Wednesday 5 December 2012

பெரியவா சொன்ன நிஜக்கதை...


http://www.facebook.com/pages/Khariharan/115524648579725



power by BLOGSPOT-PING


பெரியவா சொன்ன நிஜக்கதை.....
=========================
ஒரு ஊர்ல ஒரு பொம்மனாட்டிக்கு நல்ல பாம்பு ஒண்ணு குழந்தையாப் பொறந்தது! மொதல்ல எல்லாரும் ரொம்ப பயந்தா....அப்புறம், அதை குடும்பத்ல ஒரு கொழந்தையாட்டமா நெனச்சு, "நாகராஜன்"ன்னு பேர் வெச்சு ரொம்ப ஆசையா வளர்த்தா. அதுவும் ஒரு கொழந்தை மாதிரி ஆத்ல வளைய வந்துது...."நாகராஜா!.."ன் ;னு கூப்ட்டா, திரும்பிப் பாப்பான்..... "வா"ன்னு கூப்ட்டா வருவான். மடியில படுத்துப்பான்.
அவனுக்கு பால் குடிக்கறதுக்காக கூடத்துல ஒரு சின்ன பள்ளம் பண்ணி வெச்சிரு

ந்தா! அதுல பாலை நன்னா ஆற வெச்சு அந்த குழிக்குள்ள விட்டுட்டா....நாகராஜன் வந்து குடிப்பான். டெய்லி காலம்பற பத்தரை மணிக்கு அவனுக்கு பால் விடறது பழக்கம். இப்டீ இருக்கறச்சே, ஒருநாள் அவனோட அம்மாவுக்கு பக்கத்து கிராமத்துக்கு ஒரு கல்யாணத்துக்கு போக வேண்டியிருந்துது. அவளுக்கு தன்னோட பாம்புக் கொழந்தையையும் கையோட அழைச்சிண்டு போகணும்னு ரொம்ப ஆசை. ஆனா, எல்லாரும் ஒண்ணு.... கேலி பண்ணுவா ரெண்டாவது, பயப்படுவா..ன்னு தோணினதால, ஆத்துல ஒரு குருட்டுப் பாட்டிகிட்ட நாகராஜனைப் பாத்துக்கச் சொல்லிட்டு, எல்லாருமா கல்யாணத்துக்குப் போயிட்டா....
அந்த பாட்டியோ கண் செரியாத் தெரியாததால, வேலையெல்லாம் மெள்ளமா முடிச்சுட்டு, இவனுக்கு பால் காய்ச்சி எடுத்துண்டு வரப்போ, மணி ஒண்ணாயிடுத்து! பாவம், கொழந்தை பட்டினியால வாடினான். வழக்கமா பத்தரைக்கு பால் ரெடியா இருக்கும்னு வந்து குழில தேடினா, குழி காலி! பசியோட அந்த குழிக்குள்ளேயே சுருண்டு படுத்துண்டுட்டான். ஒருமணிக்கு இந்த பாட்டி பாலைக் காய்ச்சி கொதிக்க கொதிக்க கொண்டு வந்து குழியில விட்டா......அவ்ளவ்தான்! கொழந்தை வெந்து செத்து போய்ட்டான்! பாலுக்காக காத்துண்டு இருந்தவனுக்கு அந்த பாலே எமனா முடிஞ்சுது!
அன்னிக்கு ராத்ரி, கல்யாண வீட்ல தூங்கிண்டிருந்த அம்மாக்காரியோட சொப்பனத்துல அவளோட அருமைப்பிள்ளை வந்து, "அம்மா! பாட்டி கொதிக்கற பாலை எம்மேல ஊத்திட்டா....நான் செத்துப் போயிட்டேன்! என்னை தாழம்பூக் காட்டுல பொதைச்சுடு! நான் தெய்வமா இருந்து ஒங்களையெல்லாம் காப்பாத்துவேன்.." ன்னு சொன்னதும், அம்மாக்காரிக்கு குலையே நடுங்கிடுத்து! பெத்த வயிறு பத்தி எரிஞ்சுது! ஒடனே ராத்ரின்னு பாக்காம, தன்னோட ஆத்துக்கு வந்து, கருகி
வெந்து போயிருந்த தன் பிள்ளையை பாத்து கதறினா...."ஐயோ! பாட்டி ! என்ன கார்யம் பண்ணிட்டே? கொழந்தையை பாத்துக்கச் சொன்னா.....இப்டி பரலோகத்துக்கே அனுப்பிச்சுட்டியே! .."ன்னு அலறினா. பாட்டியும் பாவம் தன்னால கொழந்தை போய்டுத்தே..ன்னு குமுறி குமுறி அழுதா.....அருமையா பொறந்து, வளர்ந்த கொழந்தையை பக்கத்து தாழம்பூ காட்டுல பொதைச்சா!
அதுலேர்ந்து அந்த குடும்பத்தை சேந்தவா யாரும் தாழம்பூவே வெச்சுக்க மாட்டா...நான் சின்ன வயஸா இருக்கறச்சே, இந்த பாம்புக்குழந்தை பொறந்த குடும்பத்தை எனக்கு தெரியுங்கறதால, "ஏன் அவாள்ளாம் தாழம்பூ வெச்சுக்கறதில்லே?"ன்னு ஆத்துல அம்மாகிட்ட கேட்டப்போ, இந்தக்கதையை சொன்னா..." என்று முடித்தார்.
இன்றும் அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் பர்வதமலையை அடுத்த கடலாடி கிராமத்தில் இருக்கிறார்கள். அக்குடும்பத்தில் மூத்த பிள்ளைக்கு நாகேஸ்வரன் என்று பெயர் வைப்பது வழக்கமானது! அக்குடும்பத்தில் வந்த நாகேஸ்வர ஐயர் சில தாமிரபட்டயங்களைக் காட்டினார். அது அவருடைய முன்னோர்களுக்கு அச்சுததேவராயர் வழங்கிய ஸாஸனம். மன்னர் அவர்களுக்கு ஐந்து கிராமங்களை தானம் செய்திருக்கிறார். ஆனால் ராஜப்ரதிக்ரஹ தோஷத்திற்காக அவர்கள் அதிலிருந்து 108 பிராம்மணர்களுக்கு தானம் பண்ணியிருக்கிறார்கள்.அந்த ஸாஸனத்தில் நாகராஜன், நாகேஸ்வரன் என்ற பெயர்கள் நிறைய காணப்படுகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக,கடலாடியில் உள்ள அக்குடும்பத்தின் தலைவர் திரு நாகேஸ்வர ஐயர் நம் பெரியவாளுடைய பூர்வாச்ரம மூத்த சஹோதரர் திரு கணபதி சாஸ்த்ரிகளின் மாப்பிள்ளை! அவர் மனைவி திருமதி த்ருபுரசுந்தரி சொன்னார்..."காமகோடி பெரியவா 1907 ல பட்டத்துக்கு வந்தப்போதான் நான் பொறந்தேன்...அதான், என்னோட தாத்தா [பெரியவாளுடைய அப்பா] எனக்கு த்ருபுரசுந்தரின்னனு பேர் வெச்சா..."
---------------------------------------------------------------------------------------------------
ரொம்ப ஆச்சர்யமான விஷயம்! சர்வபூத தயை என்பதை இதைப்படித்த பின்னாவது புரிந்துகொள்ள முயலுவோம். "தெய்வம் மனுஷ்ய ரூபேண" என்று சொல்லுவதை, நாம் நமக்கு யாராவது சஹாயம் பண்ணினால் இப்படி சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்ளுவோம். உண்மையில், இந்த சம்பவத்தில் பாம்புக்குட்டி ஒரு மனித வயிற்றில் பிறந்ததால், அது இறந்த விதத்தை படிக்கும்போது மனஸ் பாடுபடுகிறது. அதுவே சாதாரண பாம்பாக இருந்தால், கண்டதுமே அதை த்வம்சம் பண்ணிவிட்டுத்தான் மறு வேலை பார்ப்போம்! மனிதனும் தெய்வமாகலாம் என்பதன் சரியான அர்த்தம்....எல்லா உயிர்களிடமும் தன் உயிர் போல அன்பு காட்டுவதே!
பெரியவா அப்படி நமக்கு வாழ்ந்து காட்டியிருக்கிறார்.







No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator