Monday 10 November 2014

அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்! பட்டமங்கலம் ஜோதிடம்

பட்டமங்கலம் ஜோதிடம்
அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்!

இந்துத் திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண்டு செய்யப்படுபவை. அவை யாவும் அழகானவை; அர்த்தமுள்ளவை; மங்கலமானவை. திருமணங்களலில் சொல்லப்படும் மந்திரங்களின் மூலம் ரிக் வேதமே. இந்துத் திருமணச் சடங்குகளில் இடம் பெறும் மந்திரங்கள் பெரும்பாலும் இறையைப் பணிவதாகவும், மேன்மையான செய்திகளைத் தாங்கியதாகவும், தனிமனித உறுதிமொழிகளாகவும் இருக்கின்றன. ஆனால் அந்தணர்கள் இந்த வடமொழி மந்திரங்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் உச்சரிப்பதனால் நமக்குத்தான் அதன் உட்பொருள் சரிவரப் புரிவதில்லை. நான் அறிந்த வரையில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் செய்யப்படுவது விக்னேஸ்வர பூஜை. 'கண' என்றால் குழு. 'பதி' என்றால் தலைவன். எனவே கணபதி என்கிற மனிதக் குழுக்களுக்குத் தலைவனை வணங்கி, 'கணானாஹந்த்வா கணபதிம்' என்கிற மந்திரத்தில் துவங்கி கணபதி பூஜை நடககிறது. கோள்களின் சுழற்சித் தாக்கம் பூமியைப் பாதிக்கிறது என்கிற பட்சத்தில் மனிதர்களின் வாழ்வில் அவற்றின் தாக்கம் இல்லாதிருக்குமா? எனவே அடுத்ததாக நவக்கிரக பூஜை. பிறகு விரதம். மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் கையில் காப்பு கட்டப்பட்டு அவர்கள் அக்கினியைத் தொழுகிறார்கள். 

அடுத்தது சங்கல்பம். மேன்மையான நோக்கங்களை நிறைவேற்ற உறுதி பூணுவதற்குப் பெயர் சங்கல்பம். அறவழியில் வாழும் மக்கட் செல்வத்தைப் பெறுவதே திருமணத்தின் நோக்கம். இல்லறத்தாரின் கடமை தர்மத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் நன்மக்கள் பெறுதல். அதற்காக சங்கல்பம் செய்யப்படுகிறது. மணப்பெண்ணின் தந்தை மாப்பிள்ளையை விஷ்ணுவாகவே பாவித்து அவன் திருவடிகளைக் கழுவுகிறார். அதற்குப் பதிலாக மாப்பிள்ளை சொல்லும் மந்திரம்: ''என் காலைத் தொட்ட இந்தப் புனித நீர் என் அக எதிரிகளைத் தூளாக்கட்டும். நான் இறையொளியில் தேஜஸ்பட்டுத் திகழ்வேனாக!'' பெண்ணின் தந்தை சொல்கிறார்: ''ஓ, விஷ்ணுவின் வடிவே! இதோ உங்கள் ஆசனம்! உங்களுக்கு என் இனிய வரவேற்பு!''

பின் கன்யாதானம்! பெண்ணின் தந்தை மாப்பிள்ளையிடம் சொல்கிறார்: ''இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்...'' மாப்பிள்ளை மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டு மும்முறை உறுதி சொல்கிறார்: ''இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பாலும் என்றென்றும் நான் இவளது துணைவனாக இருப்பேன்!'' என்று. மணப்பெண் தந்தையின் மடியில் அமர, தந்தை சொல்வது: ''ஓ விஷ்ணுவே! அணிகலன்கள் பூண்ட என் மகளை உமக்கு வழங்குகிறேன். இதன் மூலம் எனது முந்தைய 10 தலைமுறை மற்றும் பிந்தைய 10 தலைமுறை வினைகளிலிருந்து விடுதலை பெறட்டும். எனக்கும் முக்தி கிடைக்கட்டும். அது இவள் மூலம் பிறந்த அறவழியில் நிற்கப் போகும் குழந்தைகளின் மூலம் நிகழட்டும்! அவர்கள் திருமாலையும், திருமகளையும் தொழுது அதன் மூலம் எனக்கு பிரம்மலோகப் பதவி கிடைக்கட்டும். பூமித்தாயும் படைப்பைத் தாங்கும் சக்தியும், எல்லாத் தேவர்களும், அனைத்து உயிரினங்களும் எனது மூதாதையர்கள் முக்தியடையும் பொருட்டு நான் செய்யும் இந்தக் கன்யாதானத்திற்கு சாட்‌சியாய் நிற்கட்டும்!'' பின் மாப்பிள்ளையிடம், ''பக்தி, செல்வம், ஆசை இவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இவளுக்கு இடையூறு நேரக் கூடாது'' என்க, மாப்பிள்ளை பதிலுக்கு ''நான் அவளுக்கு இடையூறு செய்ய மாட்டேன்'' என்று மும்முறை உறுதி கூறுகிறார்.

மணமகன் அவள் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து ஒரு முடிச்சுப் போட, அவனது சகோதரியர் இன்னும் இரு முடிச்சுகளைப் போடுகிறார்கள். மங்கல நாணை அணிவிக்கையில் மாப்பிள்ளை, ''உன்னோடு நான் நீடு வாழ இறையைத் துதிக்கிறேன். இந்த மங்கல நாணை உன் அழகிய கழுத்தில் அணிவிக்கிறேன். எல்லாப் பேறுகளும் பெற்று நீ நூறாண்டு நிறைவான வாழ்க்கை வாழ இறை அருள்வதாக!'' அதன்பின் அக்னியை நோக்கி அவன் அவளை அழைத்து வரும்போது சொல்லும் மந்திரம்: ''பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும். பல மங்கலமான செயல்களில் என்னைத் தூண்டப்போகும் பெண்ணே! என் வீட்டின் ராணியாக அடியெடுத்து வை!''

இதற்குப் பின் பாணிக்கிரஹ ணம். மணமகளின் கரத்தைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு மணமகன், ''ஓ பண்புள்ள பெண்ணே! நீ கடவுளர்களுக்குச் சொந்தமான செல்வம். அவர்கள் கருணை மேலிட்டு நான் இல்லறம் பேணுவதற்காய் உன்னை எனக்கு அளித்துள்ளார்கள். முதுமையிலும் நாம் பிரியாமல் நீடு வாழ்வோமாக! உன் திருக்கரம் பற்றியே நான் இல்லறம் எனும் நிலைவாயிலில் நுழைகிறேன். முன்னோடிகளான பகன் மற்றும் அக்னியின் ஆசிகள் எனக்குண்டு'' பிறகு சரஸ்வதி தேவியையும், வாயுவையும் தொழுகிறார்கள். பின் இருவரும் அக்னியை வலம் வருகிறார்கள்.

மணமகளின் பாதம் தொட்டு, மெட்டி அணிவித்து ஏழு அடிகள் அவள் எடுத்து வைக்க உதவுகிறான் மணமகன். இது 'சப்தபதி' எனப்படுகிறது. அப்போது சொல்லும் மந்திரம்: ''ஓரடி எடுத்து வைத்ததுமே என் துணைவியாகி விட்டாய். இதன் மூலம் உன் நட்பைப் பெற்றேன். முதலடி நிறைவான உணவுக்காக. இரண்டாம் அடி எல்லாவிதமான செல்வங்களுக்காகவும். மூன்றாம் அடி தன் முயற்சிகளில் வெற்றிக்காக. நான்காம் அடி இன்பங்களுக்கும் வசதிகளுக்குமாக. ஐந்தாம் அடி கால்நடைச் செல்வத்துக்காக. ஆறாம் அடி எல்லாப் பருவ நிலைகளிலும் நலமோடு வாழ்வதற்காக. ஏழாம் அடி அக்கினியை எழுப்பி வேள்விகள் செய்யும் பேற்றுக்காக. நாராயணன் உன்னருகே இருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக! என்னோடு ஏழடிகள் எடுத்து வைத்தாய். என் துணை நீ. இப்போதிலிருந்து நாம் நண்பர்கள். இந்த நட்பிலிருந்து என்றும் விலகாதிருப்போம். சேர்ந்தே வாழ்வோம். எந்த முடிவையும் சேர்ந்தே எடுப்போம். எதையும் இணைந்தே செய்வோம். ஒருவர் மீதொருவர் அன்பு கொண்டு, ஒருவருக்கொருவர் ஆசையோடு உணவையும் செல்வத்தையும் ஒரேவிதமாய் பகிர்ந்து கொண்டு ஒரே மனத்துடன் வாழ்வோம். ஒரே நோக்கத்தோடே விரதங்களை கடைப்பிடிப்போம். நீ கவி‌தை-நான் கானம், நீ தொடுவானம்- நான் அதைத் தொடும் பூமி, நான் உயிர்விதை வழங்குவோன்- நீ அ‌தையேந்தும் பாத்திரம், நான் மனம்- நீ சொல்! என்னுடன் நட்பாக இருப்பாயாக! இன்சொல் ததும்பும் பெண்ணே, வா... செல்வமும் நன்மக்களும் பெறுவோம்!''

அதன்பின் ஹோமம் செய்யப்படும்போது சொல்லும் மந்திரங்கள்: ''இதுவரை இவளைக் காத்தருளிய தேவர்களுக்கு வந்தனம். இந்தக் கன்னி தனது வீட்டிலிருந்து கணவன் வீடு புகுகிறாள். இளவயதுக்குரிய பிணிகளெதுவும் இவளிடம் இல்லாது போகட்டும்! தனது தந்தை வீட்டின் பந்தத்திலிருந்து விடுபட்டு தன் கணவன் வீட்டில் எல்லாரோடும் புதிய சொந்தம் ஏற்படுத்திக் கொள்ளட்டும்! இந்திரனே! இவளக்கு எல்லாப் பேறுகளும் இனிய குழந்தைகளையும் வழங்குவாயாக! இவளுக்கு 10 குழந்தைகளை வழங்கி என்னை 11வது குழந்தையாக்கி இவள் பேணி வளர்ப்பாளாக! சூரியனே, எங்கள் குழந்தைகள் எதுவும் அகால மரணம் அடையாதபடி காப்பாயாக. அக்கினியே, ஆபத்துகளிலிருந்து அவளைக் காப்பாயாக. அவளுக்கு நீண்ட ஆயுளைத் தருவீராக. மழலை பேசும் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் பேற்றை அவளுக்கு அருள்வீராக! ஓ, மணமகளே! உன் வீட்டில் என்றும் துயரமில்லாமல் போகவும், நீ கணவனையும் குழந்தைகளையும் ஒரு போதும் பிரியாமலிருக்கவும் அக்கினிக்கு இந்த ஆஹுதியை வழங்குகிறோம். எல்லாத் தேவர்களும் உன்னைக் காப்பார்களாக!'''

மணமகளை அம்மியை மிதிக்கச் செய்து, மணமகன் சொல்வது: ''இந்த அம்மியின் மீது ஏறி நிற்பாயாக! உன்னை எதிர்ப்பவர்களை வலிமையுடன் எதிர்கொள்வாயாக! அதே நேரத்தில் எதிரிகளுடன் கருணையுடனும் நடந்து கொள்வாயாக! '' சப்த ரிஷிகளிலே வசிஷ்டரின் மனைவியான அருந்ததி அண்டவெளியில் நட்சத்திரமாய் மின்னுகிறார். அந்த அன்னையின் அருள் பெற வேண்டி பார்க்கச் சொல்லும் ஐதீகத்தின் போது சொல்லப்படுவது- மணமகன், ''ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததியே சாலச் சிறந்தவள் என்று அறிவித்தார்கள். அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருதப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்'' என்று பிரார்த்திக்கிறான். இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். ''ஓ துருவனே! உறுதியான இடத்தில் வசிக்கிறாய் நீ. உறுதியாக இருக்கிறாய். நீ உறுதியின் ஊற்று! வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு. நட்சத்திர மண்டலங்களின் அச்சாணி நீ. உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்று!''

பெண் புதிய வீட்டுக்குள் நுழையும் கிருஹப்பிரவேச சடங்கின்போது சொல்லப்படும் மந்திரங்கள்: ''கந்தர்வர்களும் அப்சரஸ்களும் இவள் மீது எல்லா நலன்களையும் பொழிவார்களாக! உனக்குப் புதிதான இந்த வீட்டில் நீ உன் கணவனோடு மகிழ்ச்சியாகவும் மக்கட் செல்வத்தோடும் வாழ்க. இந்த வீட்டில் உன் இல்லறக் கடமைகளில் கவனமாயிரு. உன் தலைவனான கணவனைத் தழுவியிரு. நீங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்து, இந்த வீட்டின் நியதிகளுக்கேற்ப இதனை நிர்வகிப்பீராக. உன் கணவன் வீட்டின் ராணியாயிரு. உன் நன்னடத்தை மூலம் உன் மாமியார் ம்ற்றும் நாத்தனார்களின் அன்பை வென்று கொள்.'' பின் மணமகள் சொல்வது: ''வளம் செறிந்த, மங்கலகரமான, வீரர்களால் பாதுகாக்கப்பட்ட, மகிழ்ச்சிமயமான உறவினர்கள், மைத்துனர்கள், அவர்கள் குழந்தைகள் நிறைந்த இந்தப் புதிய வீட்டில் நான் எந்தவிதமான நடுக்கமுமின்றி நுழைகிறேன்!'' கிரஹப்பிரவேச ஹோமத்தில் மணமகன் சொல்லும் மந்திரம்: ''என் மனைவி வந்து விட்டாள் பரிசுகளோடும், கால்நடைச் செல்வத்தோடும். நிரந்தரமான வேள்வி நீடிக்க, நல்ல குழந்தைகளை அக்கினி தேவன் இவளுக்கு அருள்வானாக!''

பிறகு இறுதியாக சேஷ ஹோமம் செய்யப்படும். அப்போது மணமகன் சொல்லும் மந்திரம்: ''அக்கினியே! வாயுவே! ஆதித்தனே! பிரஜாபதியே! உங்களைத் தொழுதால் குறைகளும் நிறைகளாய் மாறும். உங்களைச் சரண் புகுந்தேன். தயைகூர்ந்து என்னைக் காக்க வருவீராக. என் மனைவிக்குத் துயரமான வினையெதுவுமிருந்தால் அதைத் தீர்த்தருள்க! உள்ளிருந்து தொல்லை செய்யும் என் எதிரிகளை நீங்கள் தீர்த்துக் கட்டவே இந்த ஆஹுதியை அளிக்கிறேன்.'' இந்த மந்திரத்தைத் தொடர்ந்து பெரியவர்களிடம் ஆசி பெறுகிறார்கள். திருமணச் சடங்குகள் இனிதே நிறைவடைய இல்லற வாழ்வினுள் அடியெடுத்து வைக்கிறார்கள். 

வாழி நலம்!

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator