Sunday 7 September 2014

சுகப்பிரசவம் சுலபமே!

சுகப்பிரசவம் சுலபமே!

பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய நெகிழ்வையும் ஒருசேர உணர இன்றைய காலகட்டத்தில் எத்தனை தாய்களால் முடிகிறது? 

இயற்கையான சுகப்பிரசவம் நிகழ வாய்ப்பு இருக்கும் நிலையிலும்கூட அறுவைச் சிகிச்சை செய்யச் சொல்லும் வற்புறுத்தல்கள் மருத்துவர்கள், கர்ப்பிணிகள் என இரு தரப்பிலுமே மிகுதியாகிவிட்டன. சுகப்பிரசவம் நடப்பதில் பிரச்னை என்று வந்தால் மட்டுமே அறுவைச் சிகிச்சைக்குப் போக வேண்டும் என்கிற புரிதல் அனைத்து தாய்மார்களுக்கும் உருவாக வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் இங்கே விளக்குகிறார்கள்

பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணர்களான சென்னை ஷமீக் அக்தார், ஸ்ரீ கலா பிரசாத், திருச்சி பி. கமலம், பிரசவ கால உடற்பயிற்சி ஆசிரியர் ரேகா சுதர்சன்..
.
1 கருத்தரிப்பதற்கு முன் கலந்தாய்வு...

திருமணமாகி கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன் - மனைவி இருவரும் மருத்துவரிடம் ஒரு கலந்தாய்வுக்குச் செல்வது நல்லது. இந்தக் கலந்தாய்வில் பெண் மற்றும் அவரது கணவரின் குடும்பச் சூழல், குடும்ப வரலாறு ஆகியவற்றை மருத்துவர் தெரிந்துகொள்வதோடு, தம்பதியில் யாருக்கேனும் ஏதேனும் பரம்பரை நோயோ, பெண்ணுக்கு தைராய்டு, சர்க்கரை நோய், இதய நோய், ஹெபடைடிஸ் பி, ரத்த அழுத்தம், வலிப்பு நோய், ஹெச்.ஐ.வி. போன்ற நோய்களோ இருக்கின்றனவா என்பதையும் கண்டறிவார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரசவத்துக்கு ஒரு தம்பதி தயாராக இது உதவும்.

2 உணவை விரும்பு!
கருவுற்ற நாளில் இருந்து தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கலாம். சிலருக்கு உடலில் நீர்ச் சத்து குறைந்து எடை குறையலாம். சுகப்பிரசவத்துக்கு தாயின் உடல்நிலை இன்றியமையாதது. அதேபோல், குழந்தையின் எடை 3 முதல் 3.5 கி.கி. வரை இருந்தால்தான் குழந்தையின் தலை வெளியே வர ஏதுவாக இருக்கும். இதனால், உணவு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம்.

3 எதைச் சாப்பிடலாம்?
முதல் மூன்று மாதங்களில் மசக்கை காரணமாக உணவை மனம் வெறுக்கும். இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். திட உணவு எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் பழச்சாறு போன்ற திரவ உணவுகளையேனும் எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சமயங்களில் பெண்கள் உணவை வெறுத்தால், அதுவே ஊட்டச் சத்துக் குறைவை உருவாக்கி ரத்த சோகைக்கு வழிவகுத்து, குழந்தையின் ஆரோக்கியத்தையும் தாயின் உடல் - மன வலிமையையும் குறைத்துவிடும். ஆகவே, தொடக்கத்தில் இருந்தே நல்ல ஊட்டச் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம். நீர்ச் சத்துக்கு இளநீர், வாந்தியை எதிர்கொள்ள மாதுளை, இரும்புச் சத்துக்குப் பேரீச்சை ஆகியவை இந்த நாட்களில் பேருதவி செய்யும். 4-வது மாதத்தில் இருந்து இரும்புச் சத்து மிக்க கீரை, காய்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைந்தால் ஹீமோகுளோபினின் அளவும் குறையும். இந்த ஹீமோகுளோபின்தான் உடலின் பிற பாகங்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்ல உதவுகிறது. இதன் அளவு குறையும்போது குழந்தைக்கும் தேவையான பிராண வாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படும். இதனால் போதிய இரும்புச் சத்து உள்ள உணவுகளையோ, மாத்திரைகளையோ எடுத்துக்கொள்வது தேவையாகிறது. நார்ச் சத்துக்கள் நிரம்பியுள்ள காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், மலச்சிக்கல் பிரச்னையை முறியடிக்க முடியும். கீரை, ஓட்ஸ், புதினா, உலர் திராட்சை, கொத்தமல்லி, பேரீச்சை போன்ற உணவுப் பொருட்களில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. கொண்டைக்கடலை, ராஜ்மா, பயறு வகைகளில் கால்சியம், புரதச் சத்து அதிகம் இருக்கிறது. உருளை, கேரட், வேர்க்கடலை, பாதாம் பருப்பு வகைகளில் புரதம் இருக்கிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நூக்கோல் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது. அன்றாட உணவில் இவற்றைச் சமச்சீரான விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தது தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடித்தால், தாய்க்கு நல்லது. குறிப்பாக பனிக்குடத்துக்கு நல்லது!

4 குனி, வளை, நிமிர்!
சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக்கொள்ளும். பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவது நல்லது. அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்ஃபின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இதனால், உடல் தசைகள் வலுப்பெற்று, குழந்தை சரியான நிலையில் இருக்கும். பெண்களின் பிறப்புறுப்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். பிரசவமும் சுலபமாகும். தினமும் காலையில், முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம்
.
5 சபாஷ் சரியான எடை!
கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால், சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம். இவை இரண்டுமே இல்லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக்கிறது என அர்த்தம். இதனால், கர்ப்பிணிகளின் கால் வீங்கிக் காணப்படும். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த வீக்கம் கணுக்காலுக்குக் கீழே மட்டும் இருக்கும். அதுவும் நன்றாகத் தூங்கி எழுந்ததும் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் கணுக்காலைத் தாண்டியும் வீக்கம் இருந்தால் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உப்பின் அளவைக் கண்டறிந்து, அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இத்துடன் ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் பேறுகாலத்தின்போது வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்த வேண்டியது அவசியம்
.
6 படுக்கையும் உறக்கமும்!
கர்ப்பிணிகள் முதல் நான்கு மாதங்கள் மல்லாந்த நிலையில் படுக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் சாலச்சிறந்தது. இரவில் எட்டு மணி நேரத் தூக்கமும், பகலில் ஒரு மணி நேரத் தூக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியம். முதல் மூன்று மாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத்தைத் தவிர்ப்பது நலம்
.
7 ஒரே மருத்துவர்!
பொதுவாக முதல் 28 வாரங்களுக்கு மாதம் ஒரு முறையும் அதற்குப் பிறகு 28 முதல் 36 வாரங்கள் வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும் 36-வது வாரம் முதல் பிரசவம் வரை வாரம் ஒரு முறையும் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே ஒரே மருத்துவரை அணுகுவது நல்லது. நம் உடல்நிலையைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சையை அளிக்க மருத்துவருக்கு எளிதாக இருக்கும்
.
8 தவறாத மருந்துகள்!
தாய், சேய் இருவருக்கும் டெட்டனஸ் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க நான்கு வார இடைவெளியில் இரண்டு தடவையாக ரண ஜன்னி ஊசி போடவேண்டும். ஃபோலிக் அமில மாத்திரைகளை திருமணமான முதலே பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், இது கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு ஏற்படக் கூடிய சில பிறவிக் குறைபாடுகளைத் தடுக்கும். ரத்தசோகை பாதிப்பு உடையவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை அல்லது ஊசி தேவைப்படலாம். தவிர, அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப தேவைப்படும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது முக்கியம்

9 கூடாது... கூடாது... கூடவே கூடாது!
வயிறு பெரிதாக பெரிதாக அதிக எடையைத் தூக்குவது, ஓடுவது, குடத்தை இடுப்பில் வைப்பது, நாற்காலியின் மீது ஏறுவது போன்ற கடுமையான செயல்களில் ஈடுபடவே கூடாது. தரையில் கால்களை நன்றாக ஊன்றி நடக்க வேண்டும். கால்களைத் தொங்கப் போட்டபடி உட்காரக் கூடாது. அடிக்கடி கால்களை நீட்டி, மடக்க வேண்டும். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காரக் கூடாது. ஒரே மாதிரியான வேலைகளைத் தவிர்க்க வேண்டும். உடல் முழுவதுக்கும் அசைவு கொடுக்கக் கூடிய பல்வேறு வேலைகளில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் தசைப்பிடிப்பு, கால்கள் மரத்துப்போதல் போன்றவை ஏற்படாமல் இருக்கும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இப்போதைய பெண்கள் பிரசவத்தின்போது காலை மடக்கவே மிகவும் கஷ்டப்படுகின்றனர். இந்திய டாய்லெட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கால்களை எளிதாக நீட்டி, மடக்க முடியும். நொறுக்குத் தீனிகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நலம். இது மனச் சங்கடங்களைத் தவிர்க்க உதவும்.

10 அகமே சுகம்!
தாயின் உடல்நலன் எவ்வளவு முக்கியமோ மனநலனும் அவ்வளவு முக்கியம் சுகப்பிரசவத்துக்கு. இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்துக்கு மிகப் பெரிய எதிரி பெண்களுக்குப் பிரசவ வலி மீது உருவாகி இருக்கும் பயம். இந்தப் பயத்தை எதிர்கொள்வதற்கு தாயும் தன்னளவில் தயாராக வேண்டும்; குடும்ப உறுப்பினர்களும் தாயைத் தயாராக்க வேண்டும். 'இது ஒரு பிரச்னையே இல்லை; உனக்கு எதுவென்றாலும் உதவ நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்' என்று ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்கு நம்பிக்கை அளிக்க குடும்பத்தினர் தவறக் கூடாது. தாயின் மனநிலையை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். தாயும் நல்ல உணவைப் போலவே நல்ல இசை, நல்ல புத்தகங்கள் என மனதை இதமாக வைத்துக்கொள்ளும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல் நலம். தியானம் மனதை ஒருமுகப்படுத்த உதவுவதோடு தேவையில்லாத பயம் - கவலைகளை நீக்கி பிரசவத்தைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும்

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator