Friday 5 September 2014

சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்

சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்

(நெட்டில் சுட்ட ஒரு கதை-ஓணம் ஸ்பெஷல்)

வழக்கம்போல எல்லோரும் போன பின்பு வாசலையே பார்த்துக்கொண்டிருந்த சட்டநாத அய்யர் அலுவலகத்தை மூடிவிட்டு ஆர அமர வீட்டுக்குப் போய்ப் படுக்கலாம் என்று கண்ணாடிக் கதவை மூடி, கை வைத்தார் ஷட்டரில். இழுத்த பின்பும் இறங்காத ஷட்டர் 'ஓய் அய்யரே, திருமணப் பொருத்தம் என்பது ஜாதக கட்டங்களில் இருக்கிறதா அல்லது பெண் பிள்ளைகள் வளர்க்கப்படும் சட்ட திட்டங்களில் இருக்கிறதா' என்று ஆராய்ந்து பதில் சொல்லிவிட்டு மூடிப் பூட்டும் என்று சிரித்தது.

மார்க்கபந்துவிற்குக் கல்யாணங்களுக்குப் போய் மூன்று வேளையும் சாப்பிடுவது பிடித்த விஷயமல்ல. எந்தக் கல்யாணத்திற்குப் போனாலும் ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பது அவரது சுபாவம். பொதுவாகக் தற்போதைய பிராமணர்கள் வீட்டுக் கல்யாணங்களில் பிராமணச் சமையல் வகைகள் இருப்பதில்லை என முணுமுணுப்பது அவர் வழக்கம். கேரளப் பிராமணக் கல்யாணம் என்றால் கேரளச் சமையலும் திருநெல்வேலி அளிணியராத்துக் கல்யாணங்களில் திருநெல்வேலி ருசியும் பாலக்காட்டுக் கல்யாணங்களில் பால் பாயசமும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று எல்லோரிடமும் சத்தம்போட்டுச் சொல்லிக் கொண்டிருப்பார்.

அந்தக் கல்யாணத்திற்கும் அப்படி நினைத்துக்கொண்டுதான் போனார் மார்க்கபந்து. ஆனால், அந்தக் கல்யாணத்தைப் பற்றியே எல்லோரிடமும் எப்பொழுதும் பேசும்படியான அசத்தல் சமையல் கல்யாணத்தில் இருந்தது. சமையல் மட்டும் அசத்தல் இல்லை என்று ஆன கதையை அப்புறம் பார்ப்போம். பையனூரில் பையை வைத்த உடனேயே தெரிந்தது அந்தக் கல்யாணத்தின் தனிச் சிறப்புகள். கண்ணூரில் இரயில் இறங்கி வேன் வைத்துக்கொண்டு போன பிள்ளையாத்துக் காரர்களில் கேரளச் சமையலைச் சிலாகித்துச் சாப்பிடும் ஒரே ஆளாக மார்க்கபந்து இருந்தது ஆச்சரியமான விஷயமாய்த் தொடங்கி அதிர்ச்சியான விஷயமாய் முடிந்தது.

கேரளாவில் பிராமணக் கல்யாணங்கள் பெரும்பாலும் பிராமணச் சமூகக் கூடங்களிலேயே நடைபெறும். எல்லா ஊர்களிலும் பெரிய கல்யாண மண்டபங்கள் இல்லாத காரணம் மட்டுமன்றி அதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. அந்த மாதிரிச் சமூகக் கூடங்களை ஒட்டி அமைந்திருக்கும் பிராமணக் குடியிருப்புகள் இம்மாதிரியான கல்யாணங்களுக்குப் பெரிய உதவியாய் விளங்கும். சமையல்காரர் தவிர, பரிமாறுவது உட்பட எல்லா உபவேலைகளும் அங்குள்ள பிராமண இளைஞர்கள் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதும் எல்லாவற்றையும் முன்நின்று மேற்பார்வையிடுவதும் சாதாரணக் கல்யாணங்களும் ஜாம் ஜாம்மென்று நடந்தேறுவதற்கு உதவுகின்றன.

மார்க்கபந்துவின் ஷட்டகர் சித்தப்பா பையனின் கல்யாணம் அது. பையன் சென்னையிலே பிறந்து வளர்ந்த செல்லக்குட்டி. அடித்துப் பிடித்து எதையோ படித்து மிஜி கம்பெனியில் நுழைந்துவிட்டான் அம்பி. 20, 25 ஆயிரம் ரூபாய்ச் சம்பளம். முகப்பேர் பக்கத்தில் வீடு. அப்பா, அம்மா, ஒரு தம்பி என்று ஒரு அளவான குடும்பம். 30ஐத் தாண்டி 3 வயது ஆகியும் பெண் தேடும் படலத்தில் பெரிய அவசரம் ஏதும் காட்டாமல் வந்த ஜாதகங்களை எல்லாம் வடிகட்டிக் கொண்டிருந்தார்கள் பையனும் அப்பாவும். ஒன்று குட்டை என்றால் இன்னொன்று உயரம். குண்டு வேண்டாம், ஒல்லி மிகவும் அதிகம் என்று வந்த நல்ல பெண்ணை எல்லாம் உந்தித் தள்ளி உதாசீனப்படுத்திவிட்டு ஒரு வழியாகப் பிடித்தார்கள் இந்தப் பையனூர் பைங்கிளியை.

பெண்ணுக்கு அழகு முன்ன பின்ன இருந்தாலும் உத்தியோகம் இருந்தது உசத்தியாய். பையனைவிட 10,000 ரூபாய் கூடுதல் சம்பளம் பெண்ணுக்கு. பையனூரில் நிலம், நீச்சு என்று பெரிதாக இல்லாவிட்டாலும் அப்பா, அம்மா இரண்டு பேரும் பென்ஷன் வாங்கும் அரசு உத்யோகஸ்தர்கள். கல்யாணம் நிச்சயம் ஆன உடனேயே மார்க்கபந்து கட்டாயம் வர வேண்டும் என்று அழைக்கப்பட்டதால் பிரத்யேகமாக வந்திருந்த அவருக்குக் கல்யாணச் சமையல் மிகவும் பிடித்திருந்தது.

ஜானவாஸ சமையல் சாப்பிட்ட சந்தோஷம் பையனாத்துக் கோஷ்டிக்குக் கொஞ்சமும் இல்லாததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. மாப்பிள்ளை அழைப்பு அன்றே நடத்தி அடுத்த நாள் மத்தியானத்திற்குள் கல்யாணச் சத்திரத்தைக் காலி செய்யும் சென்னைக் கல்யாணங்களில் பரிமாறப்படும் முதல் நாள் ரிசப்ஷன் விருந்தை எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். அய்யர் சமையல் கொஞ்சம், அடுத்தவர் சமையல் கொஞ்சம், South Indian, North Indian, East Indian, West Indian என்று எல்லா இந்தியச் சமையல்களின் கலவையாக விளங்கும் தமிழ்நாட்டுச் சமையலுக்குச் சம்பந்தமில்லாமல் இருந்தது அந்தச் சாப்பாடு.

இலையில் போடப்பட்ட எல்லாப் பதார்த்தங்களிலும் சாம்பார், ரசம் மற்றும் ஊறுகாயைத் தவிர, கண்டிராத, கேட்டிராத ஏதேதோ பரிமாறப்பட்டது எப்படியோ இருந்தது. ஓலன், காளன், புளிச்சேரி, எரிசேரி, சக்கபிரதமன், அடபிரதமன் என்னும் பெயர்கள் எல்லாம் உருவம் எடுத்து உயிர்பெற்று முதன்முதலாக முன்நின்றது கண்டு மூச்சு முட்டியது எல்லோர்க்கும். அரிசிக்கு அடுத்தபடியாகச் சமையலின் ஆதாரமாக விளங்கும் இளவனும், மத்தனும் (பூசணிக்காய், பரங்கிக்காய்) எல்லா ரூபங்களிலும் இவர்களைப் பார்த்துச் சிரித்தna. பூரி சன்னா, உருளைக்கிழங்கு காரக் கறி, பிரிஞ்சிக் குருமா, குலாப்ஜாமூன், White Rice, ரசம், தயிர்ச்சாதம் என்று வருடக்கணக்கில் எல்லாக் கல்யாணங்களிலும் சாப்பிட்டுவந்த இவர்களுக்கு இந்த உணவு வடிவங்கள் தொண்டையில் இறங்காமல் சண்டை போட்டன. அதிர்ச்சி தரும் அடுத்த செய்தியாக எல்லா வேளையும் இதே மெனுதான் என்ற தகவல் வந்து சேர்ந்தது. ஒரு வேளையாவது உருப்படியாக மெட்ராஸ் சமையல் போடக்கூடாதா என்று கேட்டதற்கு அதெல்லாம் "சமூகத்தில்" யாரும் சம்மதிக்கமாட்டார்கள் என்ற அசத்தலான பதில் கிடைத்தது.

எல்லோருக்கும் எப்படியோ மார்க்கபந்து நன்றாக ரசித்து மகிழ்ச்சியுடன் சாப்பிட்டார். சமையல் மட்டுமின்றிச் சமையல்காரர்களும் பாத்திரங்களும் பரிமாறுபவர்களும் காலச் சக்கரத்தை 50 வருடங்கள் பின்னே தள்ளியது போன்று இருந்தது. ஒரு பெரிய சமையல் அறையின் பாதியை அடைத்துக்கொள்ளும் அளவிற்கு 12 அடி விட்டமுள்ள எட்டுக் கைப்பிடியுடன் கூடிய மகா வெங்கல உருளியில் 100 லிட்டர் பால் கொதிக்கும் அற்புதக் காட்சி அவர் மனத்தில் எப்போதும் நிற்கும். விறகில் சமையல் செய்யும் அந்தக் காட்சி மட்டுமின்றி அந்தச் சமூகக் கூடம் முழுவதும் நிறைந்திருந்த சாப்பிடுபவர்கள், பரிமாறுபவர்கள், எடுபிடிகள் எல்லோருமே பிராமணர்களாக மட்டுமே இருந்த அந்த அருட்காட்சியும் தமிழ்நாடு முழுவதும் ஒரு இடத்திலும் காணக் கிடைக்காத ஒப்பற்ற நிகழ்ச்சியாக விளங்கியது. சாப்பிடுபவர்கள் சாப்பாட்டின் கடைசிக் கவளத்தைக் கையில் எடுப்பதற்கு முன்பேயே அவர் முன்னேயும் பின்னேயும் தனி வரிசை நிற்கும்.

சாப்பிட்டவர் எழுந்தவுடன் எச்சில் இலையை எடுப்பதற்கு முன்பே இடம் பிடித்து உட்கார்ந்து அவசரமாக அள்ளி வீசப்படும் அன்ன பின்னங்களை அகதிகள்போல் சாப்பிடும் தமிழ்நாட்டுக் கல்யாணக் காட்சிகள் கண்முன் நின்றது. தச்சு வேலை, அச்சு வேலை கிடைக்காமல் ஒன்றும் தெரியாத சமரசச் சன்மார்க்கிகளால் பரிமாறப்பட்டு சாப்பிடும் சமபந்தி போஜனம்போல் அல்லாது இருந்தது பையனூர் கல்யாணப் பந்திக் காட்சிகள்.

மின்னல் வேகத்தில் உணவு பரிமாறப்பட்டாலும் யாருக்கு என்ன வேண்டும் என்பதைக் கண்பார்வையில் அறிந்து உடனே எடுத்து வரும் சர்வர்கள் சாதாரணவர்கள் அல்ல. வங்கியிலும் அரசு அலுவலகங்களிலும் நல்ல வேலை பார்க்கும் அந்தப் பூணூல் திருமேனிகள் பகுதி நேர பிராமணச் சேவையாகப் பங்கெடுத்துப் பரிமாறும் பந்தி அழகு மார்க்கப்பந்துவைப் பரவசப்படுத்தியது. முகூர்த்தப் பந்திக்கு 5 விதப் பாயாசங்கள் விளம்பி விளம்பி, முடிப்பதற்கு ஒருமணி நேரம் ஆகியது.

தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரே சலுகையாக விளங்கிய பச்சரிசி சாதமும் அங்குள்ள பட்டர்மார்களுக்குப் புழுங்கல் அரிசி சாதமும் எந்தவிதக் குழப்பமின்றி மாறி மாறி இலையில் விழும் வேகமும் இஞ்சிபுளித் தொடங்கி எரிசேரி வரை எல்லா வகைகளும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்படும் அழகும் தமிழ்நாட்டுப் பிராமணக் கல்யாணங்கள் தடம் இழந்து, தறிகெட்டு வெறும் தண்டங்களாய் மாறிச் சாப்பிடுபவர்க்குத் தரப்படும் தண்டனையாக ஆகிவருவதை எடுத்துக் காட்டியது.

கடைசிப் பந்தி முடிந்து எல்லோரும் கலையும் பொழுது மணி நான்கு ஆகியது. திருப்தியடைந்த ஒரே மாப்பிள்ளை வீட்டுக்காரரான மார்க்கப்பந்து திடுக்கிடும் சிறு நிகழ்ச்சி ஒன்று சடக்கென்று அவர் முன்னே சங்கமம் ஆகியது. விடைபெற்றுக் கொண்டு தாம் தங்கியிருந்த வீட்டுக்குச் செல்லும் முன்பு கல்யாணப் பெண் வனஜாவைக் கலாட்டா செய்வதாக நினைத்துக் கொண்டு அடித்த ஜோக்கிற்குக் கிடைத்த பதிலே இந்தக் கதையின் முடிவாக விளங்கும் என்று அப்போது தெரியவில்லை.

மாப்பிள்ளை தர்மராஜன் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த வனஜாவிடம் "மூன்று வேளையும் நீங்கள் போட்டுத் திணற அடித்த மலையாளச் சாப்பாட்டிற்குப் பதிலடியாய் நீ அங்கு வந்து சாப்பிடும் பிரிஞ்சி குருமாவும், பூரி சென்னாவும் இருக்கும்" என்று சிரித்துக் கொண்டே சொன்னதற்கு மார்க்கப்பந்து எந்தப் பதிலையும் எதிர்பார்க்கவில்லை. "எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை, எல்லாம் எனக்குத் தெரியும், என் இஷ்டப்படி இருக்க வைக்கவும் முடியும்" என்று மாப்பிள்ளையின் கண்களை நேரே பார்த்துச் சொன்ன வார்த்தைகளில் மார்க்கபந்து பயந்தாரோ இல்லையோ மாப்பிள்ளையின் முகம் வெளிறியது. மார்க்கப்பந்துவிற்கு முதலிலும் மறு வருடத்திற்குள் எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமாய் விளங்கியது.

புகைந்து புகைந்து உள்ளே புதைந்துகிடந்த தீச்சுவாலை வெளியில் வந்து கொழுந்துவிட்டு எரியும்பொழுது எதுவும் மிஞ்சவில்லை எவருக்கும். 'மாட்டுப்பெண் ஒரு மாதிரி எங்களை மதிக்கவில்லை' என்று தர்மராஜனின் பெற்றோர்கள் தொடங்கிய ஆலாபனை, பல்லவி அனுபல்லவி சரணம் என்று வெகுசீக்கிரம் முடிந்து, தம்பதிகளின் மகிழ்ச்சி தனி ஆவர்த்தணமாய் முடிந்தது ஏன் என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியவில்லை.

வந்த இரண்டு மாதத்தில் 'இந்தா என் ஐதராபாத் மாற்று உத்தரவு' என்று காண்பித்து ஜாகையை மாற்றினாள் வனஜா. தனிக் குடித்தனம் செய்வதற்குப் பதில் தனித்தனியாகக் குடித்தனம் செய்துகொண்டு தள்ளிய நாட்கள் பிரச்சினையைச் சிக்கலாக்கியது. என்னோடு வந்து இணைந்து குடித்தனம் நடத்த வேண்டும் என்றால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இங்கு வந்துவிடு என்று சொன்ன வனஜாவின் வாய்வாக்கினை வேதவாக்காக வரித்துக்கொண்டு ஐதராபாத் சென்றடைந்த தர்மராஜனின் countdown ஆரம்பமாகியது.

நான் சமைக்க வேண்டும் என்றால் காபி போடும் வேலை உன்னுடையது. நீ சீக்கிரம் ஆபிசிலிருந்து வந்தால் இரவுச் சமையலை நீதான் செய்ய வேண்டும் என்ற ரீதியில் தொடங்கிய வேலைப் பங்கீட்டுத் திட்டம் காலை வாரி, அவன் கதையை முடித்தது வெகு விரைவில் நடந்தேறியது. என்ன வேண்டுமானாலும் செய்கிறேன். என் தாய், தந்தையாரை எப்போதோ ஒரு முறை பார்த்தாலும் போதும் என்றெல்லாம் மன்றாடி மண்டியிட்டும் மசியாத வனஜா ஒரு நாள் 'மகனே, போதும், இடத்தைக் காலி செய்' என்று இறுதி எச்சரிக்கை கொடுத்தது ஏன் என்று இதுவரை மார்க்கப்பந்துவிற்கு விளங்கவில்லை. அதுவோ இதுவோ என்று ஆளாளுக்குப் பல காரணங்கள் சொல்லி அறிவுரை செய்தாலும் பொதுவான ஒரு உண்மை மார்க்கபந்துவிற்கு மெதுவாகப் புரிந்தது.

பெண்கள் வளர்க்கப்படும் இடம், சூழ்நிலை மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகள் திருமண விஷயங்களில் பெரும் பங்கினை வகிக்கின்றன. பையன் மேல் குற்றமா, பெண்மேல் குற்றமா என்று இதுவரை நடந்துவரும் பட்டிமன்றத்தில் தீர்ப்புச் சொல்ல முடியாமல் மார்க்கபந்துவால் மனக்கலக்கம் அடைய மட்டுமே முடிந்தது.

'ஒண்ணே உள்ளங்கில் உலக்கையால் அடிக்கனும்' என்ற மலையாளப் பழமொழியின் உதாரணம் போல் கோலாகலமாய் நடந்த இந்தத் திருமணம் கோளாறில் முடிந்தது ஏன்? விவாகரத்து ஆகி வீண்பழி ஏற்ற தர்மராஜனின் தர்மசங்கடத்தைப் போக்கும் விதமாக நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு என்னை இழுத்துப் பூட்டும் சட்டநாத அய்யரே என்று சத்தமாகச் சிரித்தது ஷட்டர்.

1. பார்ப்பதற்கு நன்றாகவும் ஓரளவு நல்ல வேலையும் பார்த்த தர்மராஜனை வனஜாவுக்கு ஏன் பிடிக்காமல் போனது? 

2. பெற்றோர்கள் இருவரும் வேலை பார்ப்பதும் தர்மராஜனுக்கு இணையாகத் தானும் வேலை பார்ப்பதும் நல்ல சொத்து, பத்து உள்ள உறவினர்களுக்கு ஒரே வாரிசாக விளங்கியதும் வனஜாவின் இந்த ஏகாதிபத்திய ஆணவப் போக்கின் அடிப்படையாக அமைந்ததா? 

3. வெளியில் சொல்ல முடியாத வில்லங்கம் ஏதாவது இருந்தது தர்மராஜன் விரட்டப்பட்டதின் உண்மைக் காரணமா? வழக்கம்போல் வாசகர்கள் தங்கள் பதிலை விரைவில் எழுதி அனுப்பிச் சட்டநாத அய்யரின் சங்கடத்தைப் போக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நீதி சாஸ்திரம்

பால ஸகித்வம் அகாரணஹாஸ்யம் ஸ்த்ரீஷீ விவாதம் அஸஜ்ஜனஸேவா! 
கர்த்தப யாநம் அஸம்ஸ்க்ருதவாணீ ஷட்ஸீநரோ லகுதாமுபயாதி!!

சிறுவனோடு நட்பும், காரணமின்றி நகைத்தலும், பெண்களோடு எதிர்ப்பும், துஷ்ட சேர்க்கையும், கழுதைச் சவாரியும், சமஸ்கிருதம் அறியாமையும் ஆகிய இந்த ஆறு செயல்களும் மனிதனுக்கு இழிவை உண்டுபண்ணும்.

ஸமுத்தமதநே லேபே ஹரி: லக்ஷ்மீம் ஹரோவிஷம் 
பாக்யம் பலதி ஸர்வத்ர ந வித்யர நச பௌருஷம்

கடலைக் கடைந்துபோது திருமால் திருமகளை அடைந்தார். சிவன் விஷத்தைப் பெற்றார். ஆகையால் அவரவர்கள் அதிருஷ்டத்திற்குத் தக்கவாறு பயன் கிட்டுமேயன்றி, கல்வியும் திறமையும் காரணமாகாது

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator