Wednesday 19 November 2014

கிருஷ்ணர் சொன்ன பொய்யை சொல்லாத தர்மரும். பொய்யை சொன்ன ததிபாண்டனும்."

கிருஷ்ணர் சொன்ன பொய்யை சொல்லாத தர்மரும்.

பொய்யை சொன்ன ததிபாண்டனும்."

"கிழக்கு தாம்பரத்தில் மிக அழகாக தத்துவங்களோடு
திரு உ.வே.அனந்தபத்மநாபாச்சாரியார்,ஆஸ்திக சபா சார்பில்
கிருஷ்ண லீலை உபன்யாஸத்தில்-ஒரு பகுதி.(13-08-2014)

ஸ்ரீகிருஷ்ணர், ''குல குருவான துரோணரை வீழ்த்தவில்லையென்றால் பாண்டவர்களுக்கு தோல்வி ஏற்படுவது நிச்சயம். துரோணாசாரியாரை அழிக்க ஒரே வழிதான் உள்ளது. அவரின் மகனான அஸ்வத்தாமா இறந்துவிட்டதாக ஒரு பொய் சொன்னால், அதுவும் தர்மர் சொன்னால், துரோணர் அதை நம்பி, புத்திர சோகத்தால் சில நிமிடங்களாவது செயலற்றுப் போவார்; போர் புரிவதை நிறுத்திவிடுவார். அப்போது சமயம் பார்த்து அவரை வீழ்த்திவிடலாம்'' என்று ஆலோசனை கூறினார்.



ஆனால் தர்மர் இந்தக் குறுக்கு வழியை ஏற்கவில்லை. அந்தச் சமயத்தில் தர்மரின் தம்பி பீமசேனன், ஒரு யுக்தி செய்தான்; 'அஸ்வத்தாமா' என்ற பெயருடைய ஒரு யானையை வீழ்த்தினான். உடனே கிருஷ்ண பகவான் தர்மரை பார்த்து, ''அஸ்வத்தாமா அதஹ: குஞ்சர'' என்று உரக்கச் சொல்லச் சொன்னார். அதாவது, 'அஸ்வத்தாமா என்ற யானை இறந்துவிட்டது' என்பது இதன் பொருள். தர்மராஜனும் அவ்வாறே உண்மையைக் கூறியபோது, 'குஞ்சர' என்ற வார்த்தையை ('குஞ்சரம்' என்றால் யானை) தன் சங்கை முழக்கி அடக்கிவிட்டார் கண்ணன். தர்மரின் வாக்கியம், துரோணரின் காதில், 'அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்' என்கிற ரீதியில் கேட்டது. உடனே அவர் புத்திர சோகத்தினால் தன் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட, அச்சமயம் பாண்டவர்கள் அவரை வீழ்த்தினர்.

---------------------------------------------------------------------------------------------
கண்ணன் எப்போதுமே யாரையாவது சீண்டிவிட்டு, அவர்களை ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிவிட்டு, வேடிக்கை பார்ப்பதிலே ஆனந்தம் காண்பவன். தன் நண்பர்கள் குழுவிலே அவனுக்கு மிகப் பிரியமான நண்பன் ததிபாண்டன். இவன் ஒர் அப்பாவி. அதே சமயம் அம்மாஞ்சி என்றும் சொல்லலாம்.

கண்ணன் செய்யும் குறும்புகளிலே, இவனும் கலந்துகொள்வான். ஆனால் கண்ணன் அதிலிருந்து நழுவிக்கொண்டு, இந்தத் ததிபாண்டனை மாட்டிவிடுவான். ததிபாண்டன் மாட்டிக்கொண்டு தத்தளிப்பான்.

ஒருநாள் ததிபாண்டன் தன் வீட்டுப் பின்புற முற்றத்தில் தாய்ப் பசுக்களிடம் சென்று பாலைக் குடித்து விடாதபடி கன்றுகளைக் கயிற்றினால் பிணைத்து, பாதுகாத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனை எப்படியாவது ஏதாவதொரு சிக்கலில் மாட்டிவிடவேண்டுன்று நினைத்த கண்ணன், அடுத்த நாழிகை அவன் கண்ணுக்குத் தொலைவில் தோன்றினான். தன் கையிலிருந்த குழலை அசைத்து, ததிபாண்டனின் கவனத்தை தன் பக்கம் இழுத்தான். ததிபாண்டனை அங்கு வரும்படி கூறினான். ஆனால் ததிபாண்டனோ, ""பாலைக் கறக்க அம்மா பாத்திரம் கொண்டு வர உள்ளே போயிருக்கிறாள். அம்மா வரும் வரை இந்தக் கன்றுகளை, தாய்ப் பசுக்களிடம் போகாமல் நான் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் கன்றுகளை விட்டுவிட்டு வரமாட்டேன்'' என்று சத்தமாகக் கூறினான்.

ததிபாண்டன் வரமாட்டான் என்பதைக் கண்ட கண்ணன், அவன் அருகில் வந்தான். ததி பாண்டனைப் பார்த்து ""அந்த வைக்கோல் போரின் பின்பக்கம் போய்ப் பார். அங்கே சுவையான இனிப்புப் பண்டம் இருக்கிறது'' என்றான் கண்ணன்.

இனிப்புப் பண்டமா?

ததிபாண்டனின் முகம் மலர்ந்தது.

ஆவலோடு துள்ளிக் குதித்து அங்கே ஓடினான். மாயக்கண்ணன் அல்லவா! அங்கே தின்பண்டங்களை வரவழைத்து வைத்திருந்தான். ததிபாண்டனும் அந்தத் தின்பண்டங்களை ஒவ்வொன்றாக ஆசையோடு எடுத்து ருசித்துக் கொண்டிருந்தான்.

கண்ணன் தன் கைப்பிடியிலிருந்த கன்றுகளை அவிழ்த்துவிட்டான். அவை தாய்ப்பசுவிடம் தாவிக்குதித்து ஓடிச் சென்று பாலைக் குடித்து மகிழ்ந்தன. மாயக்கண்ணன் உடனே அங்கிருந்து மறைந்தான்.

வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த ததிபாண்டனின் தாய், அத்தனை கன்றுகளும் பாலைக் குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு பதறிப்போனாள். ஓடிப் போய் கன்றுகளைக் கட்டிப்போட்டுவிட்டு, ஒரு மூங்கில் கம்பை எடுத்துக்கொண்டு, ததிபாண்டனைத் தேடிக் கண்டுபிடித்தாள். ""கன்றுகளைப் பார்த்துக்கொள்ளச் சொன்னால் அதையெல்லாம் விட்டுவிட்டு இங்கு தின்பண்டமா தின்கிறாய்?'' என்று கம்பால் அடித்தாள்.

இதுபோன்று பலமுறை, பல செயல்களில் ஏமாற்றமடைந்து மாட்டிக்கொண்ட ததிபாண்டனுக்கு கண்ணன் மீது கடும்கோபமும், ஆத்திரமும் வந்தது. அவனை இது போன்று வேறு ஏதாவது ஒன்றில் மாட்டி வைத்து வேடிக்கை பார்க்க வேண்டுமென்று ததிபாண்டன் ஆசைப்பட்டான்.

ஒருநாள் ஒரு கோபிகையின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த கண்ணன், அங்கிருந்த தயிர்ப்பானையை உடைத்துவிட்டான். கோபம் கொண்ட கோபிகை கண்ணனை துரத்தி வந்தாள். கண்ணன் சிட்டுப் போலப் பறந்துவிட்டான். தன் வீட்டுத் தயிர்ப்பானையை உடைத்த விவரத்தை யசோதையிடம் எடுத்துக் கூறினாள் கோபிகை. கண்ணனின் மீது இது போல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வருவதைக் கண்ட யசோதைக்கு கண்ணன் மீது கடுமையான கோபம் வந்தது. அவனை இழுத்து வந்து தூணில் கட்டிப் போட நினைத்த யசோதை, அந்தக் கோபிகையை உடன் அழைத்துக் கொண்டு கண்ணனைத் தேடிப் போனாள்.

தன்னை அடிப்பதற்காக யசோதையும், கோபிகையும் வருவதைக் கண்ட கண்ணன் ஓடிப்போய் ஒரு வீட்டிற்குள் நுழைந்தான். அங்கே பெரிய பெரிய பானைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பானையாக கண்ணன் திறந்து பார்த்தான். அதில் எல்லாப் பானைகளிலும் தயிர் நிரம்பியிருந்தது. கடைசியில் ஒரு பானை மட்டும் காலியாய் இருந்தது. குழந்தைக் கண்ணன் அந்த வெறும் பானைக்குள் எட்டிக் குதித்து, உள்ளே மறைந்து உட்கார்ந்து கொண்டான்.

இதை மறைவில் ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டே இருந்தான் ததிபாண்டன். கண்ணன் பானைக்குள் புகுந்து தன்னை மறைத்துக்கொண்டதும், ததிபாண்டன் ஓடிவந்து உள்ளே எட்டிப்பார்த்து, ""கண்ணா!... ஏன் இப்படி பயந்துபோய் ஓடி வந்து இந்தப் பானைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறாய்? என்ன நடந்தது?'' என்று கேட்டான்.

""ததிபாண்டா! பிறகு சொல்கிறேன். இப்போது என் தாயும், ஒரு கோபிகையும் என்னை அடிக்க ஓடி வருகிறார்கள். தயவு செய்து என்னை அவர்களிடம் காட்டிக்கொடுத்து விடாதே'' என கண்ணன் கெஞ்சினான்.

""என்னை எத்தனை முறை இந்த மாதிரி சிக்க வைத்திருக்கிறாய்? உன்னை சிக்க வைக்க இதுதான் சரியான சந்தர்ப்பம். நான் உன்னைக் காட்டிக் கொடுக்காமல் விட மாட்டேன்'' என்றான் ததி பாண்டன்.

""இதென்னடா... நீ இப்படி வம்பு செய்கிறாய்? நான் சொல்வதைக் கேள். இப்போது நீ என்னைப் காப்பாற்றினால் நான் உனக்கு நல்லது செய்வேன்... தயவு செய்து என்னைக் காட்டிக் கொடுக்காதே'' என்று கேட்டுக்கொண்டான் கண்ணன்

மனம் நெகிழ்ந்துபோன ததிபாண்டன் "'சரி சரி நீ அப்படியே பானைக்குள் இரு..'' என்று கூறியபடியே வெளியே சென்று எட்டிப்பார்த்தான். யசோதையும், கோபிகையும் கண்ணனைத் தேடி அந்த வீட்டுக்குள் வருவதைக் கண்டான். அடுத்த விநாடி பரபரப்புடன் ஓடிவந்தான் ததிபாண்டன்.

""கண்ணா! உன் தாயாரும், அந்தக் கோபிகையும் உன்னைத் தேடி இங்கே வருகிறார்கள். நீ உள்ளே அப்படியே இரு'' என்று கூறியபடியே அந்தப் பானையின் வாய்ப்புறத்தில் ஏறி அமர்ந்துகொண்டான் ததிபாண்டன்.

யசோதை பானையின் அருகே வந்து ததிபாண்டனிடம் கேட்க,

""கண்ணன் இங்கு வரவேயில்லை'' என்று அடித்துச்சொன்னான் அவன்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யசோதையும், கோபிகையும் ததிபாண்டன் சொன்னதை நம்பி அங்கிருந்து அகன்று, கண்ணனைத் தேடிப் போனார்கள்.

அவர்கள் போய் விட்ட பின்பும், ததிபாண்டன் பானை மீதிருந்து இறங்கவில்லை. பானைக்குள் இருந்த கண்ணனுக்கு மூச்சு முட்டியது.

"'டேய் ததிபாண்டா. இன்னும் எத்தனை நாழிகை நான் இப்படி உள்ளே இருந்து அவதிப்படுவது? நீ கீழே இறங்குடா'' என்று கூறி தன்னுடைய குழலால் ஒரு குத்து

குத்தினான்.

ததிபாண்டனோ, ""ஹே கண்ணா! உனக்கு இந்தப் பானையிலிருந்து நான் விமோசனம் தர வேண்டுமானால் எனக்கு நீ மோட்சத்தைக் கொடுப்பாயா?'' என்று கேட்டான்.

"உனக்கு மோட்சமா? பொய் சொன்னவனுக்கா?''

"ஆமாம் இந்த மனிதப் பிறவியிலிருந்து எனக்கு மோட்சம் வேண்டும்''

"சரி உனக்கு மோட்சம் தருகிறேன். தயவு செய்து என்னை இப்போது விடுதலை செய்'' என்று மூச்சுத் திணறியபடி பானைக்குள்ளிருந்து கண்ணன் கேட்டுக்கொண்டான்.

"அதெப்படி என்னை மட்டும் மோட்சத்திற்கு அனுப்புவது நியாயம்? இந்தப் பானை கூட உன்னைக் காப்பாற்றியதல்லவா? இந்தப் பானைக்கும் சேர்த்து மோட்சம் தர வேண்டும்'' ததிபாண்டன் விடாப்பிடியாய் இருந்தான்.

தனக்கிருக்கும் சங்கடத்திற்குள்ளிருந்து மீண்டு வர கண்ணன் அதையும் ஏற்றுக்கொண்டான். "'சரி பானைக்கும் சேர்த்து மோட்சம் தருகிறேன். தயவு செய்து நீ பானையை விட்டுக் கீழே இறங்கு'' என்றான்.

ததிபாண்டன் பானையின் வாய்ப் பகுதியிலிருந்து எழுந்து கீழே குதித்தான். கண்ணன் பானைக்குள்ளிருந்து வெளியே வந்தான். சொன்னதைச் சொன்னபடி செய்ய பகவான் ஒரு புஷ்பக விமானத்தை வரவழைத்து ததி பாண்டனையும், தன்னைக் காப்பாற்றிய பானையையும் அந்த புஷ்பக விமானத்தில் ஏற்றி வைகுண்டத்தை நோக்கி அனுப்பி வைத்தான்.

பொய் எப்போது சொல்ல வேண்டுமோ, அப்போது அவசியம் ஏற்பட்டால் சொல்வதில் தவறில்லை. சாமான்ய தர்மம், விசேஷ தர்மம் என்று உள்ளது. இதில் விசேஷ தர்மத்தைச் செய்ய சாமான்ய தர்மத்தைக் கைவிட்டு விடுவதால் தவறில்லை. பானைக்குள் இருந்த பகவானைக் காப்பாற்ற ததிபாண்டன் பொய் சொன்னான். எனவே அதனால் தவறில்லை. ஆகவே. அவனுக்கும், தன்னைக் காப்பாற்றிய பானைக்கும் மோட்சத்தைக் கொடுத்தான் கண்ணன்.

"யாரெல்லாம் வைகுண்டம் போக ப்ராப்தம் இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் வைகுண்டம் போனால் இந்தப் பானையைப் பார்க்கலாம்' என்று புராணம் சொல்கிறது

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பொய் சொல்லாத தர்மர் உடனடி மோட்சம் போகவில்லை.
கிருஷ்ணர் சொன்னதை கேட்காகததால் நரகலோக காட்சியை
பார்த்துவிட்டுதான் பின் வைகுண்டம் சென்றார்.

ததிபாண்டன் பொய் சொன்னான். எனவே அதனால் தவறில்லை.

ஆகவே. அவனுக்கும், தன்னைக் காப்பாற்றிய பானைக்கும் 

மோட்சத்தைக் கொடுத்தான் கண்ணன்



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator