1957- சென்னை மாநகரின் இந்த அரை நூற்றாண்டு சரித்திரத்தில் ஒரு பொற்காலம். கலியுகத்தில் நம் ஊனக்கண்களுக்கும் காட்சி அருளும் அவதார மூர்த்தி – காஞ்சி முனிவர் – பெரியவாள் என்றிந்தப் பார் புகழும் தவசிரேஷ்டன் தடுத்தாட்கொள்ளும் தயையால் சென்னையில் முகாம் இட்டிருந்த புண்ணிய மாதங்கள். பிரதானமாக மயிலாப்பூர் ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில், அன்று இளவரசரான புதுப் பெரியவாள் ஸ்ரீ ஜயேந்திரருடன், தங்கியிருந்த அருளாளன் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், தொண்டையார்ப்பேட்டை, மாம்பலம் என்று மாநகரின் பல பகுதிகளிலும் தனது புனிதத் திருவடிகளைப் பதித்து, பண்டு தருமம் மிகுந்திருந்த சென்னையில் மீண்டும் தருமப் பயிர் தழைக்க அருள் மழை பெய்து மக்களை அனுக்ரஹித்தார்.
ஒரு நாள் அதிகாலையில் மாம்பலம் சிவா-விஷ்ணு ஆலயத்திலிருந்து ஸ்ரீ திரிபுரசுந்தரி அன்னையுடன் ஸ்ரீமருந்தீஸ்வரர் கோயில் கொண்டுள்ள திருவான்மியூருக்கு அண்ணல் பாதயாத்திரை புறப்பட்டிருந்தார். உடன் செல்லும் பாக்கியம் பெற்ற பக்தர் குழாமில் அடியேனும் இடம் பெற்றிருந்தேன். அன்று முதலமைச்சர் திரு பக்தவத்ஸலம் என்று நினைவு. காவல் துறையாளர் இரண்டு மூன்று பேரும் கூட நடந்தனர்.
சிறிது தூரம் சென்றதும் எதிர்திசையிலிருந்து வந்த ஒருவன் ஸ்ரீ பெரியவாளை நெருங்கினான். செருக்கு மிகுந்த நோக்கு. செருப்புகளைக் கழற்றாத பாதங்கள். அலட்சியமும் அவமரியாதையும் அன்வயமாகியிருந்தன அவனது தோற்றத்தில், தோரணையில்.
முனிபுங்கவர் மீது அவனது ஸ்பரிசம் படாது தடுக்க விரைந்த பக்தர்கள், கைகளால் அரண் கட்டினர். காவல் துறையாளரும் முன் வந்தனர். ஆனால் கருணாமூர்த்தி அவர்களை விலகச் சொல்லிவிட்டு கனிவோடு "உனக்கு என்ன வேண்டும்" என்று வினவினார்.
"எனக்கொண்ணும் வேண்டாம். சங்கராச்சாரியார் பெரியவர்ன்னு பேசிக்கிறாங்களே, அது நீங்கதானே?" என்று வினவினான்.
"அதிருக்கட்டும். உன்னோட பேரென்ன? இந்த விடியக்காலத்துலே எங்கே போயிண்டிருக்கே?" – சரணாகத வத்ஸலனின் பரிவான விசாரணை.
அவன் தன் பெயரைச் சொல்லிவிட்டு, "எனக்கு ஜோலியில்லையா? வேலைக்குப் போய்க்கினு இருக்கேன்" என்று அஸ்திரம் ஏவுவது போல் கூறினான். "நீங்கள் மடாதிபதிகள் சோம்பேறிகள். பயனுள்ள காரியம் ஏதும் செய்யாதவர்கள்" என்ற ஏளனம் – கண்டனம் – அவன் பதிலில் தொனித்தது.
"உனக்கு எங்கே வேலை?" தயாநிதியின் தொடர்ந்த விசாரணை.
"கிண்டியில்" என்று கூறியபின் "ஒண்ணு கேக்கறேன். இந்த இந்து மதத்தை யாரு உண்டாக்கினாங்க?" எனக் கேட்டான்; வினாவில் ஞானம் தேடும் விநயமோ அறிவு வேட்கையோ கடுகளவும் இல்லை.
ஸ்ரீபெரியவாளின் – ஞான மேருவின் – "தெரியாதப்பா" என்ற மறுமொழி ஏதோ வாதத்தில் வெற்றி கொண்ட இறுமாப்பை அவனுக்குத் தந்தது போலும்.
"தெரியாதுங்கிறீங்க; அப்புறம் சாத்திரம் அப்படிச் சொல்லுது, இப்படிச் சொல்லுது' சிலைமேலே பாலை ஊத்து, நெருப்பிலே நெய்யை ஊத்துண்ணு சொல்றீங்களே? எப்படி, இதெல்லாம் நல்லதுக்குன்னு நம்பறது?" எனக் கணை தொடுத்தான்.
கொஞ்சமும் சலனமுறாமல் தயாபரன் "அதிருக்கட்டும், கிண்டிக்குப் போகணும்னியே, இந்த ரோடுல போனா கிண்டி வந்துடுமா?" என்று வீணை ஒலித் தண்குரலில் வினவினார்.
"அதானே நான் போய்ட்டிருக்கேன்" என்ற பதிலில் "இதென்ன அநாவசியக் கேள்வி" என்ற உதாசீனம்.
"ஆமா… இந்த ரோடு யாரு போட்டது?..." அந்தப் பாமரனின் இதய வீணையை மீட்ட முற்பட்டுவிட்டார் முனிபுங்கவர்.
"இது என்னோட பாட்டன், முப்பாட்டன், அவுங்களோட முப்பாட்டன் காலத்துலேருந்து இருக்கற ரோடு… இதை யார் போட்டிருந்தா என்ன? கிண்டிக்குப் போவுது; அம்புட்டுத்தானே வேணும்?"
"இது கிண்டிக்குப் போற ரோடுன்னு நிச்சயமாச் சொல்றியே"
"இதிலே என்னங்க சந்தேகம்? தினமுந்தான் போய்க்கினு இருக்கேனே… மேலாலும் உசரப் பாருங்க… எந்தெந்த சாலை எங்கே போவுதுன்னு கைகாட்டி போர்டு போட்டிருக்காங்களே சர்க்காரிலே"
மான் அன்பு வலையில் சிக்கிவிட்டது. ஆனால் இது சிறைப்படல் இல்லை; மீட்சி!
"நானும் உன்னைப் போலத்தாம்பா… இந்த ரோடு யாரு போட்டதுன்னு அலட்டிக்காம, மேலே இருக்கிற கைகாட்டி போர்டையும் நம்பி நீ போற மாதிரி, நான் இந்து மதம் யாரு உண்டாக்கியதுன்னு விசாரப்படாமே போறேன்… நீ இந்தக் கைகாட்டிய நம்பறே… அது கூட காத்துலே மழையிலே தெசை மாறலாம்; கீழே விழலாமே.. நானும் இந்த சாஸ்திரம், வேதம்ங்கிறதையெல்லாம் அப்படியே நம்பிப் போறேன். அதெல்லாம் என்னைவிட எவ்வளவோ பெரியவா, முப்பாட்டனில்ல ஆயிரம் ஆயிரம் வருஷங்களா நெலச்சிருக்கிறதை நம்பறேன்; நம்பச் சொல்றேன்" என்று பரிவு ததும்பும் குரலில் கூறிய தயாநிதி,
"சரி, உனக்கு ஜோலியிருக்கே…. என்னைப் போலயா?... ஜாக்ரதையாப் போய்ட்டு வாப்பா" என்று அபயக்கரம் உயர்த்தினார்.
அடுத்த வினாடி அவன் பாதரட்சைகளை உதறி விட்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தான்.
"என்னை மன்னிச்சுடுங்க" என்று நாத்தழுதழுக்கக் கூறினான். கன்னங்களைக் கண்ணீர் நனைத்தது.
Those who came to scoff remained to pray (ஏளனம் செய்ய வந்தவர் பிரார்த்தித்து வணங்க அமர்ந்தனர்) என்ற ஆலிவர் கோல்ட் ஸ்மித்தின் (The village Preacher) (கிராம பூஜாரி) கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.
அதன் பின் ஸ்ரீ பெரியவாளின் பல முகாம்களிலும் தரிசனத்துக்கு வந்தான் அந்தப் பரம பக்தன், ரஸவாதப் பரிணாமத்தால்!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
thanjavooran
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''