Tuesday, 1 May 2012

புண்ணிய பூமி மகேந்திரமங்கலம்



power by BLOGSPOT-PING





மகேந்திரமங்கலத்தில் மகாபெரியவா 

 புண்ணிய பூமி மகேந்திரமங்கலம் 

காஞ்சி மடத்தின் பீடாதிபதியாகும்போது, மகா பெரியவாளுக்கு வயது 13. கும்பகோணம் மடத்தில் அவரைப் பார்க்க வருவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருந்தது. இதனால், வேத பாடங்களைக் கற்பதற்கு அவரால் நேரம் ஒதுக்கவே முடியவில்லை. என்ன செய்வது என மடத்து அதிகாரிகள் யோசித்தனர். முசிறி- தொட்டியம் சாலையில், காவிரியின் வடகரையில் உள்ள மகேந்திரமங்கலம் கிராமத்தில் அவரைத் தங்கவைக்கலாம் என முடிவு செய்தனர்.
10-ஆம் நூற்றாண்டில், இந்தக் கிராமம் செழிப்பாக இருந்துள்ளது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன், இந்தக் கிராமத்தை அந்தணருக்குத் தானம் அளித்துள்ளதைத் தெரிவிக்கிற கல்வெட்டுகள் உள்ளன. இங்கேயுள்ள சிவாலயம், எத்தனை பிரமாண்டம் என்பது, நிலத்தை அகழ்ந்தபோதுதான் தெரிந்ததாம்! இந்தக் கடவுளின் திருநாமம் தில்லைநாதன்; கடவுளுக்குப் பரிசாக இந்த ஆலயம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கல்வெட்டுக்கள்  தெரிவிக்கின்றன. இந்த ஊருக்கு அருகில் ஸ்ரீநிவாசநல்லூர் எனும் கிராமம் உள்ளது. இங்கும் ஆலயம் உண்டு. இரண்டு ஊர்களின் ஆலயங்களும், சோழர் காலத்திய கட்டமைப்புடன் திகழ்கின்றன. ஒருகாலத்தில், மகேந்திரமங்கலம் கிராமம் போர்க்களமாகவும் இருந்துள்ளதாம்! ‘கோயில் பற்றிய குறிப்புகள், தமிழில் வசன நடையில் இல்லாமல், கவிதை நடையில் இருப்பது சுவாரஸ்ய மாக உள்ளது’ என்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் இரா.நாகசாமி.
இத்தனைப் பெருமைமிகு மகேந்திரமங்கலத்தில், 1911 முதல் 14-ஆம் வருடம்  வரை, வேதங்களைக் கற்றறிந்தார், காஞ்சி மகான். மாணவர்கள் அனைவரும் ஆசிரியரை வணங்கும் வேளையில், சின்னஞ்சிறிய மாணவரை ஆசிரியரே வணங்க வேண்டியிருந்தது. காரணம், இவர் மடாதிபதியாயிற்றே! இந்தப் பாடசாலையை, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த குவளக்குடி சிங்கம் அய்யங்கார் என்பவர் நடத்தி வந்தார். முதல் மாடியில் வேத பாடசாலை. அந்தக் கட்ட டத்தை வேறெந்தக் காரியத்துக்கும் பயன்படுத்தக்கூடாது எனக் கல்லில் சாசனம் எழுதி, பத்திரப் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளார் சிங்கம் அய்யங்கார். தற்போது அவருடைய பேரன் மற்றும் குடும்பத்தார், வேத பாடசாலையை நிர்வகித்து வருகின்றனர். காஞ்சிப் பெரியவா, இங்கிருந்தபோது துளசிச் செடி நட்டு வளர்த்தாராம். அதனைத் தினமும் வழிபட்டுவிட்டுத்தான், வேதம் கற்பாராம். அந்தத் துளசிச் செடியை இன்றைக்கும் பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலப் பகுதியை, சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஒருவர் வாங்கி, செங்கல் சூளை போடுவதற்காகத் தோண்டினார். அப்போதுதான் புதையுண்ட நிலையில் இருந்த ஆலயமும், அதன் பிரமாண்டமும் தெரிந்ததாம்.   நந்தியின் திருமுகம் மட்டும் சற்றே சிதிலமாகியிருந்தது. அந்தக் களத்து மேட்டிலேயே சிவலிங்கத்தையும் நந்தியையும் வைத்திருந்தனர். 60-களில் இங்கு வந்த மகா பெரியவா, ‘பகவான் இப்படி வெயிலிலும் மழையிலும் இருக்காரே’ என வருந்தினாராம். பழையபடி பெரிய கோயிலாக இல்லாது போனாலும், சின்னதாக ஒரு கோயில் கட்டலாமே என விரும்பினாராம். பிறகு, 2006-ஆம் வருடம், ஸ்ரீஜெயேந்திரர் இங்கு வந்தபோது, பெருமாள் கோயிலுக்கு அருகில் கூரை போட்டு, கோயிலாக அமைத்தாராம்.
இங்கு வரும்போதெல்லாம், அருகில் உள்ள ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் கோயி லுக்கும் செல்வாராம் பெரியவா. ஆயிரம் படிகளை மளமளவென்று அவர் ஏறிக் கடப்பதைப் பார்ப்பதே அத்தனை அழகு! இந்த ஊருக்கு ஸ்ரீஆதிசங்கரர் விஜயம் செய்திருக்கிறார். இதை அறிந்த மகா பெரியவா, சந்தியா வந்தனப் படித்துறைக்குச் செல்லும் வழியில் உள்ள மடத்தில், ஸ்ரீஆதி சங்கரருக்கு திருவிக்கிரகம் ஸ்தாபித்துள்ளார். இப்போது அவருக்கு அருகிலேயே மகா பெரியவாளுக்கு விக்கிரகம் பிரதிஷ்டை செய்துள்ளார், ஸ்ரீஜெயேந்திரர். ”இங்கே அனுதினமும் ஆதிசங்கரர், மகா பெரியவா இரண்டு பேருக்கும் பூஜைகள் நடந்துண்டிருக்கு” என்கிறார் ராமமூர்த்தி குருக்கள். ”ஸ்வாமி ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்- ஸ்ரீதிரிபுரசுந்தரிக்கு இங்கு கோயில் எழுப்பிவிட்டால், மகா பெரியவாளின் விக்கிரகத்தை அந்தக் கோயிலில் வைத்து வழிபடலாம்” என்கிறார் தேசியவாதி யான காந்திப்பித்தன். காஞ்சி மகானுடன் பழகியவராம் இவர்.
”பெரியவா ஆசைப்பட்ட மாதிரி அங்கே கோயில் கட்டி, சிவலிங்கத்தையும் நந்தியையும் பிரதிஷ்டை பண்ண ஏற்பாடு பண்ண முடியாதா?” என்று கிருஷ்ண கான சபா செயலாளர் பிரபுவிடம் கேட்டாராம் ஸ்ரீஜெயேந்திரர். அவரின் வேண்டுகோளை ஏற்ற பிரபு, ஆலயம் அமைக்கும் பணியில் இறங்கியுள்ளார். கடந்த வருடம் பூமி பூஜை போடப்பட்டபோது, மொத்த மக்களும் திரண்டு விட்டார்களாம்!
மகா பெரியவாளின் விக்கிரகத் திருமேனியை வடித்த சுவாமிநாத ஸ்தபதிதான், கோயில் பணியை ஏற்றிருக்கிறார். ”பெரியவாளோட விக்கிரகத்தின் கண்களைத் திறக்கும் நேரத்துல உடம்பே சிலிர்த்துப் போச்சு! அவரோட விருப்பமான, இந்தக் கோயில் கட்டுற பணி கிடைச்சிருக்கிறது, எனக்குக் கிடைச்ச பாக்கியம்!” என்று சொல்லிச் சிலிர்க்கிறார் ஸ்தபதி. மூலவர், அம்பாள், பஞ்சபரிவாரம், ஸ்ரீகணபதி, ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீசண்டிகேஸ்வரர் முதலான அனைத்து தெய்வ மூர்த்தங்களும் அமைக்கப்பட உள்ளதாம்!
”மகா பெரியவா படிச்ச வேதபாடசாலையைப் பார்க்கறதே புண்ணியம். அவரோட விருப்பப்படி கோயில் அமையறது,  இந்த ஊருக்குக் கிடைச்ச வரம்” என்கிறார் மகேந்திரமங்கலத்தைச் சேர்ந்த ஜெயராமன். மகாபெரியவா இங்கு படித்தபோது, அவருடன் நெருங்கிப் பழகியவராம் இவரின் தாத்தா.
மகேந்திரமங்கலம், இனி மங்கலகரமான தலமாகத் திகழும் என்பது உறுதி!











No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator