ரமணரின் கருணைக்கு எல்லை ஏது!
ஒருமுறை… குளித்துவிட்டு வந்ததும் அந்தக் கொடியில் உலர்த்தியிருந்த துண்டை எடுத்தார் ஸ்ரீரமணர். அந்த மூங்கில் கொடியின் ஓரத்தில் குருவிஒன்று கூடு கட்டியிருந்தது. தவிர, குருவியானது நாலைந்து முட்டைகளையும் இட்டிருந்தது போலும்! இவை எதையும் கவனிக்காத ரமண மகரிஷி, துண்டை எடுக்க… அப்போது அவருடைய கை குருவியின் கூட்டில் பட்டது. இதனால், கூட்டில் இருந்து முட்டை ஒன்று கீழே விழுந்ததில் லேசாக விரிசல் உண்டாயிற்று!
இதைக் கண்டதும் ரமணர் பதறிப் போனார். செய்வதறியாது தவித்தார். இந்தக் கூட்டைக் கவனிக்காமல் இருந்து விட்டோமே… என்று கலங்கினார்; கண்ணீர் விட்டார்! அருகில் இருந்தவர்களை அவசரமாக அழைத்த மகரிஷி, "மூங்கில் கொடியில் குருவியானது, கூடு கட்டியிருப்பதை எவருமே பார்க்கவில்லையா? அப்படி பார்த்திருந்தால், முன்னமே என்னிடம் சொல்லியிருக்கலாமே? கொடியில் இருந்த துண்டை எடுக்கும்போது கூட்டுக்கு ஒன்றும் நேராமல் தவிர்த்திருக்கலாமே…" என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.
'எவ்வளவு பெரிய பாவம் செய்து விட்டோம்…' என்று வருந்தியபடி இருந்த ரமணர், விரிசலுடன் இருந்த முட்டையை எடுத்து, தனது உள்ளங்கையில் வைத்துக் கொண்டார். அந்த முட்டையையே கருணையுடன் பார்த்தார். 'பாவம் இதன் தாய்! இதனால் அது எவ்வளவு துக்கப்பட்டிருக்கும்? அந்தத் தாய்க் குருவி ஆசையுடனும் அன்புடனும் அடைகாத்த முட்டையை உடைத்துவிட்டதால் என் மீது அது எவ்வளவு கோபமாக இருக்கும்? இந்த விரிசல் சேருமா? சேர்ந்தால் நன்றாக இருக்குமே…' – மனதுள் நினைத்துக் கொண்டார்.
கருணை மனமும் தாய்மை குணமும் கொண்டு முட்டையிடம் வாஞ்சை காட்டிய ரமணருக்கு, அப்போது உதித்தது யோசனை ஒன்று… விறுவிறுவென துணி ஒன்றை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வந்தார்; அந்த விரிசல் விழுந்த முட்டையைச் சுற்றிலும் ஈரத்துணியைக் கட்டினார்; அப்படியே பூப்போல மெள்ள எடுத்து வந்து கூட்டுக்குள்ளேயே வைத்தார். அவ்வளவுதான்! அன்று முழுவதும் வேறு எதிலும் ஈடுபடவே இல்லை ரமணர்! குருவிக் கூட்டுக்கு அருகிலேயே அமர்ந்த ரமண மகரிஷி, மனதுள் தோன்றும் போதெல்லாம் எழுந்து, கூட்டுக்கு அருகே போவதும் அந்த துணி கட்டிய முட்டையை எடுத்து கருணை வழிய பார்ப்பதுமாகவே இருந்தார். உள்ளங்கையில் முட்டையை ஏந்தியிருக்கும் வேளையில், அவருடைய மனம், 'இந்த விரிசல் ஒட்டிக்கொள்ள வேண்டும்; முட்டையானது உயிராக மலர வேண்டும்' என்றே சிந்தித்தது.
ஞான குருவின் எண்ண அலைகள், அந்த முட்டை விரிசலிலேயே இரண்டறக் கலந்திருந்தது. ஏதோ மிகப் பெரியதொரு குற்றத்தைச் செய்துவிட்டது போல் கூனிக் குறுகியவர், அந்தத் தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் விதமாக குருவிக் கூட்டுக்கு அருகில் இருந்ததைக் கண்ட அன்பர்கள், 'நம்முடைய மகான் செய்யும் இந்தக் காரியம் கிட்டத்தட்ட தவத்துக்கு இணையானதுதான்' என உணர்ந்து சிலிர்த்தனர்.
அடுத்தடுத்த நாளும் இது தொடர்ந்தது. துணியை தண்ணீரில் நனைப்பதும், அந்த முட்டையில் கட்டி வைப்பதும், அருகில் இருந்தபடியே அடிக்கடி வாஞ்சையுடன் பார்த்து வருவதுமாக இருந்தார் ஸ்ரீரமணர்! ஏழாம் நாள்… துணியை நீரில் நனைத்து கட்டுவதற்காக, முட்டையை எடுத்தவர் அப்படியே வியந்து நின்றார். அவர் முகம் முழுவதும் நிம்மதி; ஆம்… அந்த விரிசலைக் காணோம்!
அன்பர்களை அழைத்த ரமணர் சந்தோஷத்துடன், "இங்கே பார்த்தீர்களா? முட்டையில் விரிசல் இருந்த சுவடுகூட தெரியவில்லை. தாய்க் குருவிக்கு இது தெரிந்தால், எத்தனை சந்தோஷப்படும்? இனி ஒரு குறையுமில்லை. நல்லவேளை… மிகப் பெரிய பாவத்துக்கு ஆளாக இருந்த என்னை, இறைவன் காப்பாற்றி விட்டான்" என்று கூறி சின்னக் குழந்தை போல் பரவசமானார் ரமணர்.
சில நாட்கள் கழிந்த நிலையில், மூங்கில் கொடியின் ஓரத்தில் இருந்த குருவிக் கூட்டை எட்டிப் பார்த்த ரமண மகரிஷியின் மனமெல்லாம் நிறைந்தது. அந்த முட்டை குஞ்சாகப் பொரிந்து, உயிராகக் காட்சி தந்தது.
குருவிக் குஞ்சை அப்படியே எடுத்து உள்ளங்கையில் ஏந்திக் கொண்டார் ரமணர்; அதன் உடலை மெள்ள வருடிக் கொடுத்தார்.ஆஸ்ரமத்து பணியாளர்கள் மற்றும் அன்பர் பெருமக்களை அழைத்தவர், "பார்த்தீர்களா குழந்தையை! எவ்வளவு அழகாக இருக்கிறது!" என்று எல்லோரிடமும் குருவிக் குஞ்சைக் காட்டி குதூகலித்தார். தாய்க் குருவி, முட்டையை அடைகாத்ததோ இல்லையோ… அந்த தாய்க் குருவியின் ஸ்தானத்தில் இருந்தபடி முட்டையை அடைகாத்தார் ரமணர்.
'நான்' எனும் கர்வத்தையும் சிந்தனையையும் ஒழித்து, பார்க்கும் உயிரில் எல்லாம் இறைவனைக் கண்ட ரமணரின் கருணைக்கு எல்லை ஏது?!
Thanks Mr. V. Karthikeyan
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
No comments:
Post a Comment