் ஆசன - பிராணாயாம முறைகளைக் கற்றுக் கொண்டால், உங்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

நாட்பட்ட சளியை நெஞ்சில் சுமந்து கொண்டு வாழ்வது சரியல்ல. கொள்ளு, கொண்டைக் கடலை, துவரம் பருப்பு, யவை எனும் பார்லி, பச்சைப் பயறு, பச்சரிசி ஆகியவற்றை வகைக்கு 15 கிராம் வீதம் சேர்த்து, 1 1/2 லிட்டர் தண்ணீரில் வேக வைத்து, 750 மி.லி. ஆனதும் வடிகட்டி, வெதுவெதுப்பாக, சிறிது இந்துப்பு கலந்து, காலை உணவாகப் பருகினால், சளியைக் கரைத்து வெளியேற்றும். சூடு ஆறிவிட்டால் 1/2 - 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடுவதும் நல்லதே. மதிய உணவாக மிளகு ரஸம், கறிவேப்பிலைத் துவையல், சூடாக்கிய மோரில் மஞ்சள் தூள், நல்லெண்ணெய்யில் தாளித்த ஓமம் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இரவில் கோதுமை வகையைச் சார்ந்த உணவாக இருத்தல் நலம். இனிப்பு - புளிப்பு - உப்புச் சுவையைக் குறைக்க வேண்டும்.

கோரைக் கிழங்கு 10 கிராம், சுக்கு 5 கிராம், 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து 1/2 லிட்டராகக் குறுகியதும் வடிகட்டி, சிறிது சிறிதாகக் குடிக்கப் பயன்படுத்துவது சிறந்தது. ஏலக்காய், கிராம்பு, ஓமம், சீரகம், சோம்பு ஆகியவற்றை இரண்டு வெற்றிலையுடன் சுருட்டி, உணவுக்குப் பின் மென்று சாப்பிடுவதால் கபக்கட்டு நன்றாகக் கரைந்து விடும்.

ஒரு சில ஆயுர்வேதச் சிகிச்சை முறைகள் பயன் தரலாம். தேகராஜாதி தைலத்தையோ, கர்ப்பூராதி தைலத்தையோ நெஞ்சுப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் வெதுவெதுப்பாகப் பூசி அரை அல்லது முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, தவிடு அல்லது கொள்ளு ஒத்தடம் கொடுக்க, சளி கரைந்து மூச்சு எளிதாக விட வாய்ப்பிருக்கிறது. சுமார் 7 முதல் 10 நாட்கள் வரை இந்தச் சிகிச்சையைத் தொடர்ந்து செய்து கொள்ள வேண்டி வரலாம். திரிபலா சூரணம், அதிமதுரம் சூரணம், திரி கடுகம் சூரணம் ஆகியவற்றைச் சேர்த்து, மொத்தம் 5 கிராமெடுத்து 10 மி.லி.தேனுடன் குழைத்து, காலை, இரவு உணவுக்குப் பிறகு நக்கிச் சாப்பிடலாம். கண்பார்வைக்கும், சளியைக் கரைப்பதற்கும் பயன்படும்.

வியாக்ரயாதி கஷாயம், தசமூல கடுத்ரயாதி கஷாயம் ஆகியவற்றை வகைக்கு 7.5 மி.லி. வீதம் கலந்து, 60 மி.லி. கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து அதை 1/2 - 1 ஸ்பூன் (5 மி.லி) தேனுடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 41 -48 நாட்கள் சாப்பிடுவதால், மார்பு சளி, இருமல் குறைந்து, மூச்சுவிடச் சுலபமாக இருக்கும்.

தாளீசபத்ராதி சூரணத்தை 1/2 - 1 ஸ்பூன் அடிக்கடி சாப்பிட, உடல் பலவீனம் குறைந்து, தெம்பைத் தரும். இரவில் படுக்கும் முன், சூடு ஆறிய தண்ணீரில், சிறிது தேன் கலந்து சாப்பிட்டு படுத்துறங்குவதால், மார்பில் சளி சேர்வதை தடுக்க முடியும்.








http://www.facebook.com/pages/Khariharan/115524648579725



power by BLOGSPOT-PING






No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator