Wednesday 3 September 2014

உயிர் கலந்த அன்பு

எதனிடம் ஈடுபாடு வைக்கிறோமோ அது உயிருள்ள ஒன்று. அதிலே நம் சிற்றுயிர் ஈடுபாடு என்ற பெயரில் உறவு கொண்டாடுகிறது. அப்புறம் உறவும் போய், தானும் போய், அதுவேயாகிவிட வேண்டும் என்று இருப்பதே அன்பு. உயிர்! அது முக்கியம்! ப்ராண ஸ்நேஹிதன், உயிர்த் தோழன் என்கிறோமே, அப்படி உயிரோடு உயிர் சேர்வது அன்பு.

செஸ்ஸுக்கு, கிரிக்கெட்டுக்கு உயிர் இருப்பதாகத் தெரிகிறதா? சங்கீதம், நாட்டியம், காவியம் ஆகியவற்றை உயிருள்ள தேவதையாக வைத்துத் தங்களையே அதற்குக் கொடுத்து ஈடுபாட்டுடன் அப்யாஸம் பண்ணுபவர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் அவற்றில் ரொம்பவும் உயர்ந்த கட்டத்தைத் தொடும்போது, மெய் மறந்து பண்ணினார்கள் என்கிறோம். என்ன அர்த்தம்? அப்போதைக்குத் தன்னையே அந்தக் கலைக்கு இவர்கள் கொடுத்து விடுகிறார்கள்.

அதைத்தான் மெய் மறந்து என்கிறோம். அந்தக் கலைக்கு உயிர் இருப்பதால் அதுவே இவர்களுக்குள்ளே புகுந்து இவர்களை அதில் உசந்த ஒன்றைப் பண்ணும்படிச் செய்கிறது.

சயன்ஸில்கூட இப்படி மெய் மறந்த நிலையில்தான், இன்ட்யூஷனில், ஐன்ஸ்டைன் போன்றவர்கள் டிஸ்கவரி பண்ணுகிறார்களென்றால், அதெப்படி? கலைகளை அப்யாசிக்கிறவர்களைப் போல அவர்கள் ஒன்றும் சயன்ஸ் ஒரு உயிருள்ள தேவதை என்று நினைக்கவில்லையே என்றால், எல்லா உயிர்களுக்கும் மேலே ஒரு பேருயிர் இருக்கிறதோ, இல்லியோ? அத்தனை கலை, ஞானம், கார்யம் எல்லாவற்றுக்கும் அதுதானே மூலம்.

ஒரே ஈடுபாடாக, dedicate டாக இவர்கள் சயன்ஸுக்குத் தங்களை அர்ப்பித்துக் கொண்டிருப்பதை மெச்சி அந்தப் பேருயிரே அவர்களுடைய சிற்றறிவின் வேலைக்கு மேற்பட்ட இன்ட்யூஷணாக ஒரு உண்மையை அவர்களுக்கு தெரிவித்து விடும்.

செஸ்ஸில், கிரிக்கெட்டில் கூட டெடிகேஷன் பூர்ணமாயிருந்தால் இப்படி நடக்கலாம். ஆனால் இங்கேயெல்லாம் ஒரு உயிரின் அர்ப்பணம், மற்ற உயிர் தன்னை உயிராகத் தெரிவித்துக் கொண்டு உறவு கொண்டாட வைக்கும் பெரிய அழகு, மாதுர்ய ரஸம் ஆகியவை இருக்காது.

நித்யாநித்ய வஸ்து விவேசனம் என்று ஆராய்ச்சி பண்ணுவதிலிருந்து ஆரம்பித்து வைராக்யம், தமம், சமம், உபரதி என்றெல்லாம் போகிற சாதனை அத்தனையிலுமே ஜட வஸ்துக்கள் மாதிரி எல்லாவற்றையும் வைத்துத் தன்னையும் ஜடம் மாதிரி அடக்கி, ஒடுக்கிப் போட்டுக் கொள்வதாயிருக்கிறதே தவிர உயிரோடு உறவு கொண்டாடுகிற ரஸம் இல்லை.

அந்த வழி ஒரே dry -ஆகத் தான் தெரிகிறது. அப்படியே போனால் பௌத்தம் சொல்கிற சூன்யத்தில்தான் முடியும். வேதாந்தம் சொல்கிற ப்ரம்மமோ சூன்யமில்லை, அது பூர்ணம். அப்படியே ரஸமாயிருப்பது. உபநிஷத்தே சொல்லி யிருக்கிறது, ரஸ மயமான அதை அடைந்து ஜீவன் ஆனந்த மயமாகிறான் என்று.

உயிர் மயமாக இருக்கப்பட்ட சித் வஸ்து அது. சிதானந்த ரஸம், சிதானந்த பூர்ணம் என்றெல்லாம் சொல்வது. அப்படிப்பட்ட உயிராக அதை நினைத்து, அது நம்மோடு உறவு ஏற்படுத்திக் கொண்டு தன்னிலேயே கரைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு ஊட்டவே இங்கே பக்தியைக் கொண்டு வந்து வைத்தது. Dry -ஆன சாதனை க்ரமத்திற்கு ஜலம் பாய்ச்சி குளுகுளு பண்ணவே பக்தி.

முன்னே dry -ஆக வைத்ததும் நியாயம்தான். காயப் போட்டு அப்புறமே மருந்து கொடுக்கிற சிகிச்சை முறை உண்டு. பயிர்களில் கூடச் சிலவற்றுக்குத் தண்ணீரே விடாமல் வாடப் போட்டு அப்புறமே தண்ணீர் விட்டு அவற்றை ஒரே கிளுகிளுவென்று வளரப் பண்ணுவதுண்டு. அப்படித்தான் இங்கேயும்.

மனசிலேயும், புத்தியிலேயும் அகங்காரத்திற்கு ஆகாரமாகவே எண்ணங்களும் உணர்ச்சிகளும் தீர்மானங்களும் தோன்றிக் கொண்டிருக்கிற நிலையிலேயே நாம் இருந்து வருவதால் அந்த ஆகாரத்தைப் போடாமல் காய dry, பண்ணித்தான் ஆகணும்.

அப்படி ஆக்கியதாலேயே அப்புறம் அகங்காரத்தை இன்னொன்றுக்கு ஆகாரமாகக் கொடுக்கக் கூடிய அன்பு உண்டாகும். அப்போது அதைப் பேருயிர் அல்லது ஒரே உயிரான பிரம்மத்திடம் பக்தியாக ஆக்கிவிட வேண்டும்.

பிரம்மம் என்கிற ஆத்மாவிடம் பக்தி, ஸகுணமாகக் கொஞ்சம் ஈச்வரனிடம் பக்தி, குருபக்தி, இன்னும் இன்னொரு முக்கியமான விஷயத்திலும் பக்தி வைக்க வேண்டும். என்னவென்றால், அப்புறம் மஹா வாக்ய மந்திரோபதேசம் வாங்கிக்கொள்ளப் போகிறோம். உபநிஷத் மற்றும் பல அத்யாத்ம சாஸ்திர விஷயமெல்லாம் ஆழமாகத் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

இந்த மந்திரங்கள், தத்வார்த்தங்கள் எல்லாமும்கூட உயிரோடு இருக்கிறவை என்பதைப் புரிந்து கொண்டு ஏதோ எழுத்து, எழுத்தின் வழியாகத் தெரிந்து கொள்ளும் விஷயம் என்று மட்டும் இவற்றை நினைக்காமல், இவையெல்லாம் ஜீவனோடு தெய்வமாக இருக்கிறவை; விக்ரஹ ரூபம் மாதிரி இதெல்லாமும் ப்ராண ப்ரதிஷ்டையான அக்ஷர ரூபம் என்று புரிந்துகொண்டு அவற்றோடும் உறவு கொண்டாடும் முறையில் ப்ரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவையும் நம்மை இல்லாமல் கரைக்கிற இடத்திற்குக் கொண்டு விடுகிறவை என்று அன்போடு உறவு கொண்டாடி, பக்தி பண்ண வேண்டும். குரு உபதேசித்து, அப்புறம் நாம் மனனமும் த்யானமும் பண்ண வேண்டிய வேதாந்த தத்வங்கள் லோகத்தில் தப்பாகச் சொல்கிறாற் போல் dry philosophy (வறட்டு வேதாந்தம்) இல்லவேயில்லை.

உயிருள்ள மூர்த்திகளுக்குச் சமதையாக இருக்கிறவை என்று புரிந்துகொண்டு பக்தியுடன் அப்யாஸிக்க வேண்டும். இதுவரைக்கும் dry -யாகச் சாதனை பண்ணி வந்த நாம் இனிமேலே வரப்போகும் மூன்றாம் கட்ட சாதனாங்கங்களான ச்ரவண, மனன, நிதித்யாஸனங்களை குளுகுளுவென்று பக்தியோடு பண்ண வேண்டும்.

இனிமேல் முதலில் பண்ண வேண்டியது சந்நியாஸம் என்று கவனித்தோமோனால் இப்போதுதான் ரொம்ப dry கட்டமென்று தோன்றும். ஆனால் மாறாக இப்போதுதான் ரொம்பக் கசிவு, அப்படியே 'சொத சொத' ஆரம்பிக்கப்போகிறது. வெளிப்பார்வைக்கும், வெளி லோகத்தைப் பொறுத்த மட்டிலும் ஒரே dry தான்.

மாயாலோகமென்று அப்படியே அந்த 'வெளி'யைத் தள்ளி விடுகிற கட்டந்தான். ஆனால் உள்ளுக்குள் ஜிலு ஜிலு வென்று ப்ரேமாம்ருதம். வெளியிலே காய்ந்த மட்டை. உள்ளே இளநீர். அந்த ப்ரேமாம்ருதத்தை எல்லாவற்றுக்கும் உள்ளேயுள்ள வஸ்துவிடம் சுரக்க வேண்டிய கட்டமாக இதை ஆசார்யாள் கருணையோடு காட்டிக் கொடுத்திருக்கிறார்.

(தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி)

எதனிடம் ஈடுபாடு வைக்கிறோமோ அது உயிருள்ள ஒன்று. அதிலே நம் சிற்றுயிர் ஈடுபாடு என்ற பெயரில் உறவு கொண்டாடுகிறது. (தெய்வத்தின் குரல்)

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator