Thursday 23 January 2014

கோலம் போடுவது எதற்காக?




கோலம் போடுவது எதற்காக?

கேள்வி

நம் கலாச்சாரத்தில் வீட்டின் முன், சாணம் தெளித்து கோலம் போடும் வழக்கம் உள்ளது. 

குறிப்பாக, கடும் பனி பெய்யும் மார்கழி மாதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதே, ஏன்?

சத்குரு பதில்கள் :

கோலம் என்பது அலங்காரத்திற்காகப் போடப்படுவதில்லை.

இது ஒருவிதமான வடிவம். 

படைப்புகள் அத்தனையும் ஒருவிதமான வடிவம்தான். 

அடிப்படையான வடிவம் முக்கோண வடிவம். 

இதை யந்திரம் என்றும் சொல்வோம். 

சரியான முறையில் உருவங்கள் ஒன்றிணைந்தால் அது யந்திரம். யந்திரம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயல்படும். 

ஆங்கிலத்தில் மெஷின் என்று சொல்லப்படும் இயந்திரமும் பலவிதமான உருவங்கள் முறைப்படி ஒன்றிணைந்ததுதான்.

இந்தப் பிரபஞ்சம் கூட சூரியன், சந்திரன், பூமி என்று பலவிதமான உருவங்கள் ஒன்றிணைந்து ஒரு மகத்தான, பிரம்மாண்டமான யந்திரமாக இருக்கிறது. 

இந்தப் பிரபஞ்சத்தை பார்த்துவிட்டுதான் நாம் பல சிறிய அளவிலான யந்திரங்களை உருவாக்கி உள்ளோம். 

இந்தச் சூரியன், சந்திரன், இந்தப் பூமி இவற்றைப் பார்த்துத்தான் நாம் கடிகாரங்களையே உருவாக்கினோம்.

நம் உடல் கூட ஒரு யந்திரம் தான். 

இந்த உடல் என்னும் யந்திரத்தை நுட்பமாக கவனித்தாலே ஒவ்வொரு காலத்திலும், நேரத்திலும், பூமியின் சக்தி சூழ்நிலை எவ்வாறு வேறுபடுகிறது என்பதை உணர முடியும். 

இந்த மாற்றத்தைக் கவனத்தில் வைத்து குறிப்பிட்ட பலன்கள் பெற குறிப்பிட்ட விதத்திலான யந்திரங்கள் உருவாக்கும் பழக்கம் நம் கலாச்சாரத்தில் இருந்து வந்திருக்கிறது.

நமது கலாச்சாரத்தைப் பொருத்த வரையில் கோலத்தையும் ஒரு குறிப்பிட்ட வகையான யந்திரமாகத்தான் உருவாக்கினர். 

ஆனால் இப்போது இதை ஒரு அலங்கார உருவமாகப் பார்க்கின்றனர். 

பல நேரங்களில் தகர உருளையில் கோலப்பொடியை போட்டு உருட்டுகின்றனர் அதிலிருந்து ஏதோ ஒரு வடிவம் வருகிறது. 

ஆனால் கோலம் போடுவதற்கென்று ஒரு முறை இருக்கிறது.

புத்த மடாலயங்களில் ஒரு கோலத்தை 10 பேர் காலையிலிருந்து மாலை வரை போடுவார்கள். 

தொடர்ந்து 3, 4 மாதங்கள் வரை அந்தக் கோலத்தை வரைவார்கள். 

அவ்வளவு விரிவான ஏற்பாடுகளோடு அந்த கோலத்தைப் போடுவார்கள். 

ஒரு கோலம் வடிவத்தைப் பொறுத்தும் அதில் பயன்படுத்தும் பொருட்களைப் பொறுத்தும் வெவ்வேறு விதங்களில் செயல்படும். 

தாந்திரீக முறைப்படி பூஜை செய்யும்போது பெரிய கோலங்கள் இடப்படும். 

கேரளாவில் இதனை நாம் பார்க்க முடியும்.

எனக்கு 17 வயது இருக்கும். 

அப்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. 

நான் அப்போது மைசூரில் இருந்தேன். 

பேயைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் எழுந்தது. 

இத்தேடுதலில் பல நாட்கள் இரவு பகல் பாராமல் பேயைப் பார்ப்பதற்காக பல இடங்களுக்குச் செல்வேன். 

இதுமாதிரி பேய் தேடுதலில் நான் அலைந்து கொண்டிருந்த சமயத்தில், எனக்கு ஒருவர் அறிமுகமானார். 

தன் வீட்டில் நிறைய பாட்டில்களைக் காண்பித்து அந்த பாட்டில்களில் பேய்களை பிடித்து வைத்திருப்பதாக அவர் கூறினார். 

அந்த பாட்டில்கள் பார்ப்பதற்கு காலியாகத்தான் இருந்தன. 

ஆனால் அவரோ அதில் பேய் இருக்கிறது என்று கூறுவார்.

நானும் தினமும் அவருடைய வீட்டிற்குச் செல்வேன். 

அவருக்கு தெரியாமல் ஒரு பாட்டிலாவது எடுத்து வந்துவிடலாம் என்று திட்டமிட்டுச் செல்வேன். 

ஆனால் அவரோ என்னை அந்த பாட்டில்களின் பக்கத்திலேயே நெருங்க விடமாட்டார். 

அதன்பின் ஒருநாள் புதிது புதிதாய் ஏதோ ஏற்பாடெல்லாம் நடந்து கொண்டிருந்தது. 

அங்கு ஒரு கோலம் போடப்பட்டது. 

அந்தக் கோலத்தின் 5 மூலைகளில் 5 முட்டைகள் வைக்கப்பட்டது. 

ஏதோ செய்துவிட்டு கையைத் தட்டினார், அந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து சிதறின.

நான் அதுவரையில் அப்படி ஒரு காட்சியைக் கண்டதே இல்லை. 

எனவே அப்போது எனக்கு அது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. 

அந்தக் கோலம் இல்லாது போனால், அந்த மனிதர் கை தட்டிய விதத்திற்கு அந்த முட்டைகளை அவரால் உடைத்திருக்க முடியாது. 

அந்தக் கோலம் இதற்கு உகந்த ஓரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தது.

எனவே பலவிதமான பலன்களுக்கு பலவிதமான கோலங்களைப் போடமுடியும். 

அதில் ஒன்று மாட்டு சாணம் தெளித்து அதன்மேல் கோலம் இடுவது. 

அதற்கு குறிப்பிட்ட விதமான சக்தி இருக்கிறது.

மார்கழியில் என்ன விசேஷம்?

இந்த மாதத்தில்தான் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறான். 

அதாவது டிசம்பர் முதல் மே வரை சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும் ஜுன் மாதத்திலிருந்து நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் நகர்கிறான். 

சூரியனின் ஓட்டத்தில் இந்த மாற்றம் நிகழும்போது, பூமியினுடைய சக்தி சூழ்நிலையிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.

குறிப்பாக பூமத்திய ரேகையிலிருந்து 32 டிகிரி அட்சரேகையில் (Latitude) பெரிய மாற்றங்கள் நடைபெறுகின்றன. 

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் இந்தப் பரப்பில்தான் உள்ளன. 

இந்த மாற்றங்கள் நிகழ்கின்றபோது அதனை பயன்படுத்திக் கொள்ள பல கருவிகள் உருவாக்கப்பட்டன. 

யோக முறைகளிலும் பலவிதமான பயிற்சிகள் வகுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் மஹாபாரதக் கதை கேட்டிருப்பீர்கள். 

அதில் பீஷ்மர், தன் உடலில் அத்தனை அம்புகள் ஏறியிருந்தாலும் தன் உயிரை உத்தராயணத்தில்தான் துறக்க வேண்டும் என்று விடாமல் பிடித்து வைத்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். 

உத்தராயணத்தில் உடலை நீத்தால் முக்தி கிடைக்கும் என்னும் நம்பிக்கையே இதற்குக் காரணம். 

எனவே முக்தி நோக்கிலுள்ள மக்களுக்கு மார்கழியில் தொடங்கும் உத்தராயணம் முக்கியமானதாக இருக்கிறது.

எனவே சூரியனின் போக்கில் மாற்றங்கள் நிகழும் போதும், பூமிக்கும் சூரியனுக்குமான தொடர்பில் மாற்றங்கள் ஏற்படும்போதும், தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். 

அதில் ஒன்று தான் கோலம் இடுவதும்.

குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதன் மூலம் அந்தச் சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும். 

இதனை நீங்கள் விஞ்ஞானப்பூர்வமாக செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். 

உங்களுக்கும், உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும், உங்கள் வீட்டு சூழ்நிலைக்கும் நன்மையைக் கொண்டு வர முடியும். 

இந்த மாதத்தில் அதற்கான வாய்ப்பு மிகத் தீவிரமாக உள்ளது.

.....


                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator